கோவில் 1149 - வேலூர் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1149
திருமண வரம் அருளும் வேலூர் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர் கோவில்
31.7.2024 புதன்
அருள்மிகு பூமலை சுப்பிரமணியர் கோவில்
பள்ளிக்குப்பம்
குடியாத்தம் தாலுக்கா
வேலூர் மாவட்டம்
இருப்பிடம்: குடியாத்தம் 18 கிமீ, வேலூர் 31 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 100 ஆண்டுகளுக்கும் முன்னர்
தல மகிமை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் குடியாத்தம் நகரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள பள்ளிக்குப்பத்தில் திருமண வரம் அருளும் பூமலை சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. வேலூர் மாநகரத்திலிருந்து 31 கிமீ பிரயாணம் செய்தாலும் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சியருள்கின்றார்.
இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை (29.7.24 திங்கள்) மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளன்று இக்கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரை வழிபட அதிகளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர். பங்குனி உத்திர திருநாளும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. தை பூசம் அன்று, வேண்டுதல் வைத்து காவடி எடுத்தல்
பிரசித்தம். முருகப்பெருமானின் ஏனைய விழாக்களும் மற்றும் கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் போன்ற திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன,
திருமணஞ்சேரி திருத்தலம் போல இங்கும் பகவான் சுப்பிரமணியரை மனமுருகி பிரார்த்தித்தால், உடனே திருமணம் நிறைவேறும். சுற்று வட்டார கிராமங்களில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் இத்தல வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் முன்னே நடைபெறுவது சிறப்பம்சமாகும். இதேப் போல நம்பிக்கையுடன் சுப்பிரமணியரை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமையன்று வழிபடுவோருக்கு நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
மிகவும் பழமையான இக்கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு ஜூலை 2024-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இக்கோவில் சிலைகள் திருடப்பட்டு, முருகப்பெருமான் பேரருளால் மீண்டும் கிடைத்தது என்பது சிறப்பு செய்தி.
தல அமைப்பு:
சுமார் 100 எளிய படிக்கட்டுகள் கொண்ட இக்கோவிலின் கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் இருக்கும் வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், அம்மன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். மேலும் கோவிலின் வெளியே அரசமரத்தடியில் உள்ள விநாயகப்பெருமான் நாக தெய்வங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
திருமண வரம் வேண்டி, விவசாயம் செழிக்க, குழந்தை பாக்கியம் கிட்ட, இரு வினைகள் அகல, வேண்டியது நடக்க, குடும்பம் சிறக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
விவசாயம் செழிக்க அருளும் வேலூர் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1149 திருமண வரம் அருளும் வேலூர் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர்
Comments
Post a Comment