கோவில் 964 - மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-964 [திருப்புகழ் தலம்]
ஆயுள் விருத்தி தரும் மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
28.1.2024 ஞாயிறு
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருக்கடையூர்-609311
(திருக்கடவூர்)
மயிலாடுதுறை மாவட்டம்
இருப்பிடம்: மயிலாடுதுறை 21 கிமீ, சீர்காழி 24 கிமீ
மூலவர்: அமிர்தகடேஸ்வரர்
அம்மன்: அபிராமி அம்மன்
உற்சவர்: காலசம்ஹார மூர்த்தி
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வம், ஜாதி
தீர்த்தம்: அமிர்த புஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை
புராணப்பெயர்கள்: திருக்கடவூர்
பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (2)
தல மகிமை:
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரிலிருந்து தென்கிழக்கே 21 கிமீ தொலைவில் இருக்கும் திருக்கடையூர் திருத்தலத்தில் (திருக்கடவூர்) எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 82-வது தலமாகும். சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 110-வது திருத்தலமாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடமாகும்.
அமிர்தமே இங்கே லிங்கமாக உருவாகியதாக வரலாறு. சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் இதுவும் ஒன்று. மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருளிய தலம். இத்தலத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தி சிறப்பு பெற்றவர். அமாவாசையை பவுர்ணமி என்று கூறிய அபிராமி பட்டருக்காக உமா தேவியார் நிலவு காட்டிய தலம். அபிராமி பட்டர் பாடிய பாடல்கள் அபிராமி அந்தாதி எனப்படுகிறது. 63 நாயன்மார்களில் சிறப்பு மிக்கவர்களான குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வழிபட்டு வாழ்ந்த தலம். மார்க்கண்டேயர் அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம் இது.
மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் யமனை உதைத்துத் அருளிய தலமாதலால், சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுசு ஹோமம் [மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம்] ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும் படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம். இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.
சிறப்பு மிக்க இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை போற்றி அருணகிரிநாதர் “ஏட்டின் விதிப்படி” , சூலமென” எனத் தொடங்கும் இரண்டு திருப்புகழ் பாடல்களை பாடி தொழுகின்றார். இரு பாடல்களிலும் காலனைக் காயந்த கடவூர் பெருமானின் கருணையைப் போற்றி வேலவனை வணங்குகின்றார். காலனை உதைத்தது தேவியின் சீர்பாதமே என்று கூறுகின்றார்.
தல வரலாறு:
முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறியதால் இக்கோவில் அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.
தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் திருத்தலத்து இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்பது வரலாறு.
அமாவாசையை பவுர்ணமி என்று கூறிய அபிராமி பட்டருக்காக அபிராமி அன்னை அமாவாசையன்று முழு நிலவு காட்டிய தலம் திருக்கடையூர் திருத்தலம் .
தல அமைப்பு:
ஆகம அமைப்புகளுடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் மூலவராக அமிர்தகடேஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அமிர்தகடேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடக்கும்போது எமன் வீசிய பாசக்கயிற்றின் தடத்தை இன்றும் காணலாம். உற்சவராக காலசம்ஹார மூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.. காலசம்ஹார மூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். விநாயகரின் ஆறு படை வீடுகளில் இது 3-வது படை வீடு ஆகும். மேலும் 63 நாயன்மார்கள், அகத்தியர், மகாலட்சுமி, நடராஜர், வில்வ்வனேசர், மார்கண்டேயர், சந்திரசேகரர், குங்குலிய நாயனார், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இக்கோவிலில் நவக்கிரக சந்நிதி இல்லை. கிழக்கு திசையில் தனிக்கோவிலில் அபிராமி அம்மன் அழகிய வடிவோடு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இக்கோவில் பிரகாரத்தில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் பார்வதி அன்னை முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் ‘குகாம்பிகையாக’ அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
சித்திரை பிரம்மோற்சவம் (18 நாள்-எம சம்ஹாரம்), மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தை அமாவாசை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
ஆயுள் விருத்தி வேண்டி, எம பயம் அகல, மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் நடைபெற, செல்வம் செழிக்க, கல்யாணம், குழந்தை வேண்டி, கல்வி, கேள்வி, ஞானம் சிறக்க, நோய்கள் குணமாக, மனத் துயரம் அகல, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, வேண்டுதல்கள் நிறைவேற
நேர்த்திக்கடன்:
அங்கப் பிரதிட்சிணம், கல்யாண மாலை சாற்றுதல், குழந்தை தத்து கொடுத்தல், அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், திருப்பணி பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 4-9
எம பயம் போக்கும் மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 964 ஆயுள் விருத்தி தரும் மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் [திருப்புகழ் தலம்]
படம் 2 - 964 எம பயம் போக்கும் மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அன்னை
Comments
Post a Comment