கோவில் 965 - திருக்கயிலை மலை கைலாசநாதர் கோவில் முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-965 [திருப்புகழ் தலம்]
சிவலோக பதவி தந்தருளும் திருக்கயிலை மலை கைலாசநாதர் கோவில் முருகப்பெருமான்
29.1.2024 திங்கள்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருக்கயிலை மலை [Mount Kailash]
[திருநொடித்தான்மலை]
திபெத் [Tibet]
சீனா [China]
இருப்பிடம்: டில்லி 480 கிமீ
மூலவர்: கைலாசநாதர், பரமசிவன், சிவபெருமான் (எல்லா திருநாமங்கள்)
அம்மன்: பார்வதி தேவி (எல்லா திருநாமங்கள்)
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்
தீர்த்தம்: மானச சரோவரம், சிந்து, கங்கை
புராணப்பெயர்கள்: கயிலாயம், திருக்கயிலாயம், வெள்ளிமலை, கயிலை மலை, வெள்ளிவெற்பு, ரசதகிரி, திருநொடித்தான்மலை
பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (6)
தல மகிமை:
கயிலாயம், திருக்கயிலாயம், வெள்ளிமலை, கயிலை மலை, வெள்ளிவெற்பு, ரசதகிரி, திருநொடித்தான்மலை என்றெல்லாம் போற்றப் பெறும் திருக்கயிலை மலை [Mount Kailash] இமயமலைச் சிகரங்களில் ஒப்பற்றதும், புனிதமானதும் ஆகும். திபெத்தை சார்ந்த பகுதியில் இம்மலை அமைந்துள்ளது. அல்மோராவிலிருந்து புறப்பட்டு லிப்புத்தடாகக் கணவாய் வழியே கயிலை மலையை அடையலாம். இங்கே வீற்றிருந்து கைலாசநாதர், பார்வதி தேவி, விநாயகர், முருகப்பெருமான் (சிவ குடும்பம்) ஆகியோர் இங்கிருந்து இவ்வுலகை பார்க்கிறார்கள். அனைவரையும் காக்கின்றனர் என்பது சைவப் பேருண்மையாகும். கயிலை மலை கடல்மட்டத்திற்கு மேல் 22,028 அடி உயரமும், 32 மைல் சுற்றளவும் கொண்டது.
கயிலாயம் சிவ வடிவமாகவும், மானச சரோவரம் சக்தி வடிவமாகவும் அருள்பாலிக்கின்றனர். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களே யாத்திரைக்கு ஏற்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் இது மிகவும் முக்கியமானது. பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் பதிகம் உறுதியாகக் கூறுகிறது.
ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்த பின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற் கண்டு பாடிப் பரவினார். அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு; இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று போற்றப்படுகின்றன. இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளை யானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது. மேலும் காரைக்கால் அம்மையார், சேரமான் பெருமாள் நாயனார், பெருமிழலைக் குறும்பர் நாயனார், ஒளவையார் கயிலாய சிவபெருமான், பார்வதியை வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது. கைலாய மலையை நடந்து சுற்றி வருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை.
திருஞானசம்பந்தரை போல அமிர்தகவிகளைப் பாட கயிலைமலை திருப்புகழில் அருணகிரிநாதர் பெருமான் வேண்டுவது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் குன்றுதோறாடிலில் திருக்கயியலை மலையை முதலாவதாக வைத்துப் போற்றுகிறார். திருக்கயிலை மலையில் அரூபமாக வீற்றிருந்து அருளும் முருகப்பெருமானை போற்றி ஆறு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் சில விவரங்கள். திருக்கயிலையில் “பனியின் விந்துளி” என தொடங்கும் ஒரு திருப்புகழ் பாடலில் சிவ குடும்பத்தையே போற்றுகிறார். “முகத்தை” என தொடங்கும் மற்றொரு திருப்புகழ் பாடலில் ராவணனுக்கு அருளிய சிவபெருமானின் அருளை யாரால் மறக்க முடியும் என்கின்றார்.
தல வரலாறு:
கயிலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது. சிவபெருமான், கைலாய மலையில் தனது துணைவி பார்வதி தேவியுடன் அருள்வதாக நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கயிலாயத்தை சொர்க்கம் என்றும், ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன.
அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல்-அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற திருத்தலம்.
தல அமைப்பு:
கயிலாய மலையே சிவபெருமானாகவும், மானசரோவமே அம்பிகையாவும் அரூபமாக வீற்றிருந்து பக்தர்களை பாதுகாத்து அருள்பாலிக்கின்றனர். இவர்களுடன் விநாயகப் பெருமான், திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் உள்ளிட்ட அனைவரும் அருவுருவாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை:
சிவலோக பதவி வேண்டி, முக்தி பெற, ஐஸ்வர்யங்கள் பெருக, வினைகள் தீர, நல்லன நடக்க
திறக்கும் நேரம்:
ஆனி, ஆடி, ஆவணி
வினைகள் தீர அருளும் திருக்கயிலை மலை கைலாசநாதர், முருகப்பெருமானை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 965 சிவலோக பதவி தந்தருளும் திருக்கயிலை மலை கைலாசநாதர் கோவில் திருப்புகழ் தலம்
படம் 2 - 965 வினைகள் தீர அருளும் திருக்கயிலை மலை கைலாசநாதர் (கயிலாயம்), பார்வதி தேவி (மானசா ஏரி) திருப்புகழ் தலம்
Comments
Post a Comment