கோவில் 1181 - இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1181

கவலைகள் நீக்கும் இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவில்

1.9.2024 ஞாயிறு


அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவில்

மாத்தளை [Matale]

மாத்தளை மாவட்டம் [Matale]

மத்திய மாகாணம் [Central Province]

இலங்கை

இருப்பிடம்: மாத்தளை பேருந்து நிலையம் 500 மீ, கொழும்பு 152 கிமீ, கண்டி 26 கிமீ


மூலவர்: கதிர்வேலாயுத சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை நகர மையத்தில் (மாத்தளை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ) கவலைகள் நீக்கும் கதிர்வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரிலிருந்து 152 கிமீ தொலைவு அல்லது கண்டி மாநகரிலிருந்து 26 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் நிர்வகிக்கப்படும் மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கதிர்வேலாயுத சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் இக்கோவிலுக்கு அருகில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்


ஆடிவேல் விழா கதிர்காமம் கந்தன் கோவில் திருவிழா போல் மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவிலிலும் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி கோவில் ஆடிவேல் திருவிழாவின் போது முருக பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் காவடி ஏந்தியும் வேல் ஏந்தியும் வந்து முருகனை வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாள் பக்தர்கள் காப்புக்கட்டுதல் முக்கிய நிகழ்வாகும். 3-ம் நாள் மாலை வெள்ளித் தேரில் கதிர்வேலாயுத சுவாமி வள்ளி, தெய்வானையுடன் திரு உலா வருவது சிறப்பம்சமாகும். அன்று காலை மாத்தளை முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து பால்குடம் ஊர்வலமாக வந்து கதிர்வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷகம், 108 கலசாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும், தொடர்ந்து அன்னதானம் நடக்கும். திருவிழாவின் கடைசி நாள் பைரவர் பூஜை நடைபெறும். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறும். தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி உள்வீதி உலா ந்=டைபெறும். 6-ம் நாள் சூரசம்ஹாரம் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றது 7-ம் நாள் கலச பூஜை, கதிர்வேலாயுத சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். மேலும் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட புரட்டாசி மாதம் சனிக்கிழமை சனீஸ்வர மகா பூஜை நடைபெறும். தோஷங்கள் விலக, பக்தர்கள் வழிபாடுகள் செய்வர்.


தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து மாத்தளைக்கு வந்து குடியேறிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் முருகப்பெருமானுக்கு இங்கு கதிர்வேலாயுத சுவாமி கோவிலை எழுப்பி ஆடிவேல் விழா, கந்த சஷ்டி திருவிழா என தமிழகம் போலவே அனைத்து திருவிழாக்களையும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வேல் வழிபாடு சிறப்பாக நடக்கின்றது. கருவறையில் கதிர்வேலாயுத சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

ஆடிவேல் மஹோற்சவம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கவலைகள் தீர, கேட்டது கிடைக்க, வல்வினைகள் போக்க, திருமணம் ந்டைபெற, குழந்தை பாக்கியம் வேண்டி, பிணிகள் அகல, நல்லன அருள, தோஷங்கள் நீங்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, வேல் ஏந்தி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


கேட்டதை எல்லாம் தந்தருளும் இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி திருவடிகள் பற்றி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1181 கவலைகள் நீக்கும் இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி


படம் 2 - 1181 கேட்டதை எல்லாம் தந்தருளும் இலங்கை மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்