கோவில் 1150 - சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1150
வியாபாரம் விருத்தியடைய அருளும் சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவில்
1.8.2024 வியாழன்
அருள்மிகு நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவில்
நகரத்தார் விடுதி
180, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை-600001
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: பாரி முனை 2 கிமீ, சென்னை சென்ட்ரல் 4.5 கிமீ, எழும்பூர் 5 கிமீ
மூலவர்/உற்சவர்: புது தண்டாயுதபாணி
பழமை: 150 ஆண்டுகளுக்கும் முன்னர்
தல மகிமை:
சென்னை மாநகரின் மையப் பகுதியில் பாரி முனையிலிருந்து (Parrys Corner) 2 கிமீ தொலைவில் இருக்கும் வியாபாரம் நிறைந்த பகுதியான மண்ணடியில் பவளக்கார தெருவில் உள்ள நகரத்தார் விடுதியில் வியாபாரம் விருத்தி அடைய அருளும் புது தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 4.5 கிமீ தூரம் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் சிறப்பு மிக்க மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக புது தண்டாயுதபாணி வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். இந்த சாநித்யம் மிக்க புது தண்டாயுதபாணி தெய்வமே உற்சவராகவும் திகழ்வது இக்கோவிலின் சிறப்பம்சம். இக்கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள நகரத்தார்கள் பர்மா ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் முன் மண்ணடியில் உள்ள நகரத்தார் விடுதிக்கு வந்து, தங்கி இங்கு அருள்பாலிக்கும் புது தண்டாயுதபாணியை வழிபட்டு செல்வதால், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. வட இந்தியா வியாபாரம் அல்லது கோவில் யாத்திரை செல்பவர்களும் இங்கு வந்து, தங்கி, புது தண்டாயுதபாணியை வழிபட்டு செல்வர்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமிகள், வடிவுடையம்மன் கோவில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு மிக்க நிகழ்வாகும். இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க பக்தர்கள் மண்ணடி தண்டாயுதபாணி சுவாமியை தங்கத் தேரில் வைத்து ஊர்வலமாக திருவொற்றியூர் வருவது வழக்கம். நகரத்தார் சமூக பக்தர்கள் மண்ணடி பவளக்காரன் தெரு நகரத்தார் மண்டபத்தில் உள்ள கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் புது தண்டாயுதபாணி மற்றும் வெள்ளித் தேரில் பழைய தண்டாயுதபாணி தெய்வங்களுடன் பாதயாத்திரையாக திருவொற்றியூர் திருக்கோவிலுக்கு செல்வர். ஊர்வலம் திருவொற்றியூர் நகரத்தார் மண்டபத்தை சென்றடையும் வரை வழி நெடுகிலும் பக்தர்கள் தண்டாயுதபாணிக்கு அர்ச்சனைகள் செய்து, முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடிய படி செல்வது மிகவும் சிறப்பான அம்சமாகும். பக்தர்களும், பக்தர்கள் மற்றும் இரண்டு தண்டாயுதபாணி சுவாமிகளும் திருக்கல்யாண நிகழ்வை கண்டு, தரிசித்து, மறுநாள் மீண்டும் மண்ணடி பவளக்கார தெரு நகரத்தார் விடுதி சென்றடைவர்.
தல வரலாறு:
வியாபாரம் விஷயமாக வெளி நாடு மற்றும் தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் நகரத்தார் சமூகத்தினர் சென்னை வந்து, தங்கி ஆகாயம் அல்லது கடல் மார்க்கமாக செல்வது வழக்கம். அதற்காக சென்னையில் தங்க வசதியாக நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் பர்மா தேக்கு மற்றும் உலகத் தரம் வாய்ந்த கட்டிட பொருட்களுடன் நகரத்தார் விடுதி கட்டப்பட்டது. நகரத்தார் சமூகத்தினரின் இஷ்ட தெய்வமான தண்டாயுதபாணி விக்ரகத்தை அமைத்து, அவரை வழிபட்டே பின்பே வியாபாரத்திற்கு செல்வர். இங்கு வீற்றிருக்கும் சுவாமிக்கு புது தண்டாயுதபாணி என்றும் அருகில் உள்ள மற்றொரு விடுதியில் வீற்றிருக்கும் சுவாமிக்கு பழைய தண்டாயுதபாணி என்று திருப்பெயர்களிட்டு வழிபட்டு வருகின்றனர்.
தல அமைப்பு:
நகரத்தார் விடுதி முதல் மாடியில் உள்ள கருவறையில் மூலவராகவும், உற்சவராகவும் புது தண்டாயுதபாணி பொலிவுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு பழனி தண்டாயுதபாணியை போலவே ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் (சிறிய மூர்த்தம்) மற்றும் வேல் தெய்வம் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
வியாபாரம் விருத்தியடைய, வேண்டிய வரம் பெற, தொழில் மேம்பட, வினைகள் அகல, பிணிகள் தீர, கல்வி, ஞானம் சிறக்க,
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், பாதயாத்திரை
வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி திருவடிகள் பணிந்து போற்றுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1150 வியாபாரம் விருத்தியடைய அருளும் சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி ஆடிக் கிருத்திகை அலங்காரம்
படம் 2 - 1150 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி
Comments
Post a Comment