கோவில் 564 - தென் காளஹஸ்தி தேனி உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் உபகோவில்

 🙏🙏  

தினம் ஒரு முருகன் ஆலயம்-564

ராகு, கேது தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் தென் காளஹஸ்தி தேனி உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் உபகோவில்

24.12.2022 சனி

அருள்மிகு காளத்தீஸ்வரர்.திருக்கோவில்

தென் காளஹஸ்தி

உத்தமபாளையம்-625533

தேனி மாவட்டம்

இருப்பிடம்: தேனி 30 கிமீ


மூலவர்: காளத்தீஸ்வரர்

அம்மன்: ஞானாம்பிகை

நாயகர்: முருகப்பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: செண்பக மரம்

தீர்த்தம்: உத்தரவாஹினி 


தலமகிமை:

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகில் காளத்தீஸ்வரர் கோவில்   அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள காளத்தீஸ்வரரை வழிபட்டால் காளஹஸ்தி திருக்காளத்தீஸ்வரரை வணங்கிய பலன் கிடைக்கும் என்று சைவ பெருமக்கள் நம்புகின்றனர். 332 ஆண்டுகள் பழமையான இக்கோவில் தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படுவது இதன் தனிச்சிறப்பு. இங்கு ராகு-கிம்ஹிசை, கேது-சித்ரகால தேவி தம்பதியராக அருள் பாலிக்கின்றனர். ஞானாம்பிகை அம்பாளாக அருளுகின்றாள்


முருகப்பெருமான் அருள்பாலித்த இடத்திலேயே காளத்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டப்பட்டது என்பது தல சிறப்பாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் காளத்தீஸ்வரர் சந்நிதிக்கும், ஞானாம்பிகை சந்நிதிக்கும் இடையில் இருப்பதால் ஈசன் சோமஸ்கந்தராகக் காட்சியளிக்கிறார். நந்திக்கு மேல் காலச் சக்கரம் தமிழ்நாட்டிலேயே 2 தலங்களில் மட்டுமே அமைந்துள்ளன. ஆவுடையார் கோவிலில் அமைந்துள்ள அந்த ராசி நட்சத்திர மண்டல வாஸ்து சக்கரம் இங்கேயும் (தென் காளஹஸ்தி) அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். 


ஞானாம்பிகை அம்மன் மற்றும் ராகு கேது தம்பதியரை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள சுரதேவருக்கு ரசம் சாதம் படைத்து வழிபட்டால், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ண நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் சுவாமிக்கும் கண்ணப்ப நாயனாருக்கும் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் கண் நோய்கள் நீங்கும்.

 

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடக்கும் கால சர்ப்ப தோஷ பரிகார ஹோமத்தில் பங்கு  கொண்டு வழிபடுவதுடன், ஹோமம் முடிந்ததும் தரப்படும் (ஹோமத்தில் கிடைக்கும்) ரோக சாம்பல், தேங்காய், வாழைப்பழம், நவதானியம், ராகு கேதுவின் வெள்ளித் தகடுகள் ஆகியவற்றை எடுத்துச்சென்று அருகில் உள்ள முல்லையாற்றில் இடவேண்டும். இதனால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பாம்பு மற்றும் விஷப் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், பெளர்ணமி தினங்களில் இந்தக் கோவிலுக்கும் வந்திருந்து, இங்கு அருள்பாலிக்கும் விஷராஜா என்ற தெய்வத்துக்கு வஸ்திரம் அணிவித்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் விஷத்தின் பாதிப்பு நீங்கி விரைவில் குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:

பிச்சை கணக்கர் என்பவர் ஆந்திர மாநிலம் திருக்காளஹஸ்தியில் எழுந்தருளியிருக்கும் காளத்தீஸ்வரரின் தீவிர பக்தராக இருந்தவர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தன்று திருக்காளஹஸ்தி சென்று காளத்தீஸ்வரரை வழிபடுவது இவரது வழக்கம். சில ஆண்டுகள் கழித்து முதுமைப் பருவமெய்திய பிச்சைக் கணக்கரால் திருக்காளஹஸ்தி சென்று இறைவனை வழிபட இயலவில்லை. இதனால் மனம் உடைந்த பிச்சை கணக்கர் பல நாள்கள் உண்ணாவிரதம் இருந்து தனக்கு அருள் பாவிக்குமாறு இறைவனை வேண்டினார். பிச்சை கணக்கரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட இறைவன் அவரின் கனவில் தோன்றி காட்டூரில் அமைந்துள்ள வில்வ வனத்தின் வெள்ளை அரளி பூ பூத்திருக்கும் மரத்தடியில் நீ என்னைத் தரிசிக்கலாம் என்றும், நீ விரும்பும் இடத்தில் கோவில் அமைத்து என்னை வணங்கலாம் என்றும் கூறி மறைந்தார். மறுநாள் காலை தான் கண்ட கனவினை பிச்சை கணக்கர் காட்டூர் மக்களிடம் கூறிய பொழுது அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். வில்வ வனம் சென்று ஊர் மக்கள் அனைவரும் இறைவனை லிங்க வடிவில் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். வில்வ வனத்தில் இருந்து இறைவனை ஊருக்குக் கொண்டு வரும் வழியில் வண்டியின் அச்சு முறிந்தது. ஊர் மக்கள் எவ்வளவோ முயன்றும் வண்டியை அவ்விடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அப்பொழுது முருகப்பெருமான் ஆறுமுகர் திருவுருவில் எழுந்தருளி மக்களுக்கு அருள் வழங்கினார். முருகப்பெருமான் அருள்பாலித்ததால் அவ்விடத்திலேயே (உத்தமபாளையம்) காளத்தீஸ்வரருக்கு கோவில் அமைத்தனர். 


காளத்தீஸ்வரருக்கு அருகே அம்மனுக்கும் கோவில் கட்ட வேண்டும் என ஊர் மக்கள் நினைத்து பிச்சைக் கணக்கரிடம் வேண்டுகோள் வைத்தனர். அவரும் மனமுருகி இறைவனை வேண்டினார். ஒருநாள் பிச்சையின் கனவில் தோன்றிய இறைவன் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் பொழுது அம்மன் சிலை கிடைக்கும் என்று கூறி மறைந்தார். கடவுளின் அனுக்கிரகத்தால் ஞானாம்பிகை அம்மன் சிலையும் முல்லையாற்றில் கிடைத்தது. திருகாளத்தீஸ்வரர் சந்நிதி அருகே ஞானாம்பிகை அம்மனுக்குக் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.


தல அமைப்பு:

காளஹஸ்தி போலவே இத்தலத்தில் அருள்பாலிக்கும் காளத்தீஸ்வரரும் வாயு நிலையில் இருப்பதாகவே கருதுகின்றனர். எனவே இவருக்கு இங்கு “வாயுலிங்கேஸ்வரர்” என்ற பெயரும் உண்டு. வாயுவைத் தொடமுடியாது என்பதால் இவரைத் “தீண்டாத்திருமேனியன்” என்றும் அழைக்கின்றனர். வேடவரான கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் கண்ணப்பருக்கு தனிச்சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கண்ணப்பர் கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார். சிவராத்திரியன்று இரவில் காளத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன. கண் பார்வைக் குறைபாடு மற்றும் கண் தொடர்பான நோயுடையவர்கள் இச்சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கப் பெறலாம். 


அம்பாள் ஞானாம்பிகை தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை சந்நிதிகளுக்கிடையே சண்முகர் தனிச்சநிதிதி கொண்டிருக்கிறார். இதனால், இந்தக் கோவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் அம்மன் சநிதிதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. இதனருகில் அமர்ந்து கொண்டால், அம்பிகை, முருகப்பெருமான் இருவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும். இப்படி தாயையும், மகனையும் ஒன்றாகக் காண்பது மிக அரிது என்கின்றனர். இதனால் இக்கோவில் தாய், மகன்களின் ஒற்றுமைக்கான வழிபாட்டுத் தலமாகவும் இருக்கிறது. மகனைப் பிரிந்து வாழும் பெற்றோர் தங்கள் மகனுடன் ஒன்று சேர்ந்து வாழ இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

பெரும்பாலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் சந்நிதியில் இடது பக்கம் மயிலின் தோகையும், வலது பக்கம் தலையும் அமைந்திருக்கும். இக்கோவிலில் தனிச் சிறப்பாக இடக்கைப் பக்கம் மயிலின் தலையும் வலப்பக்கம் தோகையுமாகக் காட்சி அளிப்பது மயூர வாகனம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே லிங்கத் திருமேனியில் சிறிய அளவில் 1008 லிங்கங்களுடன் காட்சிதரும் சகஸ்ரலிங்க தரிசனம் விசேஷம். 


சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ராகு பகவான் சிம்ஹி தேவியுடனும், கேதுபகவான் சித்ரலேகாவுடனும் அடுத்தடுத்த சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். மேலும் ராஜவிநாயகர், சரபேஸ்வரர், பைரவர், சோமாஸ்கந்தர், லிங்கோத்பவர், குபேரன், குபேரலட்சுமி, 63 நாயன்மார்கள், சனீஸ்வரர் ஆகியோரும் அருள்கின்றனர். இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் வடக்கு நோக்கி கோவிலில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.  கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கவ்மாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்ட தேவி, ஞானாம்பிகை என்று எட்டு அம்பிகைகளும் ஒரே கோவிலில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது.


திருவிழா:

சித்திரை திருக்கல்யாணம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, பவுர்ணமி,  முருகனுக்குரிய விசேஷ தினங்கள்


பிரார்த்தனை:

ராகு, கேது தோஷ நிவர்த்தி பெற சர்ப்ப தோஷம் நீங்க, பார்வை குறைபாடு, கண் நோய்கள் குணமாக, தாய் மகன் மற்றும் பெற்றோர் மகன் ஒற்றுமை ஓங்க, கல்வி மேம்பட (சனி பகவான்), விஷக்கடி குணமாக, ஜுரம் சரியாக 


நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 7-11.30 மாலை 5-8 


சர்ப்ப தோஷம் நீக்கி அருளும் தென்காளஹஸ்தி தேனி உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் மற்றும் ஆறுமுகப்பெருமானை மனமுருக தொழுவோம்! 


வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏  



படம் 1 - 564 கண் குறைபாடுகளை குணமாக்கும் தென் காளஹஸ்தி தேனி உத்தமபாளையம் ஞானாம்பிகை சமேத காளத்திஸ்வரர்



படம் 2 - 564 தாய் மகன்கள் ஒற்றுமை ஓங்க அருளும் முருகப்பெருமான், ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வர்ர் கோவில், தென் காளஹஸ்தி உத்தேதமபாளையம்னி  மாவட்டம்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்