கோவில் 1054 - சென்னை ராயபுரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1054
வேண்டும் வரம் தந்தருளும் சென்னை ராயபுரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
27.4.2024 சனி
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கிழக்கு மாதா சர்ச் தெரு
புதுமனை குப்பம்
ராயபுரம்
சென்னை-600013
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல்/எழும்பூர் 6/7 கிமீ, கோயம்பேடு 18 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 500 ஆண்டுகளுக்கும் முன்னர்
தல மகிமை:
சென்னை மாநகரத்தின் மையத்தில் இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ இருக்கும் மீனவ பெருமக்கள் அதிகம் வசிக்கும் ராயபுரம் நகரில் வேண்டும் வரம் தந்தருளும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ பிரயாணம் செய்தாலும் வள்ளி, தெய்வானை சமேதராக சிவசுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்யும் இத்திருக்கோவிலை அடையலாம். 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் கும்பாபிஷேகம் 2018-ல் நடைபெற்றது.
திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமியை போலவே, ராயபுரம் சிவசுப்பிரமணிய சுவாமியும் கிழக்கே இருக்கும் கடலை நோக்கி ஆற்றலுடன் அருளுவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம். இக்கோவிலில் விமரிசையாக நடைபெறும் மகா கந்த சஷ்டி பெருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து தினமும் நடைபெறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனைகளில் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் சிறப்பம்சங்களாக 6-ம் நாள் சூரசம்ஹார நிகழ்வும், மறுநாள் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. வேலவனின் இதர திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. 11 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து முருகப்பெருமானை வழிபட்டு செவ்வரளி சாற்றி, அர்ச்சனை செய்து வந்தால் திருமண வரம் கைக்கூடும். நினைத்த யாவும் நடந்தேறும். இக்கோவிலில் வீற்றிருக்கும் காயாரோகணேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை, நீலாயதாட்சி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை, பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை முதலானவை சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
500 அண்டுகளுக்கும் மேல் பழமையானதாகக் கருதப்படும் இக்கோவிலை இப்பகுதி மீனவ பெருமக்களும், முருக பக்தர்களும் போற்றி வருகின்றனர். இந்து அறநிலையத் துறை இக்கோவிலை பராமரிக்கின்றது. கோவில் புனரமைக்கப்பட்டு 22.6.2018-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவிலுக்கு செல்வதற்கு அழகிய தோரண வாயில் உள்ளது. ஆகம அமைப்புடன் கூடிய இக்கோவிலுக்குள் நுழைந்த உடன் கொடிமரம் உள்ளது. கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர், காயாரோகணேஸ்வரர், நீலாயதாட்சி அம்மன் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் கன்னி மூல கணபதி, தட்சிணாமூர்த்தி, தண்டாயுதபாணி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர், சாய்பாபா, சனீஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், பிரதோஷம், பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
வேண்டும் வரம் கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, திருமணம் நடைபெற, குழந்தை வரம் வேண்டி, வினைகள் அகல, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை எண்ணங்கள் உண்டாக அருளும் சென்னை ராயபுரம் சிவசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment