கோவில் 1209 - இலங்கை வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்

🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1209

ஆனந்த வாழ்வு தரும் இலங்கை வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்

29.9.2024 ஞாயிறு


அருள்மிகு ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்

ஆறுமுகத்தான்புதுக்குளம் [Arumugathanpudukkulam]

வவுனியா மாவட்டம் [Vavuniya]

வடக்கு மாகாணம் [Northern Province]

இலங்கை

இருப்பிடம்: வவுனியா 25 கிமீ, முல்லைத்தீவு 63 கிமீ, கிளிநொச்சி 67 கிமீ, மன்னார் 108 கிமீ, யாழ்ப்பாணம் 126 கிமீ

மூலவர்: கந்தசுவாமி (வேல்)

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டம் தலைநகரம் வவுனியா மாநகரிலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் ஆனந்த வாழ்வு தரும் ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. முல்லைத்தீவு நகரிலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது கிளிநொச்சி நகரிலிருந்து 67 கிமீ தொலைவு அல்லது மன்னார் நகரிலிருந்து 108 கிமீ தொலைவு அல்லது யாழ்ப்பாணம் மாநகரிலிருந்து 126 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் வவுனியா மாவட்டம் ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவிலை அடையலாம். இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வேலாயுதமூர்த்தியாக (கந்தசுவாமி) இக்கோவில் கும்பாபிஷேகம் 2018-ல் நடைபெற்றது.


இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வருடாந்திர மஹோற்சவம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், தினசரி பூஜைகள், மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பரத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தோற்சவம், திருக்கல்யாணம், திருவூஞ்சல், பூங்காவனத் திருவிழா, பைரவர் பூஜை, தினசரி அன்னதானம் என கோலாகலமாக திருவிழா நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் நடைபெறும். தினசரி சிறப்பு பூஜைகள், 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம், அன்னதானம் என சிறப்பாக நடக்கின்றன. முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் மகா சிவராத்திரி (4 கால பூஜை), நவராத்திரி (9 நாட்கள்), விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1, சித்ரா பௌர்ணமி, தைப்பொங்கல், தீபாவளி, மார்கழி பூஜை போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

1958-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் வடமத்திய மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வளமான வணிக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன. பண்டிதமணி திரு சி.சின்னையா ஆசிரியர் அவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்த பலரையும், ஆறுமுகத்தான்புதுக்குளத்தின் அண்டைக் கிராமங்களில் வாழ்ந்த பலரையும் சேர்த்து இங்கு குடிசைகள் அமைத்து, சிதிலமடைந்த பழைமையான கந்தசுவாமி ஆலயத்தின் இடிபாடுகளை நீக்கி புதிதாகக் கட்டி, 1962-ம் ஆண்டு கும்பாபிஷேக செய்வதற்கு பேருதவி புரிந்தார். பின்னர் பரிபாலனசபை பரிந்துரையின் படி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2018-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் வேல் பிராதான மூர்த்தியாக கந்தசுவாமியாக/வேலாயுதமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிர௳ணிய சுவாமி உற்சவராக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், ஆத்திமோட்டை பிள்ளையார், சிவபெருமான், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆவணி மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1, சித்ரா பௌர்ணமி, தைப்பொங்கல், தீபாவளி, மார்கழி பூஜை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

ஆனந்த வாழ்வு வேண்டி, வேண்டிய வரங்களை பெற, வினைகள் நீங்க, பிணிகள் போக்க, வாழ்வு மேம்பட, தொழில் சிறக்க, ஞானம் சிறக்க, தோஷங்கள் விலக, துன்பங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி யை மனமுருக வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1209 ஆனந்த வாழ்வு தரும் இலங்கை வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி


படம் 2 - 1209 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி (வேல்)



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்