கோவில் 966 - உத்தர்காண்ட் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில் அரூப முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-966 [திருப்புகழ் தலம்]
முக்தி தந்தருளும் உத்தர்காண்ட் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில் அரூப முருகப்பெருமான்
30.1.2024 செவ்வாய்
அருள்மிகு தக்ஷேஸ்வர் மகாதேவர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
கனகல் [Kankhal]
ஹரித்வார் [Haridwar]-249407
[மாயாபுரி]
உத்தர்காண்ட் மாநிலம் [Uttarakhand]
இருப்பிடம்: ஹரித்வார் 6 கிமீ, டில்லி 236 கிமீ
மூலவர்: தக்ஷேஸ்வர் மகாதேவர், தட்சிணேஸ்வரர் மகாதேவர்
அம்மன்: சதி தேவி
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் [அரூபம்]
தீர்த்தம்: கங்கை
புராணப்பெயர்: மாயாபுரி
பாடியவர்: அருணகிரிநாதர் (1)
பழமை: 1810
தல மகிமை:
உத்தர்காண்ட் மாநிலம் கோவில் நகரம் ஹரித்வாரிலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் கனகல் பகுதியில் முக்தி தந்தருளும் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. புது டில்லியிலிருந்து 236 கிமீ பிரயாணம் செய்தால் Char Dham எனப்படும் 4 புனிதக் கோவில்களான ஹரித்வார் திருத்தலத்தை அடையலாம். இக்கோவிலில் தக்ஷேஸ்வர் மகாதேவர் பார்வதி தேவி (சதி) உடன் அருளாட்சி செய்கின்றார். சவான் மாதம் [Sawan Month/ஆடி மாதம்/ஜூலை அல்லது ஆகஸ்ட்] சிவபெருமான் இங்கு வந்து வசிப்பதாக ஐதீகம். மகா சிவராத்திரி அன்று சைவ பெருமக்களின் புனித யாத்திரை தலமாக இத்தலம் திகழ்கின்றது
பிரதான ஏழு முக்தி தலங்களில் ஹரித்வார் திருத்தலமும் ஒன்று. மற்றவை வாரணாசி (காசி), உஜ்ஜயினி, அயோத்தி, மதுரா, துவாரகை, காஞ்சிபுரம் ஆகும். கும்பமேளா நடைபெறும் நான்கு திருத்தலங்களில் ஹரித்வார் திருத்தலமும் ஒன்று. இந்த தெய்வீக தலமே உலகில் உள்ள அனைத்து 52 சக்தி பீடங்களுக்கும் (மூல ஆற்றல் மையங்கள்) ஆதாரமாக உள்ளது. எனவே சக்தி பீடங்களுக்கு வித்திட்ட திருத்தலம் இதுவாகும். ஆதி பராசக்தியின் (பார்வதி தேவி) அம்சமாக தோன்றி அருளிய அன்னை சதி தேவி ‘யோகாக்னியால் தன் திருமேனியை மாய்த்தருளிய யாகக்குண்டத்தினை’ இவ்விடத்தில் இன்றும் காணலாம்.
மாயாபுரி என்னும் வட இந்திய திருபுகழ் தலம் ஹரித்வார் என்று கூறுவர். பிங்கல முனிவர் பிங்கல நிகண்டு நூலில் “அரித்துவார மாயபுரியே” என்று கூறுகிறார். சைவ சமய அருளாளர்களுல் வட நாட்டிலுள்ள ஹரித்வார் திருத்தலத்தை நேரில் தரிசித்தது அருணகிரிநாதப்பெருமான் மட்டுமே. இத்தலத்திற்கு வந்து திருப்புகழ் நாயகர் முருகப்பெருமானை தரிசனம் செய்து ஒரு திருப்புகழ் பாடல் பாடிய தலம் என்பது சிறப்பம்சம். தற்போது கோவிலினுள் முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. இத்தலத்தில் முருகப்பெருமான் அரூபமாக உள்ளார்.
அருணகிரிநாதர் பரவிய இத்தல திருப்புகழ் பாடலை “சிகர அருந்த வாழ்வது சிவஞானம்” என்று சிறப்பாக தொடங்குகின்றார். ‘சிவாயநம’ என்னும் பஞ்சாட்சரத்தில் உள்ள ‘சி’ என்னும் அட்சரத்தை உச்சரிப்பதால் உண்டாவது சிவஞானம் ஆகும். அதை உச்சரிப்பதால் அழிந்து போவது செயலும், ஆசைகளும். ‘ம’ என்ற எழுத்து நெருங்குவதனால் மாயை தொலைகிறது. உன்னை தியானித்து அதனால் அந்த நிலையை அருள்புரிவாய் என்று வேண்டுகிறார். இப்பாடல் அற்புதமான சிவஞானத்தைத் தருவதோடு மாயை வலையினின்றும் நம்மை மீட்டு இறையருளில் செலுத்தும் அருமையான கவசமாகவும் துலங்குகின்றது. இத்தல முருகப்பெருமானை அருவ வடிவில் வணங்கிடுவோம்.
தல வரலாறு:
பிரம்மாவின் புத்திரனான தட்சன் தனது அறியாமையினாலும், ஆணவத்தாலும் மதியிழந்து வரமருளிய பரம்பொருள் சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு இவ்விடத்தில் (ஹரித்வார்) பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். அவனது மகள் சதி தேவி கலந்து கொள்ளும் போதுதான், தனது பதியான பரம்பொருளை அழைக்காதது தெரிய வந்தது. ஆதி பராசக்தியான சதி தேவி யாகக் குண்டத்தில் தன் திருமேனியை மாய்த்தருளினார். அந்த யாகத்தையே அழித்து அருளினார் இதனை அறிந்த சிவபெருமான் தட்சனை அழைக்க வீரபத்திரன் தலைமையில் பூதக்கணங்களை அனுப்பினார். வீரபத்திரன் தட்சனின் தலை கொய்தார் என்பது வரலாறு. இந்த நிகழ்வினை சிவபுராணம் பதிவு செய்கிறது.
தற்போதைய கோவில் 1810-ல் இராணி தன்கவுர் என்பவரால் கட்டப்பட்டது. மீண்டும் 1962-ல் புதுப்பிக்கப்பட்டது.
தல அமைப்பு:
கங்கை நதிகரையில் அமைந்திருக்கின்ற இக்கோவில் பிரதான கோபுரத்தில் முருகப்பெருமானின் மயில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையில் மூலவராக தக்ஷேஸ்வர் மகாதேவர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். தட்சனின் தலையை கொய்தது போல, இங்குள்ள தக்ஷேஸ்வர் மகாதேவரின் கழுத்துப் பகுதி பின்னம் அடைந்திருக்கிறது. அம்பாள் சதி தேவி தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். சதி தேவி தன் திருமேனியை மாய்த்தருளிய யாகக்குண்டத்தினை இவ்விடத்தில் இன்றும் காணலாம். விநாயகர் உட்பட பல தெய்வங்கள் அருள்பாலிக்கினற்னர்.
திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் அரூபமாக வீற்றிருந்து பக்தர்களூக்கு அருள்பாலிக்கின்றார்.
கங்கா தேவி தனி சந்நிதியில் அருளுகின்றார். பிரதான கோவிலுக்குப் பக்கத்தில் பராசக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட தச மகா வித்யா கோவில் உள்ளது. கோவிலுக்கு அடுத்ததாக கங்கையில் தட்சன் படித்துறையும், இதன் அருகில் நீலேசுவரர் மகாதேவர் கோவிலும் அமைந்துள்ளது.
திருவிழா:
மகா சிவராத்திரி, நவராத்திரி
பிரார்த்தனை:
முக்தி பெற, வேண்டியது நிறைவேற, இறை அதிர்வுகள், பிணிகள் தீர, சகல சௌபாக்கியங்கள் கிடைக்க
திறக்கும் நேரம்:
காலை 6 – மாலை 7
இறை அதிர்வுகள் தந்தருளும் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் மற்றும் அரூப முருகப்பெருமானை அகக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 966 முக்தி தந்தருளும் உத்தர்காண்ட் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் (பின்னம் அடைந்த மூலவர்) [திருப்புகழ் தலம்]
படம் 2 - 966 இறை அதிர்வுகள் தந்தருளும் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில்
Comments
Post a Comment