கோவில் 1211 - இலங்கை வவுனியா கந்தசுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1211

வந்தோரை வாழ வைக்கும் இலங்கை வவுனியா கந்தசுவாமி கோவில்

1.10.2024 செவ்வாய்


அருள்மிகு கந்தசுவாமி கோவில்

வவுனியா [Vavuniya]

வவுனியா மாவட்டம் [Vavuniya]

வடக்கு மாகாணம் [Northern Province]

இலங்கை

இருப்பிடம்: வவுனியா 1.5 கிமீ, முல்லைத்தீவு 75 கிமீ, கிளிநொச்சி 79 கிமீ, மன்னார் 79 கிமீ, யாழ்ப்பாணம் 139 கிமீ

மூலவர்: கந்தசுவாமி (வேல்) & சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வில்வமரம்

தோற்றம்: 1890


தல மகிமை:

இலங்கை வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டம் தலைநகரம் வவுனியா மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் வந்தோரை வாழ வைக்கும் வவுனியா கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. முல்லைத்தீவு நகரிலிருந்து 75 கிமீ தொலைவு அல்லது கிளிநொச்சி நகரிலிருந்து 79 கிமீ தொலைவு அல்லது மன்னார் நகரிலிருந்து 79 கிமீ தொலைவு அல்லது யாழ்ப்பாணம் மாநகரிலிருந்து 139 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் வவுனியா நகரில் உள்ள கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக வேல் (கந்தசுவாமி) மற்றும் சுப்பிரமணிய சுவாமி தேவியருடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். வவுனியா கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 12.9.1999-ல் நடைபெற்று, கோவில் மலர் வெளியிடப்பட்டது.


இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைப்பூசத்தையொட்டி வருடாந்திர மஹோற்சவம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றம் சிறப்பாக நடைபெறும். தினசரி காலை, மாலை அபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சிறப்பு தீபாராதனைகள், காலை சுவாமி உள்வீதி உலா, மாலை வெளிவீதி உலா என விமரிசையாக நடைபெறுகின்றன. 7-ம் நாள் வேட்டைத் திருவிழா, 8-ம் நாள் சப்பரத் திருவிழா, 9-ம் நாள் தேரோட்டம், 10-ம் நாள் தீர்த்தோற்சவ திருவிழா என கோலாகலமாக தை மாத திருவிழா நடைபெறும். ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகுச் சிறப்பாகக் நடைபெறுகிறது. ஏராளமான வவுனியா வாழ் தமிழர்கள் இக்கோவிலில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கின்றனர். தினசரி பூஜைகள், 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் கந்தப்பெருமானின் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

வவுனியா நகரின் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பெருமை வாய்ந்த கோவிலாக விளங்குவது வவுனியா கந்தசுவாமி கோவிலாகும். திரு நா கோவிந்தப்பிள்ளை அவர்களின் கூற்றுப்படி 1890-ல் இவ்வாலயம் கட்டப்பட்டது. இவரது தாய் மாமன் ஐயம் பிள்ளை வேலுப்பிள்ளை என்ற சந்நியாசி ஒரு சமயம் கதிர்காமம் கந்தனை தரிசிக்க சென்றார். அன்று இரவு முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி “ நீ திருச்செந்தூருக்கு செல். அங்குள்ள குருக்கள் ஒருவர் வேல் ஒன்று தருவார். அதை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்” என்று கூறினார். அதன்படி, திருச்செந்தூர் சென்று வேல் ஒன்ற பெற்று வவுனியா நகரில் மையப்பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். சிறிய ஆலயம் 1890-ல் எழுப்பப்பட்டது. அவரது வழி வந்தவர்கள் கோவிலை நிர்வகித்து கோவிலை பெரியதாக கட்டி 1949-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1980-களில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 7.2.1982-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1990-ல் ஏற்பட்ட இனக்கலவரங்களால், வவுனியா வாழ் தமிழர்கள் குடிபெயர்ந்தள் கந்தசுவாமி கோவில் பணிகள் தடைப்பட்டன. ஆனால் தினசரி பூஜைகள் இக்கடின காலத்தாலும் கோவில் குருக்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கோவில் திருப்பணிகள் 1996 முதல் மேற்கொள்ளப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் 12.9.1999-ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இக்கோவிலில் நெடிய கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் அழகிய வேல் வீற்றிருந்து வேலாயுதமூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மற்றொரு கருவறையில் சுப்பிரமணிய சுவாமி (கந்தசுவாமி) மூலவராக வீற்றிருந்து வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வசந்த மண்டபத்தில் உற்சவர் ஆறுமுக சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். மேலும் இகோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, முத்துக்குமார சுவாமி, சந்தான கோபாலர், மகாலட்சுமி, ஈசன், முத்துமாரி அம்மன், பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தை மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

நல்வாழ்வு வேண்டி, வல்வினைகளை வேரறுக்க, இன்னல்கள் களைய, மன மகிழ்ச்சி வேண்டி, பகைமை ஒழிய, ஒற்றுமை ஓங்கிட


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வல்வினைகளை வேரறுக்கும் இலங்கை வவுனியா கந்தசுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1211 வந்தோரை வாழ வைக்கும் இலங்கை வவுனியா கந்தசுவாமி (வேல்)

படம் 2 - 1211 வல்வினைகளை வேரறுக்கும் இலங்கை வவுனியா கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி உற்சவ மூர்த்திகள்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்