கோவில் 1147 - இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1147
சந்தோஷங்களை அள்ளி வழங்கும் இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
29.7.2024 திங்கள்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
மடத்துவெளி (Madathuveli)
புங்குடுதீவு (Pungudutivu)
யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina)
வடக்கு மாகாணம் (Northern Province)
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 24 கிமீ, மண்டைத்தீவு 28 கிமீ,
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தோற்றம்: 400 ஆண்டுகள் முன்னர்
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள 7 தீவுகளில் புங்குடுதீவு ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகரிலிருந்து நெடுஞ்சாலையின் மூலம் 24 கிமீ தொலைவில் உள்ள புங்குடுதீவுவில் உள்ள மடத்துவெளி கிராமத்தில் சந்தோஷங்களை அள்ளி வழங்கும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மண்டைத்தீவிலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக அருளுகின்றார். உள்ளூர் பக்தர்களால் இவ்வூர் சின்ன நல்லூர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமிக்கு நடைபெறும் பூஜைகளை போன்றே மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமிக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.
இக்கோவிலில் சித்திரை மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கொடியேற்றம், எட்டாம் திருவிழா, பூங்காவனம், தீர்த்தம் மற்றும் சித்திரை தேரோட்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பச்சை சாத்தும் நிகழ்ச்சியும் இடம் பெறும். கந்த சஷ்டி பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் நிகழ்வு இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். பாலசுப்பிரமணிய சுவாமியின் அனைத்து திருவிழாக்களும் மற்றும் மார்கழி பூஜைகளும் கொண்டாடப்படுகின்றன.
பொன்கொடுதீவு என்ற பதம் திரிபடைந்து புங்குடுதீவு என்று வழங்கப்படுகிறது வரலாறு. அக்காலத்தில் புங்கை மரங்கள் நிறைந்த காடாக இவ்விடம் இருந்ததால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாகவும் வரலாறு.
தல வரலாறு:
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் என்ற பெண்மணி அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார். ஊரில் ஏற்பட்ட பிரச்னையால், தாலியை கழற்றி விட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இவ்விடத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் எழுப்பப்பட்டது. 1960-ல் இக்கோவில் வேலுப்பிள்ளை சபாபதி மற்றும் வி, அருணாசலம் போன்ற பெரியோர்களால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தல அமைப்பு:
இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகிய கொடிமரத்துடன் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. கருவறையில் பாலசுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தனி கருவறையில் வேல் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடபட்டு வருகிறது. மேலும் விநாயகர், உற்சவர்கள், சிவபெருமான், பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சித்திரை மஹோற்சவம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், மார்கழி பூஜை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
சந்தோஷங்கள் கிடைக்க, நினைத்தது நடக்க, திருமணம் நடைபெற, குழந்தை வேண்டி, வினைகள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்தது நடைபெற அருளும் இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1147 சந்தோஷங்களை அள்ளி வழங்கும் இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1147 நினைத்த்து நடைபெற அருளும் இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment