கோவில் 1179 - இலங்கை அம்பாறை கல்முனை முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1179
மன அமைதி தரும் இலங்கை அம்பாறை கல்முனை முருகன் கோவில்
30.8.2024 வெள்ளி
அருள்மிகு கல்முனை முருகன் கோவில்
ஆர்.கே.எம் வீதி
கல்முனை [Kalmunai]
அம்பாறை மாவட்டம் [Ampara]
கிழக்கு மாகாணம் [Eastern Province]
இலங்கை
இருப்பிடம்: அம்பாறை 28 கிமீ, திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில் 36 கிமீ, மட்டக்களப்பு 42 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: ஆறுமுகப்பெருமான்
தல மகிமை:
இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கரையோர நகரமான கல்முனையில் மன அமைதி தரும் கல்முனை முருகன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு நகரத்திலிருந்து 42 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பாறை கல்முனை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சகிதம் அருள்கின்றார்.
வருடாந்திர மஹோற்சவம் இத்திருக்கோவிலில் ஆவணி அமாவாசையின் போது முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. 15 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். இதில் 6-ம் நாள் பால்குட பவனியும், 8-ம் நாள் வேட்டைத் திருவிழாவும், 10-ம் நாள் சப்பறத் திருவிழாவும், 12-ம் நாள் தேரோட்டமும், 13-ம் நாள் தீர்த்தோற்சவமும் மற்றும் கொடியிறக்கமும், 14-ம் நாள் சங்காபிஷேகமும், 15-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றன. மேலும் கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. முருகப்பெருமானின் இதர திருவிழாக்கள் பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை மற்றும் கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் சிறப்பு தீபாராதனைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததென கல்முனை முருகன் கோவில் கருதப்படுகிறது. அக்காலத்தில் வருடா வருடம் பக்தர்களுடன் கால்நடையாக கதிர்காமத்திற்கு யாத்திரை செய்து வந்த ஆறுமுகத்தான் போடி என்னும் சிறந்த பக்தர் ஒரு சமயம் பயணத்தை மேற்கொள்ளும் போது வழியில் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். இனி வரும் காலங்களில் தனது முதுமை காரணமாக யாத்திரையை இனி தொடர முடியாமல் போகும் என கவலையுற்றார்.
இதையறிந்த முருகப்பெருமானே அவரது கவலையை தீர்க்க திருவுளம் கொண்டார். அவரது பாதயாத்திரையின் போது இடைவழியில் கனவில் தோன்றிய முருகப்பெருமான் ‘நீ என்னைத் தேடி கதிர்காம பாதயாத்திரை மேற்கொள்ளாமல் உனது ஊருக்கு திரும்பச் சென்று உனது குல தெய்வமாகிய கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சமீபமாக மேலும் கோவில் கட்டி என்னை வழிபட்டால் கதிர்காமத்திற்கு வந்து வழிபட்ட பயன் கிடைக்கும்’ என அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தான் போடி ஊர் மக்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடத்தில் புற்று மண்ணால் ஒரு ஆலயம் அமைத்து அதில் ஒரு வேலையும் வைத்து வழிபட்டு வந்தார். இதனால் இவ்வாலயம் வேல் கோவிலென மிகவும் பிரசித்தி பெற்றது.
பின்னர் இக்கோவில் புனரமைக்கப்பட்டு 1945-ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது. வருடாந்த உற்சவங்களும், விசேஷ பூசைகளும் ஒழுங்காக நடைபெற்று வந்ததன. பக்தர்கள் விசேஷ காலங்களில் விரதமிருந்து வழிபட்டு செல்வார்கள். மீண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் 2004-ல் நடைபெற்றது. 2013-ல் புதியதாக அறுகோணத் தேர் வடிவமைக்கப்பட்டு, வருடாந்திர உற்சவத்தின் போது ஆறுமுகப்பெருமான் தேரில் வீற்றிருந்து திரு உலா வந்து அருள்பாலிக்கின்றார்.
தல அமைப்பு:
அழகிய திருக்கோவிலின் கருவறையில் மூலவர் முருகன் தேவியரோடு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரே மயில் மற்றும் பலிபீடம் உள்ளன, சக்தி மிக்க வேல் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆவணி மஹோற்சவம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
மன அமைதி பெற, வேண்டியது கிடைக்க, வினைகள் நீங்க, நல்லன நடக்க, தொழில் சிறக்க, குடும்ப ஒற்றுமை ஓங்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டியதையெல்லாம் அள்ளி வழங்கும் இலங்கை அம்பாறை கல்முனை முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1179 மன அமைதி தரும் இலங்கை அம்பாறை கல்முனை முருகன் கோவில் உற்சவர் ஆறுமுகப்பெருமான்
படம் 2 - 1179 வேண்டியதையெல்லாம் அள்ளி வழங்கும் இலங்கை அம்பாறை கல்முனை முருகன் கோவில்
Comments
Post a Comment