கோவில் 146 - நாகப்பட்டினம் குமரன் கோவில்

 🙏🙏                                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-146

தீபாவளித் திருநாளில் (ஐப்பசி அமாவாசையில்) செல்வம் வேண்டி குபேர பூஜை நடக்கும் தலம் நாகப்பட்டினம் குமரன் கோவில்

1.11.21 திங்கள்

                                                                                                                                             அருள்மிகு குமரன் திருக்கோவில் 

நீலா தெற்கு வீதி

நாகப்பட்டினம் – 611001

நாகப்பட்டினம் மாவட்டம்

இருப்பிடம். நாகை பேருந்துநிலையம் அருகில் உள்ளது.

மூலவர்: மெய்கண்டமூர்த்தி (முருகன்)


பாடியவர்கள்: 

அருணகிரிநாதர் திருப்புகழ்

விழுதா தெனவே கருதா துடலை

     வினைசேர் வதுவே ...... புரிதாக


விருதா வினிலே யுலகா யதமே

     லிடவே மடவார் ...... மயலாலே


அழுதா கெடவே அவமா கிடநா

     ளடைவே கழியா ...... துனையோதி


அலர்தா ளடியே னுறவாய் மருவோ

     ரழியா வரமே ...... தருவாயே


தொழுதார் வினைவே ரடியோ டறவே

     துகள்தீர் பரமே ...... தருதேவா


சுரர்பூபதியே கருணா லயனே

     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே


எழுதா மறைமா முடிவே வடிவே

     லிறைவா எனையா ...... ளுடையோனே


இறைவா எதுதா வதுதா தனையே

     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.



ஆருட்கவி அழகுமுத்துவின் மெய்கண்ட வேலாயுத சதகம்:

‘கனவுக்குளே நீவந்து எனைக் 

கலை ஒதுஎனக் கற்பித்தும் 

நினைவுக்குளே கண்டேன் அலால் 

நினைவுக்கு அது நிசமல்லவே 

சுனையுற்ற நீர்நிழல் அல்லவே 

தோன்றாத் துணையாய் நின்றிடு 

வினையித்தை என் சோல்வேன்

ஐயா! வேலாயுதா வேலாயுதா'!


தலமகிமை:

முருகப்பிரானை மூலவராகக் கொண்டு சண்டி முதலிய பரிவாரங்களோடு விளங்கும் ஆலயம் குமரன் கோவில் என்னும் மெய்கண்டமூர்த்தித் திருக்கோவிலாகும். இத்திருக்கோயிலின் அருகே குமரவேல் தகப்பனான அமுதகடேசப்பெருமாள் (கட்டியப்பர்) அருட்குறிகொண்டு வீற்றிருக்கின்றார். அவரை அமரர்கள் வந்து வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகின்றது. தந்தையை வழிபட்ட தேவர்கள் அருகில் உள்ள மைந்தனையும் மறவாது வழிபட்டிருப்பர். எனவே இத்திருக்கோயில் அமரர்கள் வழிபட்ட குமரன் கோவில் ஆகும்.


தெய்வானை திருமணத்தில் முருகப்பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான், இதை அடையாளமாக மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யானை வாகனத்துடன் கூடிய முருகன், தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார். 


இவ்வாலயத்தில் குபேரர் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது. முருகன் கோயிலில் குபேரன் இருப்பது இத்தலத்தில் மட்டுமே. ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளி) நடக்கும் குபேர பூஜை பிரசித்தம். செல்வம் பெருக வேண்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 


மெய்யடியார் தம்வினை தீர்க்கத் தானே தேடி வநத குமரன் இன்றும் தன்னை நாடி வந்து வணங்குவோர் வாழ்வில் நாள் எல்லாம் திருநாளாக விளங்க அருள்வழங்கிக் கொண்டிருக்கிறான் தேடிச் சென்று அவன் திருவடி பணியுங்கள். கோடி கோடியாய் வினை இருப்பினும் அவையாவும் தீரும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் நிச்சயம் சேரும்!


தலவரலாறு:

சிவராஜதானி என்று போற்றப்படும் திருநாகைக்காரோகணம் திருத்தலம்,. புராணப் பெருமை மிக்க இத்தலத்தின் பெயரை, இன்றையப் பெயர் நாகப்பட்டினம் நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்துவிட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் (திருநாகைக்காரோணம்-தேவாரத்தலம்) கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்க கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் குமரன் கோயில்.


இத்திருகோவிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர். கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரைபொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். அழகுமுத்து மெய்க்காப்பாளராக பணியாற்றிய இந்தக் கோயிலில், முருகனுக்கு "மெய்கண்டமூர்த்தி' என்ற பெயர் விளங்கியது. பேச்சு வழக்கில் குமரன் கோயில் என்றானது.


.தலஅமைப்பு:

கோயிலின் கிழக்குப் புறவாயிலில் இருப்பது நாலுகால் கருங்கல் மண்டபம், உற்சவ சமயங்களில் உற்சாகமாக பவனி வரும் முருகன் எழுந்தருளும் இடம் இது. உள்ளே நுழைந்தால் ஆகம விதிப்படி விநாயகர், பலீபீடம், த்வஜஸ்தம்பம் உள்ளன. இடதுபுறம், தனிச்சந்நிதியில் இடும்பன் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.


கருவறையில் கருணையே வடிவாக நின்ற திருக்கோலத்தில் இரு தேவியரும் இருபுறம் இருக்க தரிசனம் தருகிறார் மூலவர் மெய்கண்ட மூர்த்தி. இருவினை போக்கிடும் திருவினை உடைய முருகப் பெருமான், தாயின் கருவறை காணாதவன். அவனை இந்தக் கருவறையில் காணும்போது அந்த அன்னை மடியில் நாம் இருந்தபோது இருந்த பேரானந்தம் மனதிற்குள் படர்கிறது. உள்ளம் நெகிழ்கிறது.  பிராகாரத்தில் சண்டிகேசுவரர், விஸ்வநாதர், விசாலாட்சி, துர்க்கை, சனீஸ்வரர், குருபகவான், பைரவர், நவகிரகசந்நிதிகள் இருக்கின்றன. 


குமரன் குடிக்கொண்டருளும் இக்கோவிலில் குபேரனுக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. முருகன் கோயிலில் குபேரன் இருப்பது இத்தலத்தில் மட்டும்தான் என்கிறார்கள். வடிவேலன் அருளால் வறுமை அகலும், இங்குள்ள குபேரனை வழிபடுவதால் வளமை பெருகும். ஐப்பசி அமாவாசையில்(தீபாவளி) நடக்கும் குபேர பூஜை சிறப்பு. 


தைப்பூசத் திருநாளை முன்னிட்டுப் 10 நாட்கள் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வேலவர் பலவித வாகனங்களில் எழுந்தருளி வீதியலா வருவார். ஐப்பசித் திங்களில் கந்தர்சஷ்டிவிழா பத்து நாட்கள் நடைபெறும். சூரசம்ஹாரம், வள்ளி தெய்வானைக் கல்யாணம் ஆகியவை சிறப்பு விழாக்களாகும். இவ்விழா நாட்களின் முடிவில் நீலாயதாட்சி அம்மன் வடக்கு வீதியில் உள்ள கோதண்ட ஐய்யனார் கோவில் குளத்திற்கு வேலவர் எழுந்தருளி நீராட்டுவிழா நிகழ்த்தி அருள்வர். புரட்டாசி நவராத்திரி விழா நாட்களில் முருகன் எழுந்தருளி நாற்கால் மண்டபத்தைச் சுற்றி பக்தி உலா நிகழ்த்துவார். கார்த்திகை மாத திருக்கார்த்திகை விழா, அருட்கவி அழகுமுத்துப் புலவர் இறையருளில் கலந்த சித்திரைச் சதயநாள் விழா, மாசிமக நாளில் கடற்கரைச் சென்று அங்கே கடல் நீராட்டு விழா, இன்னும் சிவராத்திரி விழா போன்ற சைவ விழாக்கள் ஆகிய மாத விழாக்கள் முறைப்படி நடைபெறுகின்றன. இதைத்தவிர ஒவ்வொரு மாத கார்த்திகை தோறும் காலையில் மூலவருக்கு அபிஷேக ஆராதைனைகளும் உத்ஸவரை வசந்த மண்டபத்திற்க்கு எழுந்தருளச் செய்து திருமுழுக்காட்டி அங்கே சோடச உபசாரங்களோடு தீப ஆராதனைகளும் நடத்துவர். மாலையில் உத்ஸவர் கேடய சப்பரத்தில் எழுந்தருளித் திருவீதி உலா வருவார். இவ்வாறு நாளும் நடைபெறும் கோலாகல பூசையும் சீர்பாத சேவையும் கண்டு தினமொரு சாத்துப்படி அழகன் திருவருளைப் பெறுவது பக்தர்களின் அதிர்ஷ்டம்.


திருவிழா:

தீபாவளித் திருநாளில் (ஐப்பசி அமாவாசை) குபேரருக்கு பூஜை, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி, திருக்கார்த்திகை,  தைப்பூசத்திருவிழா 10நாள், மகாசிவரத்திரி 


பிரார்த்தனை:

தோல்நோய், தொழுநோய் மற்றும் சகல நோய்களும் நீங்கிட, செல்வம் பெருகிட


நேர்த்திக்கடன்:

பாலாபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


சோமவார நாளான இன்றும், தீபாவளியன்றும் சகல நோய்களும் நீங்கவும், செல்வம் பெருகிடவும் குபேரன் மற்றும் குமரனை கும்பிட்டு குடும்பத்துடன்  பயன்பெறுவோம்!.


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

9489302842

🙏🙏


படம் 1 - 146 தீபாவளி திருநாளில் (ஐப்பசி அமாவாசையில்) செல்வம் பெருக குபேர பூஜை நடக்கும் ஒரே முருகன் தலமான குமரன் கோவில் நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி


படம் 2 - 146 தோல் நோய்கள் தீர்க்கும் மெய்கண்ட மூர்த்தி பெருமான் குமரன் கோவில் நாகப்பட்டினம்



Comments

  1. Meykanda moorthi perumanuku arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்