கோவில் 1050 - கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1050
வழக்குகளில் வெற்றி பெற வைக்கும் கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன் கோவில்
23.4.2024 செவ்வாய்
அருள்மிகு கதிர்காம வேலவன் திருக்கோவில்
வட்டம் 5
நெய்வேலி-607803
கடலூர் மாவட்டம்
இருப்பிடம்: நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் 4 கிமீ, நெய்வேலி வேலுடையான்பட்டு கோவில் 5 கிமீ
மூலவர்: கதிர்காம வேலவன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: அரசமரம்
தல மகிமை:
கடலூர் மாவட்டம் நெய்வேலி மாநகரின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 4 கிமீ தொலைவில் இருக்கும் வட்டம் 5-ல் வழக்குகளில் வெற்றி பெற வைக்கும் கதிர்காம வேலவன் கோவில் சிறப்புற அமைந்துள்ளது. திருப்புகழ் பாடல் பெற்ற தலமான நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலிலிருந்து (வில்லுடையான்பட்டு கோவில்) 5 கிமீ தூரத்தில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கதிர்காம வேலவன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியருளுகின்றார். நெய்வேலி வட்டம் 5-ல் குடியேறிய இலங்கை மக்களால் சிறிய ஆலயமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கோவில் தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினரால் (NLCIL) மிகவும் நேர்த்தியாக நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவில் ஆகம விதிப்படி புனரமைக்கப்பட்டு 26.4.2024-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது என்பது சிறப்பம்சம்.
கதிர்காம வேலவனுக்கு கந்த சஷ்டியில் (10 நாள்) சிறப்பு பூஜைகள், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரமன்று பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் (பிள்ளை வரம்) ஏந்தி வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். வைகாசி விசாகம் (10 நாள்) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி, மாசிமகம், ஆரூத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்திரை திருவோணம், திருக்கார்த்திகை, பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. முருகப்பெருமானும், சிவபெருமானும் தம்பதி சமேதராக திருமணக் கோலங்களில் திருக்காட்சியருள்வதால், இத்திருத்தலம் விசேஷ திருமண பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.
தல வரலாறு:
நெய்வேலி நகரம் உருவான போது ஏராளாமான இலங்கை தமிழர்கள் தங்களது வேலைக்காக இப்பகுதியில் குடியேறினர். இலங்கையில் இருந்த போது எந்நேரமும் கதிர்காமக் கந்தனை வழிபட்டது போலவே, இங்கும் கதிர்காம வேலவனின் திருவுருவை பிரதிஷ்டை செய்து சிறிய ஓலைக் குடிசைக் கட்டி வழிபட்டு வந்தனர். பின்னர் இலங்கை கதிர்காம கோவிலிலிருந்து புனித மண் எடுத்து வந்து கதிர்காம வேலவன் மற்றும் தேவியர் வள்ளி, தெய்வானை சிலைகளை பிரதிஷ்டை செய்து மயிலை ஸ்ரீசுந்தரராம் சுவாமிகளால் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவிலுக்கு 28.5.1986-ல் கும்பாபிஷேம் நடைபெற்றது.
தற்போதைய அறங்காவலர்கள் குழு, நெய்வேலி நிர்வாகம், முருக பக்தர்கள் பேருதவியுடன் இக்கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு 23.4.224-ல் விக்னேஸ்வ பூஜை, கணபதி ஹோமம் என்று தொடங்கி 24.4.2024, 25.4.2024-ல் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. வரும் 26.4.204 அன்று காலை 9-10.30-க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மகா அன்னதானமும், மாலை 6 மணியளவில் கதிர்காம வேலவன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
தல அமைப்பு:
அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் கதிர்காம வேலவன் கைய்ல் வேலேந்தி வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் அழகுற எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இலங்கை கதிர்காமம் கந்தனை போல் ஓவியமாக இல்லாமல், இக்கோவிலில் கதிர்காம வேலவன் சிலா ரூபமாக அருள்கின்றார். எதிரே அழகிய மயில், பெரிய வேல், பலிபீடம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் வினை தீர்க்கும் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். விநாயகர் சதுர்த்தி 10 நாள் பெருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அடுத்து உமா மகேஸ்வரி சமேத கைலாசநாதர் அமர்ந்த நிலையில் (லிங்க மூர்த்தம்) கிழக்கு நோக்கி திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். நந்தி எதிரில் உள்ள கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகா விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கின்றனர். பக்த ஜெய ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். அடுத்து நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலின் இடப்பக்கம் ஒரு பெரிய அரசமரம் உள்ளது. அதனடியில் அரசமர விநாயகர் மற்றும் நாகர்கள் அருள்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, மாசிமகம், ஆரூத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்திரை திருவோணம், ஆஞ்சநேய ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி (10 நாள்), பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
வழக்குகளில் வெற்றி பெற, எதிரிகள் தொல்லை நீங்க, ஆயுள் பலம் அதிகரிக்க, திருமணம் கைக்கூட, குழந்தை வரம் கிட்ட், வேண்டியவை நிறைவேற, சகல தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 5-8.30
ஆயுள் பலம் அதிகரிக்க அருளும் கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன் திருவடிகள் பணிந்து வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1050 வழக்குகளில் வெற்றி பெற வைக்கும் கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன்
படம் 2 - 1050 ஆயுள் பலம் அதிகரிக்க அருளும் கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன்
Comments
Post a Comment