கோவில் 1242 - இலங்கை திருகோணமலை பத்தாம் குறிச்சி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1242
வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் இலங்கை திருகோணமலை பத்தாம் குறிச்சி முருகன் கோவில்
1.11.2024 வெள்ளி
அருள்மிகு பத்தாம் குறிச்சி முருகன் கோவில்
[அ/மி கடற்கரை முருகன் கோவில்]
பத்தாம் குறிச்சி [Patham kurichi]
திருகோணமலை [Trincomalee]
திருகோணமலை மாவட்டம் [Trincomalee]
கிழக்கு மாகாணம் [Eastern Province]
இலங்கை
இருப்பிடம்: திருகோணமலை பே. நி/ரயில் நிலையம் 2/1.5 கிமீ, திருகோணமலை கோணேஸ்வரர் கோவில் 4 கிமீ, திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் 3 கிமீ, வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் 58 கிமீ, மட்டக்களப்பு 136 கிமீ, முல்லைத்தீவு 119 கிமீ, அனுராதபுரம் 109 கிமீ
மூலவர்: வேல்
பழமை: 100 வருடங்கள்
தல மகிமை:
இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் தலைநகரம் திருகோணமலை மாநகர பேருந்து நிலையம்/ரயில் நிலையத்திலிருந்து 2/1.5 கிமீ தொலைவில் இருக்கும் கடற்கரைக்கு அருகில் பத்தாம் குறிச்சி பகுதியில் பிணிகள் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் பத்தாம் குறிச்சி முருகன் கோவில் அமைந்துள்ளது. தேவாரத் தலமான திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு மாநகரிலிருந்து 136 கிமீ தொலைவு அல்லது முல்லைத்தீவிலிருந்து 119 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் மாநகரிலிருந்து 109 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை பத்தாம் குறிச்சி முருகன் கோவிலை அடையலாம்.
திருகோணமலை நகரில் பத்தாம் குறிச்சி என்ற இடத்தில் முருகன் கோவில் இருக்கின்றது. குருகுல மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் பத்தாம் குறிச்சியில் கடல் அலைகள் தவழ்ந்து வந்து முருகன் கோவிலைத் தொட்டுச் செல்லும் அளவுக்குக் கடற்கரை ஓரமாக இந்தக் கோவில் அமைந்திருக்கின்றது. இருந்த போதிலும், கோவிலுக்குக் கடலால் எந்த விதமான சேதமும் ஏற்படுவதில்லை என்பது அதிசயம். இந்தக் கோவிலிக்கு அருகில் மிகவும் சிறப்பு கோணேசர் கோவில் காட்சியளிக்கின்றது. அன்னதானத்தினால் உருவாகிய ஆலயத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருவது போற்றத்தக்கது.
இக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் வருடாந்திர மஹோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி திருவாதிரை நட்சத்திரத்தில் (முதல் நாள்) கொடியேற்றம் நிகழ்வு பூஜைகளுடன் தொடங்குகிறது. தினமும் காலை 9 மணி, மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று சுவாமி உலா சிறப்பாக நடக்கின்றது. 10-ம் நாள் காலை (வைகாசி விசாகம் – பௌர்ணமி) தீர்த்தோற்சவ திருவிழா கோலாகலமாக நடக்கின்றது. 11-ம் நாள் மகா அன்னதானம் நடைபெறும், 12-ம் நாள் பிராயச்சித்த அபிஷேகம் நடக்கின்றது. கந்த சஷ்டி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் பூஜைகள் நடைபெற்று 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடக்கிறது. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்களும் மற்றும் சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
திருவெம்பாவை, நவராத்திரி, திருக்கார்த்திகை, சித்ரா பூரணை (சித்ரா பௌர்ணமி) போன்ற காலங்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகாமகத்தின் போது திருகோணமலையிலுள்ள பல ஆலயங்களிலுமிருந்து சுவாமிகள் எழுந்தருளிச் சென்று தீர்த்த கடற்கரையில் எல்லாச் சுவாமிகளோடும் நின்று மக்கள் திரளாக வந்து தீர்த்தமாடுவார்கள். இத்தினத்தில் முருகனும் சென்று தீர்த்தமாடுவார். இதுவும் திருகோணமலையில் நடைபெற்று வருகின்ற பக்திபூர்வமான சமயப் பெருவிழாவாகும்.
தல வரலாறு:
இன்று அழகிய கற்கோவிலாகக் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் சுமார் நூறு வருடங்களுக்கு முன் ஓலைக்கொட்டிலாக இருந்தது. அக்காலத்தில் இந்த இடத்தில் தொழில் செய்த மீனவர்கள் தங்களின் தொழிற் பாதுகாப்பிற்காகவும், கடலில் சென்று தொழில் செய்யும் போது ஆபத்துக்கள் ஏற்படாதிருப்பதற்காகவும் முருகனை நினைத்து இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி அதில் வேல் ஒன்றை வைத்து பூஜை செய்து வந்தனர். ஒரு பெரிய மண்டபம் அமைத்து மக்களுக்குச் சிறந்த முறையில் அன்னதானம் செய்து வந்தார்கள். இதனைப் பேரமுது என்று மக்களுக்குப் பக்தி வளர வளரக் கொட்டில் கோவிலைப் பெரிதாகக் கட்டிச் சைவக் குருக்களைக் கொண்டு நித்திய பூசை செய்வித்து வந்தார்கள். வருடா வருடம் நடைபெற்று வந்த அன்னதானமும் மிகச் சிறப்பாகப் பெருவிழாபோல் நடைபெற்றது. மேலும் மக்களுக்குப் பக்தி பெருகிய காரணத்தினால் கற்கோவில் கட்ட வேண்டுமென்ற எண்ணமும் உறுதிப்பட்டு வந்தது. இதனால் இந்த இடத்தில் குடியிருக்கும் மக்கள் முருகன் ஆலய பரிபாலன சபையை அமைத்து நிதி திரட்டி 1952-ம் ஆண்டு கோவில் திருப்பணியை ஆரம்பித்து நிறைவேற்றி 1956-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார்கள்.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலில் முருகப்பெருமானின் சிறந்த லீலைகள் அழகிய சிற்பங்களாக கோவில் முழுவதும் படைக்கப்பட்டுள்ளன. கருவறையில் வேல் ஸ்தாபிக்கப்பட்டு வேல்முருகனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மகா மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமான், முத்துலிங்க சுவாமி, நந்தகோபாலர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், அம்பாள், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மகாமகம், நவராத்திரி, திருவெம்பாவை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
வேண்டுவோருக்கு வேண்டுவன அருள, தீரா வினைகள் தீர, பிணிகள் நீங்க, கல்வி மேம்பட, செல்வம் பெருக, நல்லன நடக்க, மன மகிழ்ச்சி கிட்ட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தீரா வினைகளை தீர்க்கும் இலங்கை திருகோணமலை பத்தாம் குறிச்சி முருகனை மனமுருகி வேண்டிவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1242 வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் இலங்கை திருகோணமலை பத்தாம் குறிச்சி முருகன்
Comments
Post a Comment