கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-320

திருமண வரமருளும் சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

24.4.22 ஞாயிறு

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்

கொசப்பேட்டை 

சென்னை-600012

இருப்பிடம்: சென்ட்ரல் 3.6 கிமீ, எழும்பூர் 3.2 கிமீ, கோயம்பேடு 9.3 கிமீ

தொலைப்பேசி எண்: 044-26623216


மூலவர்: கந்தசுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

அருளாளர்கள்: பாம்பன் சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

வேறு பெயர்கள்: குயவன்பேட்டை, சண்முக கோட்டம், சண்முக ஞானபுரம்  


தல மகிமை: 

சென்னை மாநகரில் உள்ள புரசைவாக்கத்தின் ஒரு பகுதியான கொசப்பேட்டையில் மிகப் பழமையான கந்தசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.  மண்பானைகள் தயாரிப்பதற்குப் பெயர் பெற்ற இப்பகுதி குயவர் பேட்டை என பெயர் பெற்று பின்னர் கொசப்பேட்டை என மறுவியது. இன்றும் விநாயக சதுர்த்தி சமயத்தில் களிமண் பிள்ளையார்களும் நவராத்திரியில் கொலுப்பொம்மைகளும் தயாரிக்கப்படுகின்றன.


ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் இக்கோவிலின் முருகப்பெருமானின் மீது பாடிய பாடல்கள் கல்வெட்டு வடிவில் உற்சவர் மண்டபத்தில் உள்ளன.  கல்வெட்டுகள் மற்றும் பாம்பன் சுவாமிகளின் பாடல்களின் படி இந்தக் கோவில் சண்முக கோட்டம் என்றும், சண்முக ஞானபுரம் என்றும் அழைக்கப்பட்டது. கோவில் எதிரே உள்ள சரவணப் பொய்கை திருக்குளம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் பிப்ரவரி 9, 1970 அன்று திறந்து வைக்கப்பட்டது.


இந்த கோவிலின் உற்சவரும், ஜார்ஜ் டவுன் கந்த கோட்டம் கந்தசுவாமி கோவிலின் உற்சவரும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரைப் போலவே இத்திருத்தல உற்சவரும் மிகவும் ஆற்றல் மிக்கவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


வைகாசி விசாகம் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவின் போது ஹோமம், லட்சார்ச்சனை, சிறப்பு அலங்காரம், பூஜைகள், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். பங்குனி கிருத்திகையில் ஊஞ்சல் உற்சவம் இக்கோவிலின் சிறப்பு. இக்கோவிலுடன் இணைந்துள்ள ஆதி மொட்டையம்மன் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.  


தலவரலாறு:

இக்கோவில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. மேலும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் முயற்சியால் ராஜகோபுரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, 1941 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் 2000, 2015-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.   

  

தல அமைப்பு:

திருக்கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் கந்தசுவாமி அழகிய தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். செவ்வாய் தோறும் விளக்கேற்றி, முருகப்பெருமானை வேண்டி வந்தால், திருமணத்தடை அகன்று திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு கிட்டும். வேண்டியவையெல்லாம் நிறைவேறுகின்றன. காசி விஸ்வநாதர் தனி சந்நிதியில் அமர்ந்து அருளுகின்றார். கந்தசுவாமி மற்றும் காசி விஸ்வநாதர் சந்நிதிகள் விமானங்களுடன் கிழக்கு நோக்கி நேர்கோட்டில் உள்ளன என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு. காசி விசாலாக்ஷி தெற்கு நோக்கி இருக்கிறார்.


அறுபடை வீடு முருகப்பெருமான் உருவங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமஞ்சனம் படங்கள் உற்சவர் முன் மண்டபத்தில் உள்ளன.  அர்த்த மண்டபத்தில், விநாயகர், நால்வர், வீரபாகு ஆகியோர் அருள்கின்றனர். சிவப்பெருமான் சந்நிதியின் கோஷ்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்கின்றனர். 


திருவிழா

வைகாசி விசாகம் (10 நாள்), கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், பங்குனி கிருத்திகை, சித்ரா பவுர்ணமி, ஆரூத்ரா தரிசினம், பிரதி கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், செவ்வாய் 


பிரார்த்தனை:

திருமணம் வேண்டி, குழந்தைப்பேறு வேண்டி, வேண்டுவன நிறைவேற

 

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம், திருப்பணி பொருளுதவி


திறக்கும் நேரம்:

காலை 6.30-11.30 மாலை 5-.30 


சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமியை மனமுருகி வணங்கி வந்தால் வேண்டுவன எல்லாம் நிறைவேற்றுவார்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - திருமண வரமருளும் சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி



படம் 2 - வேண்டுவன எல்லாம் நிறைவேற்றும் சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்