கோவில் 206 - கேரளா சங்கனாச்சேரி பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏 மறு பதிவு
தினம் ஒரு முருகன் ஆலயம்-206
முருகப்பெருமானின் வேல் தலைகீழாக இருக்கும் கேரளா சங்கனாச்சேரி பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில்
31.12.21 வெள்ளி
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
பெருன்னா-686102
சங்கனாச்சேரி
கோட்டயம் மாவட்டம்
கேரளா
இருப்பிடம்: கோட்டயத்திலிருந்து 21 கிமீ, சங்கனாச்சேரியிலிருந்து.3 கிமீ
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
தலமகிமை:
கேரள மாநிலத்தில் இரண்டு சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில்களில் முருகனின் கூரிய வேல் தலைகீழாக பிடிக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவது, 1200 ஆண்டுகள் பழமையான சங்கனாச்சேரி பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில். இத்திருத்தலத்தில், முருகப்பெருமான் தனது வேலை தலைகீழாக பிடித்து இருப்பார். இவ்வாலயம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருன்னா என்ற ஊரில் அமைந்துள்ளது. மற்றொரு கோவிலான நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் வேல் தலைகீழாக இருக்கும்.
புராணங்களில், மதுரை மாநகரை ஆட்சி செய்வது மீனாட்சி தேவி என்று கூறுவது போல சங்கனாச்சேரியை ஆட்சி புரியும் தெய்வமாக பெருன்னா சுப்ரமணிய சுவாமி விள்ங்குகின்றார்.
சாதி வேறுபாடின்றி அனைத்து இந்துக்களுக்கும் திறக்கப்பட்ட கேரளாவின் முதல் கோவில் இதுவாகும். இதைக் கேள்விபட்ட மகாத்மா காந்திஜி கேரளாவுக்குத் தன் முதல் வருகையில், பெருன்னா கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டார்.
இவ்வாலயத்தில், தனு (மார்கழி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் ‘பள்ளிவேட்டை விழா’ சிறப்பானதாகும். இந்நாட்களில் சாக்கியார் கூத்து உள்ளிட்ட பல கேரள மரபு வழி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மலேசியா பத்துமலைத் தைப்பூசம் போன்று விமரிசையாக நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.
தலபுராணம்:
உம்பிளி மற்றும் பெருன்னா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். பெருன்னா என்னுமிடத்தில் வசித்த சாத்விக குணம் கொண்ட அந்தணர்கள் சிறந்த சிவ பக்தர்கள். உம்பிளியில் அந்தணர்கள் வாழ்ந்த மாய, தந்திர வேலைகளைச் செய்வர். இவர்கள், பெருன்னா மக்களின் மீது பொறாமை கொண்டு சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். அப்போது பெருன்னா ஊர் மக்கள் பரம்பொருள் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர்.
இவர்களின் பிணக்கைத் தீர்ப்பதற்காக இடமனா நம்பூதிரி என்பவர் பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார். அங்கு காட்சியளித்த பழனி முருகப்பெருமான், “பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்றார். அதன் படி இடமனா நம்பூதிரி ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துச் சென்று பெருன்னா கிராமத்தில் நிறுவினார். விடயம் அறிந்த உம்பிளியினர், பெருன்னா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். இதனைக் தடுப்பதற்காக இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவருடன் உம்பிளியை நோக்கிச் சென்ற போது வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. இருப்பினும் பூஜையை தொடர்ந்து செய்த இடமனா நம்பூதிரி, அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார். அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலும் அழிந்து காடாக மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.
.
சிவப்பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை, அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது.
தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார். முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர். முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது. இதனையே அவர் பெருன்னாவில் ஆலயம் அமைத்து வழிபட்டதாக நம்பப்படுகின்றது.
தல அமைப்பு:
கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், முருகப்பெருமான் ஆறடி உயரத்திலான சுப்ரமணிய சுவாமியாக கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. கோவில் வளாகத்தில் மகாகணபதி, சிவப்பெருமான், மகாவிஷ்ணு, நாகர்கள் உள்ளிட்ட பல தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கின்றன.
திருவிழா:
தனு (மார்கழி) மாதம் 10 நாள் பள்ளிவேட்டை விழா, தைப்பூசம் (மகரம்) திருவிழா
பிரார்த்தனை:
எதிரிகள் தொல்லை தீர, நோய்கள் நீங்க, வளமான வாழ்வு பெற
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், விசேஷ பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 5.30-12 மாலை 5.30-8
எதிரிகளிம் தொல்லைகளை தீர்த்து வளமான வாழ்வினை அருளும் பெருன்னா சுப்ரமணிய சுவாமியை வணங்கி மகிழ்ந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - எதிரிகளை அழிக்கும், நோய்களை குணமாக்கும் பெருன்னா சுப்ரமணிய சுவாமி
படம் 2 - முருகன் தனது வேலை கீழ் நோக்கி வைத்து அருளுகின்ற தலம் பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment