கோவில் 1025 - ஈரோடு காசிபாளையம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1025
இடர்கள் களையும் ஈரோடு காசிபாளையம் பாலமுருகன் கோவில்
29.3.2024 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM011939]
காசிபாளையம்
ஈரோடு-638003
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: ஈரோடு பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 5/3 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
சிறப்பு தெய்வம்: 36 அடி முருகன்
தல மகிமை:
ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தூரத்திலும் மற்றும் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ள காசிபாளையம் பகுதியில் இடர்கள் களையும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. ஈரோடு மாநகரில் அமைந்துள்ள இக்கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கந்த சஷ்டி முக்கிய திருவிழா ஆகும். முருகன் பாலமுருகனாக அருள்வதால், கந்த சஷ்டி திருவிழாவில் 6-ம் நாள் சூரசமஹாரம் கிடையாது. பாலாபிஷேகமும், திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் உண்டு.
இக்கோவிலில் சிறப்பாக வீற்றிருக்கின்ற 36 அடி உயர முருகனை 36 முறை சுற்றி வந்து வேண்டி கொள்வோரின் எவ்வித வேண்டுதலையும் முருகன் நிறைவேற்றுவார் என்பது இங்குள்ள பக்தர்கள் நம்பிக்கை.
தல வரலாறு:
ஈரோடு காசிபாளையம் பகுதியில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மலைத் தோட்டத்தின் குன்றின் மேல் பாலமுருகன் கோவில் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுவரை பரம்பரை அறங்காவலர் குழுவினரின் வம்சாவழியினரே இக்கோயிலைப் பராமரித்து வருகின்றனர். தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
தல அமைப்பு:
கோவிலின் மலையடிவாரத்தில் கோபுரம் அருகே செல்வ விநாயகர் தனி சந்நிதியில் அருள்கின்றார். 35 படிக்கட்டுகளை ஏறிச் சென்றால் இடப்புறம் இடும்பன் காட்சியருள்கிறார். இடும்பனின் ஆலயத்திலிருந்து 30 படிக்கட்டுகளைக் கடந்து சென்றால் முருகன் ஆலயம் உள்ளது. கோவிலில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன. கருவறையில் முருகப்பெருமான் பாலமுருகன் என்ற திருப்பெயரில் (பழைய திருப்பெயர் வடபழனியாண்டவர்) கையில் வேல் ஏந்தி, மயில் பின் நிற்க எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானின் இருபக்கமும் சிவபெருமானும் (ராஜலிங்கேஸ்வரர்), சொர்ணாம்பிகையும் (சொர்ணாம்பிகா) அருள்வதால், இத்தல முருகன் சோமாஸ்கந்த அமைப்பில் அருளாட்சி செய்கின்றார். மேலும் விநாயகர், தாமரை பீடத்தின் மேல் தட்சிணாமூர்த்தி, தாமரை பீடத்தின் மேல் துர்க்கை, செம்பிலான ஐந்து தலை நாகக் குடை லிங்க வடிவ சிவபெருமான், பெருமாள், ஆஞ்சநேயர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கால பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் நிறுவப்பட்ட 36 அடி உயர முருகப்பெருமானின் சிலை சிறப்பு அம்சமாகும்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி. செவ்வாய், தேய்பிறை அஷ்டமி
பிரார்த்தனை:
இடர்கள் களைய, கோரிக்கைகள் நிறைவேற, மன நிம்மதி பெற, குடும்ப வாழ்வு சிறக்க, தோஷங்கள் அகல, திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் வேண்டி
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
கோரிக்கைகள் நிறைவேற அருளும் ஈரோடு காசிபாளையம் பாலமுருகனை தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1025 இடர்கள் களையும் ஈரோடு காசிபாளையம் பாலமுருகன்
படம் 2 - 1025 கோரிக்கைகள் நிறைவேற அருளும் ஈரோடு காசிபாளையம் பாலமுருகன் கோவில்
Comments
Post a Comment