கோவில் 1238 - இலங்கை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1238
கல்வி, கலைச்செல்வங்களை அள்ளித் தரும் இலங்கை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில்
28.10.2024 திங்கள்
அருள்மிகு பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில்
சரவணை கிழக்கு
சரவணை [Saravanai]
வேலணை தீவு [Velanai Island/Leiden Island]
யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]
வட மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 18 கிமீ, வேலணை 7 கிமீ, சுருவில் 4 கிமீ, அல்லைப்பிட்டி 11 கிமீ, நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 கிமீ
மூலவர்: முருகமூர்த்தி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தோற்றம்: 300 ஆண்டுகளுக்கு முன்
தல மகிமை:
இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் தலைநகரம் யாழ்ப்பாணம் மாநகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் வேலணை தீவு சரவணை கிராமத்தில் சரவணை கிழக்கு பகுதியில் கல்வி, கலைச்செல்வங்களை அள்ளித் தரும் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. வேலணை பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது சுருவி கிராமத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது அல்லைப்பிட்டி முருகன் கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து 19 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகமூர்த்தி வள்ளி, தெய்வானையுடன் அருள்கின்றார்.
இக்கோவிலில் வருடாந்திர உற்சவம் மற்றும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றன. கந்தபுராணம் பாராயாணம் 300 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் சிறப்பு நிகழ்வாகும். மேலும் முருகமூர்த்தியின் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை திருவிழாக்களும் வெகு விமரிசையாக ந்டக்கின்றன. பழங்காலம் தொட்டே மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி பூஜை, திருவெம்பாவை பஜனை ந்டைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
சரவணையூர் செந்தமிழ் புலவர் தில்லைநாதர், திருமுருக அலங்காரம், முருகமூர்த்தி திருப்பதிகம், சரவணை திருப்பள்ளம்புலம் யகமவந்தாதி, சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவூஞ்சல் போன்ற சிறந்த பதிகங்களை படைத்துள்ளார்.
தல வரலாறு:
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மை அடியார் என்ற ஆகச் சிறந்த பக்தர் மருத நிலங்கள் நிறைந்த சரவணை பள்ளம்புலத்தில் வேல் பிரதிஷ்டை செய்தும் வேல் வழிபாடு செய்து வந்தார். கந்தபுராணம் பாராயணமும் விழாக்காலங்களில் நடைபெற்ற் வந்தது. அதன் பின் முருகப்பன் சிற்றம்பலம் எனும் பக்தர் அவர் பரம்பரையில் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை சிறப்புடன் நடத்தி வந்தார். இவரது காலத்தில் கந்த சஷ்டி, மகா சிவார்த்திரி, நவராத்திரி, திருவெம்பாவை விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. பின்னர் வே. சுப்பிரமணியம் எனும் மகான் கோவில் பணிகளை திறம்பட கவனித்து வந்தார். இவர் காலத்தில் மூலஸ்தானத்தில் வேலுக்கு பதில் முருகமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தனர். மேலும்விநாயகர், பைரவர் சிலைகள் மற்றும் மண்டபங்களை நிறுவி கும்பாபிஷேகம் செய்வித்தார். பின்னர் வி. சேதுகாவலர் காலத்தில் ஆலய பரிபாலன சபை உருவாக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தை செம்மையாக நடத்தி வந்தனர். பின்னர் நிர்வாகத்தை ராமச்சந்திரன் நடத்தி வந்தார். 1965-ல் பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில் புகழ் பரவ ஆரம்பித்தது. 1978-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. 1990-களில் இனப்போரால் இப்பகுதி மக்கள் குடிபெயர்ந்தனர். கோவில் பூஜைகள் தடைபட்டன. 1997-ல் மக்கள் திரும்ப ஆரம்பித்தனர். கோவில் பூஜைகளும் நடைபெற்றன. பின் கோவில் திருப்பணிகள் நடைபெற்று 07.05.199-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் கருவறையில் மூலவராக ஆதியில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு முருகன் அருள்பாலித்து வந்தார். தற்போது மூலஸ்தானத்தில் முருகமூர்த்தி மூலவராக வீற்றிருந்து வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவ மூர்த்திகளும் வசந்த மண்டப்பத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி பூஜை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கல்வி சிறக்க, கலைச்செல்வங்களை பெற, வாழ்வில் மேன்மையடைய, காரியங்கள் வெற்றியடைய, வினைகள் தீர, திருமணம் நடைபெற, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வாழ்வில் மேன்மையடைய அருளும் இலங்கை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1238 கல்வி, கலைச்செல்வங்களை அள்ளித் தரும் இலங்கை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி
படம் 2 - 1238 வாழ்வில் மேன்மையடைய அருளும் இலங்கை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில்
Comments
Post a Comment