கோவில் 1208 - இலங்கை மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1208
புரட்டாசி மாதம் பிதிர் கடனை செலுத்த அருளும் இலங்கை மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி முருகன் கோவில்
28.9.2024 சனி
அருள்மிகு சிவசக்தி முருகன் கோவில்
[திருநீற்றுக்கேணி சிவசக்தி முருகன் கோவில்]
களுதாவளை [Kalutawela]
மட்டக்களப்பு மாவட்டம் [Batticaloa]
கிழக்கு மாகாணம் [Easternl Province]
இலங்கை
இருப்பிடம்: மட்டக்களப்பு 26 கிமீ, கல்முனை 16 கிமீ, அம்பாறை 41 கிமீ, கொழும்பு 349 கிமீ
மூலவர்: சிவசக்தி முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் தலைநகரம் மட்டக்களப்பு மாநகரிலிருந்து 26 கிமீ தொலைவில் இருக்கும் களுதாவளை கிராமத்தில் புரட்டாசி மாதம் பிதிர் கடனை செலுத்த அருளும் களுதாவளை சிவசக்தி முருகன் கோவில் அமைந்துள்ளது இந்த சிறப்பு மிக்க ஆலயம் திருநீற்றுக்கேணி சிவசக்தி முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கல்முனை நகரிலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது அம்பாறை நகரிலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரிலிருந்து 349 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை சிவசக்தி முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் சிவசக்தி முருகன் வள்ளி, தெய்வானை சமேதராகஅருளாட்சி புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 17.06.2016-ல் நடைபெற்றது.
வெற்றிலை மற்றும் செந்நெல் பயிர்களும் விளைகின்ற பரந்து விரிந்துள்ள பழம் பெரும் கிராமமான களுதாவளையின் வடமேற்கு மூலையில் சுயம்புலிங்கப் பிள்ளையாரும், கிராமத்தின் தெற்கே களுதாவளை சிவசக்தி முருகனும் களுதாவளைக் கிராமத்தின் இரு கண்களாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர். இத் தலத்தின் கங்கையிலே திருநீறு பிரசாதம் கிடைப்பதால் திருநீற்றுக்கேணி சிவசக்தி முருகன் என்றும் அழைக்கப்படுகின்றது அத்துடன் காடுகள் நிறைந்து காணப்பட்டதால் காட்டுக் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. 1990-களின் யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் வீடு விட்டு அகதிகளாக வந்த பலருக்கும் தங்க இடம் தந்து, உண்ண உணவு கொடுத்து பாதுகாத்த புனித தலம் இது.
திருநீற்றுக்கேணி சிவசக்தி முருகன் கோவில் வருடாந்திர மஹோற்சவம் ஆடி திருவோணத்தையொட்டி கதிர்காமத் திருவிழாவை போன்றே ஆடித் திருவிழா 10 நாட்கள் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றம் நடந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் இரு வேளை அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று சுவாமி திரு வீதிஉலா நடைபெறுகிறது. 9-ம் நாள் சிறப்பு பூஜைகள், வேட்டைத் திருவிழா, சுவாமி வீதிஉலா (வள்ளி, தெய்வானை சமேத சிவசக்தி முருகன், விநாயகர், சிவபெருமான்-பார்வதி முத்தேர்/சப்பரம்) நடைபெறும், 10-ம் நாள் தீர்த்தோற்சவம், பொன்னூஞ்சல், சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியிறக்கம் நிகழ்வு நடைபெறும். 11-ம் நாள் பூங்காவன திருவிழாவும், 12-ம் நாள் பைரவர் பூஜையும் சிறப்பாக நடைபெறும். களுதாவளை வாழ் சைவ பெருமக்களும், மட்டக்களப்பு வாழ் தமிழர்களும் கலந்துக் கொண்டு வழிபட்டு, தினசரி நடைபெறும் அன்னதானத்தில் கலந்துக்கொள்வர். கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முதல் 6 நாட்கள் தினசரி காலை அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூர சம்ஹாரம் சிறப்புற நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்குரிய தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி நன்னாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.
தல வரலாறு:
அக்காலத்தில் களுதாவளை வாழ்ந்த கந்தப்பர் என்ற முருக பக்தர் பிரமச்சரிய வாழ்கை வாழ்ந்து வந்து முருகன் மீது பக்தியும் அளவு கடந்த அன்பும் கொண்டவராகவும் இருந்து வந்தார். ஒவ்வொரு வருடமும் கதிர்காம தலத்திற்கு யாத்திரை சென்று கந்தனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவிலே வந்து “கந்தப்பா நீ இனி கதிர்காமம் அலைய வேண்டாம். நீ இருக்கும் தென்னந் தோட்டத்திலே விக்கிரகமாக மண்ணில் புதையுண்டு இருக்கிறேன் அதை அங்கே வைத்து பூஜை செய்” என்று கூறினார். அவர் காலையில் எழுந்து கனவிலே கண்ட இடத்தை தோண்டி பார்த்தபோது புதையுண்டிருந்த முருகன் சிலையை எடுத்து பசும் சோலையாக விளங்கும் இத்தலத்திலே வைத்து வணங்கி வந்தார். அவரது தம்பி சின்னத்தம்பி என்பவரும் இணைந்து அவ்விடத்தில் நாவல் குழைகொண்டு கொத்து பந்தல் இட்டு ஆலயம் அமைத்து வழிபட்டனர். பின்னர் களுதாவளை வாழ் தமிழர்களால் இக்கோவில் மேம்படுத்தப்பட்டது. 2016-ல் இத்திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 17.06.2016-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தேறியது.
தல அமைப்பு:
இவ்வாலயம் ஆகம முறைப்படி மூர்த்தி, தலம், தீர்த்தம் என முச்சிறப்புகளும் வாய்ந்ததாகும். கொவிலினுள் கொடிக்கம்பம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் சிவசக்தி முருகன் கையில் வேலோடு வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் மேலும் விநாயகர், சிவபெருமான், பார்வதி, விஷ்ணு, பைரவர் நவக்கிரகம் என அனைத்து பரிவாரத் தெய்வங்ளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
பிதிர் கடன் செலுத்த, வாழ்வில் திருப்பம் பெற, சந்தான பாக்கியம் வேண்டி, திருமணத்தடை அகல, நினைத்தது நடைபெற, பிணிகள் நீங்க, நோய்கள் அகல, ஒற்றுமை ஓங்கிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வாழ்வில் திருப்பம் தரும் இலங்கை மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி முருகன் திருவடிகள் பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1208 புரட்டாசி மாதம் பிதிர் கடனை செலுத்த அருளும் இலங்கை மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி முருகன்
படம் 2 - 1208 வாழ்வில் திருப்பம் தரும் இலங்கை மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி முருகன் ஆடி மஹோற்சவம் உலா
Comments
Post a Comment