கோவில் 1240 - இலங்கை திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1240
வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் இலங்கை திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவில்
30.10.2024 புதன்
அருள்மிகு முத்துக்குமார சுவாமி கோவில்
திருஞானசம்பந்தர் வீதி
திருகோணமலை [Trincomalee]
திருகோணமலை மாவட்டம் [Trincomalee]
கிழக்கு மாகாணம் [Eastern Province]
இலங்கை
இருப்பிடம்: திருகோணமலை பே. நி/ரயில் நிலையம் 1 கிமீ, திருகோணமலை கோணேஸ்வரர் கோவில் 3 கிமீ, திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் 2 கிமீ, வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் 59 கிமீ, மட்டக்களப்பு 137 கிமீ, முல்லைத்தீவு 121 கிமீ, அனுராதபுரம் 110 கிமீ
மூலவர்: வேல் & முத்துக்குமார சுவாமி & சிவலிங்கம்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தோற்றம்: 1800 (225 ஆண்டுகள்)
தல மகிமை:
இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் தலைநகரம் திருகோணமலை மாநகர பேருந்து நிலையம்/ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் இருக்கும் திருஞானசம்பந்தர் வீதியில் வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இறை அதிர்வுகள் உண்டாக்கும் திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 59 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு மாநகரிலிருந்து 137 கிமீ தொலைவு அல்லது முல்லைத்தீவிலிருந்து 121 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் மாநகரிலிருந்து 137 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலை அடையலாம்.
சிவனே குகன். குகனே சிவன் என்னும் மாபெரும் உண்மையை மெய்ப்பிக்கும் வண்ணம் இக்கோவிலில் தங்க வேல் மற்றும் வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையில் சிவலிங்கமும், மற்றொரு சந்நிதியில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியும் அருளாட்சி செய்கின்றனர். இத்திருக்கோவில் 2016-ல் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று 03.04.2016 அன்று கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்பாள் ஆலயமும், வடக்கே விஸ்வநாத சுவாமி கோவிலும் அமைந்துள்ளன.
இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தைத் தீர்த்தோற்சவ தினமாகக் கொண்டு பத்து நாட்களுக்கு வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவில் இரதோற்சவத்தையடுத்து (சிறப்பு மிக்க தேரோட்டம்) ஆலயத் தீர்த்தக் கேணியில் சுவாமி தீர்த்தமாடுவார். கந்த சஷ்டி ஆறு நாட்களும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆலயத்திலிருந்தே விரதம் அனுஷ்டிப்பார்கள். சூரசம்ஹாரம் மிகவும் விமரிசையாக நடைபெறும். மேலும் தைப்பூசம் திருக்கார்த்திகை மற்றும் மாதந்தோறும் கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சிவராத்திரி, திருவெம்பாவை திருவிழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. ஆனி உத்தரத்தில் ஆரம்பித்து ஆவணி மாதம் வரையும் கந்தபுராணம் பாராயணம் மற்றும் கந்த சஷ்டி நாட்களில் மயூரகிரிப் புராணப் பாராயணமும் நடைபெற்றுவருகின்றன.
திருகோணமலை முத்துக்குமார சுவாமியை போற்றி திருகோணமலை முத்துக்குமார சுவாமி திருப்பொன்னூஞ்சல், திருகோணமலை முத்துக்குமார சுவாமி எச்சரிக்கை, பராக்கு, லாலி, மங்களம், திருகோணமலை முத்துக்குமார சுவாமி வெண்பா போன்ற பதிகங்கள் ஆகச் சிறந்த சைவப் புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.
தல வரலாறு:
சடையர் என்ற சாது 1800-ல் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து சிறிய குடில் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தார். அவருக்குப் பின் செல்லையா பிள்ளை என்பவர் கோவிலைச் சற்றுப் பெரிதாகக் கட்டி அந்த வேலை வைத்து வழிபாடு செய்து வந்தார். அக்காலத்தில் வாழ்ந்த சண்முகம் பிள்ளை என்பவர் சிறந்த முருகபக்தர் ஆவார். செல்லையா பிள்ளையின் மறைவுக்குப்பின், இந்தியாவிலிருந்து வந்த ஒரு சந்நியாசி காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கமொன்றை சண்முகம் பிள்ளையிடம் கொடுத்து "நீ வழிபட்டு வரும் ஆலயத்தில் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்" என்று வேண்டிக் கொண்டார். நானோ முருகவழிபாடு செய்பவன். சந்நியாசியோ லிங்கத்தை தந்து பிரதிஷ்டை செய்யும்படி சொல்கின்றார் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இறைவன் அவருடைய கனவில் தோன்றி, இந்த லிங்கத்தை ஏற்றுக்கொண்ட உனக்கு இஷ் டசித்திகளெல்லாம் கிடைக்க இருக்கின்றது. சிவனே குகன். குகனே சிவன் என்று அருளி லிங்கத்தை ஸ்தாபிப்பதற்குரிய மூலஸ்தானம் இதுதானென்றும், மற்றும் பரிவாரமூர்த்திகள் அமையவேண்டிய இடங்களையும், தீர்த்தக் கேணி அமைக்கவேண்டிய இடம் முதலானவற்றையும் இறைவன் அவருக்குக் காட்டிக்கொடுத்தாராம்.
அதனையடுத்து காசியிலிருந்து சந்நியாசியால் கொண்டு வரப்பட்ட லிங்கத்தை ஸ்தாபித்து, அதனுடன் வேலையும் மர்றும் பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து 1889-ம் ஆண்டு ஆனி மாதம் 10-ல் மகா கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார். சண்முகம் பிள்ளையவர்களுடைய காலத்திற்குப்பின், அவருடைய மருமகன் அம்பலவாணரும், அவருக்குப் பின் அவருடைய மருமகன் நவரத்தினம் அவர்களும் முத்துக்குமார சுவாமி கோவிலைப் பராமரித்து வந்தார்கள்.. நவரத்தினத்திற்குப் பின் அவருடைய மூத்த மகன் இராஜவரோதயம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் ஆலயப் பராபரிப்புக்கு உரியவரானார். இராஜவரோதயம் சிறுவனாயிருந்ததால், அவர் பொறுப்பேற்கும் வரையும் அவருடைய மாமனார் திரு. லிங்கரத்தினம் என்பவர் ஆலயத்தைப் பராபரித்து வந்தார். இவருடைய காலத்தில் 06.04.1932-ல் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1942-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலக மகா யுத்தத்தில் எல்லாக் கோவில்களும் பூட்டப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆலயத்தில் மாத்திரம் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்தன என்பது இகோவிலின் சிறப்பம்சமாகும். இவர்கள் சந்நிதியினர் தொடர்ந்து கோவிலை பராமரித்து வந்த நிலையில், இவர்கள் தலைமையில் பரிபாலன சபை அமைக்கப்பட்டு, கோவிலை நிர்வகித்து வருகின்றனர். கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 25.04.1983 மற்றும் 03.04.2016-ல் கும்பாபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
தல அமைப்பு:
ஆகம அமைப்புடன் கூடிய 225 ஆண்டுகள் பழமையான இக்கோவில் கருவறையில் தங்க வேல், வெள்ளி வேல், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மற்றொரு கருவறையில் மூலவர் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், கிழக்கு நோக்கி பிள்ளையார், உற்சவ மூர்த்திகள், தண்டாயுதபாணி, சண்டிகேஸ்வரர், நாகத் தம்பிரான், பைரவர், நவக்கிரகங்கள் உல்ளிட்ட பரிவார தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம் மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவெம்பாவை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டும் வரங்களை பெற, இகபர சௌபாக்கியங்கள் கிடைத்திட, வினைகள் விலக, பிணிகள் நீங்க, திருமணத்தடை அகல, சந்தான பாக்கியம் வேண்டி, ஞானம் மேம்பட, எடுத்த காரியங்களில் வெற்றியடைய, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
இகபர சௌபாக்கியங்கள் கிடைத்திட அருளும் திருகோணமலை முத்துக்குமார சுவாமி திருவடிகள் வணங்கி போற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1240 வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் இலங்கை திருகோணமலை முத்துக்குமார சுவாமி
படம் 2 - 1240 இகபர சௌபாக்கியங்கள் கிடைத்திட அருளும் திருகோணமலை முத்துக்குமார சுவாமி
Comments
Post a Comment