கோவில் 1088 - சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1088
சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் கோவில்
31.5.2024 வெள்ளி
அருள்மிகு முருகவேல் திருக்கோவில் [TM000146]
80, அய்யா முதலி தெரு (தெற்கு)
சிந்தாதிரிப்பேட்டை
சென்னை-600002
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: சென்னை எழும்பூர் 1.5 கிமீ, சென்ட்ரல் 2.5 கிமீ, கோயம்பேடு 10 கிமீ
தொலைபேசி எண்: 044 43325476
மூலவர்: முருகவேல்
தேவியர்: வள்ளி தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை 80, அய்யா முதலி தெருவில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் முருகவேல் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவாராக முருகவேல் பெருமான் வள்ளி, தெய்வானையோடு வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிமீ, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் கோவிலை அடையலாம். இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 27.3.2024 புதன்கிழமை சிறப்புற நடைபெற்றது. பாம்பன் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வேல் இக்கோவிலில் இருப்பது சிறப்பம்சம். இக்கோவிலில் வேல் பூஜை பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் மகா கந்த சஷ்டி பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் சூரசம்ஹார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறும். சுவாமி தேவியரோடு வீதியுலா வருவது சிறப்பம்சம். 7-ம் நாள் சுவாமி திருக்கல்யாணம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். பின்னர் அன்னதானம் நடைபெறும். ஏராளாமான பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து முருகவேலை வழிப்பட்டு, வேண்டிய வரங்களை பெற்று செல்கின்றனர். முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட வருவதால், கோவில் மதியம் 3 மணிக்கே கோவில் திறக்கப்படுகின்றது.
தல வரலாறு:
பழமையான இக்கோவிலின் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத்துறை கவனித்து வருகின்றது. இத்திருக்கோவில் சமீபத்தில் திருப்பணி மேற்கொள்ளப் பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 27.03.2024 புதன்கிழமை காலையில் மிகவும் சிறப்பாக ந்டைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய சிற்பங்கலுடன் கூடிய இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன. கருவறையில் மூலவர் முருகவேல் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருமேனியில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் பிரகார கணபதி, ஐயப்பன், சிவபெருமான், பஞ்சமுக ஆஞ்சநேயர், தாயார் சமேத மகா விஷ்ணு, கருட பகவான், பக்த ஆஞ்சநேயர், பாம்பன் குமரகுரு சுவாமிகள், ராகவேந்திர சுவாமிகள், சாயிபாபா, பைரவர், நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
சகல ஐஸ்வர்யங்கள் வேண்டி, எண்ணியது ஈடேற, சந்தான பாக்கியம் கிட்ட, திருமணத்தடை அகல, பிணிகள் தீர, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
வேல் பூஜை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-11.30 மாலை 5.30-8.30
எண்ணியது ஈடேற அருளும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் திருப்பாதங்களை சென்னி மேல் சூட்டி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1088 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல்
படம் 2 - 1088 எண்ணியது ஈடேற அருளும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல்
Comments
Post a Comment