கோவில் 968 - ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-968 [திருப்புகழ் தலம்]
வேண்டும் வரமளிக்கும் ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி
1.2.2024 வியாழன்
அருள்மிகு கபிலேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருப்பதி [Tirupati]-517501
ஆந்திரா மாநிலம் [Andhra]
இருப்பிடம்: கீழ் திருப்பதி 3 கிமீ, சென்னை 145 கிமீ
மூலவர்: கபிலேஸ்வரர், கபிலேஸ்வர சுவாமி
அம்பாள்: காமாட்சியம்மை
திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: கபில தீர்த்தம்
புராணப்பெயர்கள்: திருமலை, திருவேங்கடம், வேங்கடமலை, திருவேங்கடமலை, திருவேங்கடமாமலை
பாடியவர்: அருணகிரிநாதர் (6)
தல மகிமை:
ஆந்திரா மாநிலம் திருப்பதி திருத்தலத்தில் கீழ் திருப்பதியிலிருந்து 3 கிமீ தொலைவில் வேண்டும் வரமளிக்கும் சிறப்பு மிக்க கபிலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கபில முனிவரால பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் கபிலேஸ்வரர் காமட்சியம்மையுடன் அருளிகின்றார். இத்தலத்தில் அருணகிரிநாதர் திருவேங்கட முருகனை நோக்கி திருப்புகழ் பாடல் இயற்றியுள்ளார். இதன் புராணப்பெயர்கள் திருமலை, திருவேங்கடம், வேங்கடமலை, திருவேங்கடமலை, திருவேங்கடமாமலை ஆகும். திருவேங்கடம் என்றதுமே நம் கண்கள் முன் வெங்கடாசலபதி தோன்றி அருள்வார். இன்றும் பலர் திருவேங்கடவனை முருகன் என்றும், வேங்கட சுப்பிரமணியன் என்றும் கூறுவர். இருவரும் தாய்மாமன், மருமகன் என்பது சிறப்பு. இருவரும் இரு தேவியருடன் அருள்வது சிறப்பு.
அருணகிரிநாதப் பெருமான் இத்தலத்து ஆறுமுகவேளை போற்றி 6 திருப்புகழ் பாடல்கள் பாடி பரவியுள்ளார். “கறுத்த தலை”, “சரவணபவ நிதி”, “நெச்சுப்பிச்சு”, “கோங்கிள்”, “சாந்தமில்”, “வரிசேர்ந்திடு” என்று தொடங்கும் 6 திருப்புகழ் பாடல்களும் வேங்கடமலைக்குரியவை. ஒவ்வொரு திருவேங்கடத் திருப்புகழ் பாடல்களிலும் திருமால் வர்ணனைகள் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாகும். “கறுத்த தலை” என்ற பாடலில் ராமாயண செய்திகளை சுவைபடக் குறிப்பிடுகின்றார்.
கார்த்திகை மாத பவுர்ணமியில் மூன்று உலகங்களில் அமைந்துள்ள அனைத்து தீர்த்தங்களும் இந்த கபில தீர்த்தத்தில் நண்பகலில் ஒன்றிணைகின்றன. அந்த புனித நேரத்தில் இங்கு தீர்த்தமாடும் பக்தர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், முன்னோர்களை வணங்கிக் கடந்த காலங்களில் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம்.
பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் கோவிலின் முக்கியத் திருவிழாவாக வெகு விமரிசையாக ஒன்பது நாள் நடைபெறும் நிகழ்வாகும். திருவிழாவின் போது சிவபெருமான் மற்றும் பார்வதி திரு உலா அம்சா வாகனத்தில் தொடங்கி திரிசூல ஸ்னத்துடன் (சிவனின் திரிசூலம் தீர்த்தமாடல்) முடிவடையும். மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிக்கார்த்திகை, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
கபில முனிவர் இந்த இடத்தில் சிவபெருமானை வேண்டி தவம் செய்ததாகவும், முனிவரின் பக்தியால் சிவபெருமானு பார்வதியும் காட்சி தந்து அருளியதாக தல புராணம் தெரிவிக்கிறது. கபில முனிவர் கபிலேஸ்வரரை சுயம்பு லிங்கமாக பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது. அவர் தோற்றுவித்த புஷ்கரிணி கபில தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.
13-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை விஜயநகர மன்னர்கள் கோவிலைச் சிறப்பாக நிர்வகித்து வந்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகச் சாளுவ நரசிம்ம தேவராயன், கிருஷ்ண தேவராயன், மற்றும் பிற்கால ஆட்சியாளர்களான வெங்கடபதி ராயா, மற்றும் அலியா ராமராய, ஸ்ரீ கிருஷ்ணா தேவாராயாவின் மருமகன் ஆவர். தற்போது இக்கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
தல அமைப்பு:
சேஷாசலம் மலையின் ஒரு பகுதியாக இருக்கும் திருமலை மலைகளின் அடிவாரத்தில் செங்குத்தான மற்றும் செங்குத்து முகங்களில் ஒன்றில் மலைக் குகை ஒன்றின் நுழைவாயிலில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு மலை ஓடையின் நீர் நேரடியாக "கபில தீர்த்தம்" என்றழைக்கப்படும் கோவில் தெப்பக்குளத்தில் விழுகிறது.
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலில் பெரிய நந்தி பக்தர்களை வரவேற்கிறது. கருவறையில் மூலவராக கபிலேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பாள் காமாட்சியம்மை தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், ராமலிங்கம், உமா மகேஸ்வரி, ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணர், சூரிய நாரயணர், நரசிம்ம மூர்த்தி, லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலன், ஆஞ்சநேயர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணிய சுவாமிவாரு ஆறுமுகங்கள், பன்னிரு திருக்கரங்கள் கொண்டு மயில் மீதமர்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக கம்பீரமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
பிப்ரவரி பிரம்மோற்சவம் (9 நாள்), மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிக்கார்த்திகை, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வேண்டும் வரம் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிட, பிறவி வேண்டாமை வேண்டி, பாவங்கள் அகல, மன அமைதி கிடைக்க, சஞ்சலம் போக்க
திறக்கும் நேரம்:
காலை 5.30 – இரவு 9.00
சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 968 வேண்டும் வரமளிக்கும் ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருப்புகழ் தலம்
படம் 2 - 968 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர்
Comments
Post a Comment