கோவில் 963 - நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்

 🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-963 [திருப்புகழ் தலம்]

சர்வ தோஷங்கள் நிவர்த்தியடைய அருளும் நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்

27.1.2024 சனி


அருள்மிகு காயரோகணேஸ்வரர் திருக்கோவில்

திருப்புகழ் தலம்

நாகப்பட்டினம்-611001

நாகப்பட்டினம் மாவட்டம்

இருப்பிடம்: திருவாரூர் 28 கிமீ, காரைக்கால் 20 கிமீ


மூலவர்: காயரோகணேஸ்வரர்

அம்மன்: நீலாயதாட்சி

உற்சவர்: சந்திரசேகரர்

திருப்புகழ் நாயகர்: ஆறுமுகப்பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: மாமரம்

தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம்

புராணப்பெயர்கள்: நாகைக்காரோணம், திருநாகைக்காரோணம், சேஷபுரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (3)


தல மகிமை:

நாகப்பட்டினம் நகரின் மையத்தில் சர்வ தோஷங்கள் நிவர்த்தியருளும் காயரோகணேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், திருவாரூர் திருத்தலத்திலிருந்து 28 கிமீ பிரயாணம் செய்தாலும், காரைக்கால் திருத்தலத்திலிருந்து 20 கிமீ பிரயாணம் செய்தாலும் நாகப்பட்டினம் திருத்தலத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோவிலை அடையலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 82-வது தலமாகும். சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 145-வது திருத்தலமாகும். சுந்தரர் பதிகம் பாடி முத்தாரம், வைரமாலை, கத்தூரி, கமழ்சாந்து, குதிரை ஆகியவற்றை பரிசுகளாக இத்தலத்தில் பெற்றார். நாகைக்காரோணப் புராணம் 61 படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது.


ஏழு விடங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலத்தில் லிங்கம் மிகச் சிறியதாக உள்ளதால் விடங்கலிங்கம் என்று பெயர். தியாகராஜர் திருப்பெயர் சுந்தர விடங்கர் மற்றும் ஆடிய நடனம் பாராவாரதரங்க நடனம் ஆகும். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. 5 ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது [காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி, திருவாரூர் கமலாம்பிகை, மதுரை மீனாட்சி, நாகை நீலாயதாட்சி]. இத்தல ரதம் கண்ணாடித் தேராகும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அழுகணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலமாகும் 63-நாயன்மார்களில் சிறப்பு மிக்க அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு, முக்தியடைந்த தலம் இது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகப்பெருமான், திருமால், வசிஷ்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலம் இதுவாகும். இத்தலத்து தல விருட்சமான மாமரத்து கனி இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருப்பது சிறப்பம்சம். இம்மரத்தை தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது நந்தி வடிவில் தோற்றமளிப்பது அதிசய தகவல்.


இசை மும்மூர்த்திகளால் கீர்த்தனைகள் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. சனி தோஷ நிவர்த்திக்காக சனீஸ்வரனுக்கு பூஜை செய்து எள்ளு பாயாசம் நிவேதனம் செய்யப்படும் தலம். சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக சர்ப்ப ராஜன் பூஜித்த நாகாபரண கணபதியை வழிபடும் தலம். புத்திரதோஷ நிவர்த்திக்காக சுந்தர விடங்கர் தியாகராஜரை வழிபடும் தலமாகும். புனர்ப்பு தோஷம் எனப்படும் களத்திரதோஷம் நிவர்த்தி ஆகும்பொருட்டு காயாரோகணேஸ்வரரை வணங்கும் தலம் என வரலாறு கூறுகிறது.


இக்கோவிலில் அருணகிரிநாதர் முருகப்பெருமானை மூன்று திருப்புகழ் பாக்களால் பரவியுள்ளார். “ஓலமிட்டி”, “மார்புரம்”, விழுதாதென” என்று 3 திருப்புகழ் பாடல்கள் தொடங்குகின்றன. மூன்று பாடல்களிலும் கந்தவேளை போற்றிய அருணகிரிநாதப்பெருமான் நரசிம்மாவதாரம், ராமவதாரம் இரண்டையும் குறிப்பிடுகின்றார்.

வைகாசியில் பிரம்மோற்சவம் மற்றும் திருக்கல்யாணமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும். ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி, தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி 10 நாள் விழா சிறப்பாக நடைபெறும்.

தல வரலாறு:

புண்டரீக முனிவரை காயத்தோடு ஆரோகணம் செய்தருளியதால், இத்தல இறைவனுக்கு காயரோகணேஸ்வரர் என்ற திருப்பெயர் வந்தது. இத்தலத்திற்கு திருநாகைக்காரோணம் என்ற திருப்பெயர் வந்தது. மகாவிஷ்ணு இழந்த அழகு மீண்டும் கிடைக்க காயாரோகணரை பூஜித்த தலம். நாகர்கள் பூஜித்த தலமானதால் நாகப்பட்டினம் என்ற பெயர் வந்தது.


தல அமைப்பு:

கருவறையில் மூலவர் காயரோகணேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அழகுடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மூலவருக்கு பின்புறம் உள்ள சுவரில் சிவபெருமானின் சோமாஸ்கந்தர் வடிவம் உள்ளது. அம்பாள் சந்நிதியில் நீலாயதாட்சி அழகிய வடிவாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். மேலும் நாகாபரண கணபதி, மாவடி பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தியாகராஜர், சுந்தர விங்கர், 63 நாயன்மார்கள், புண்டரீக முனிவர், பிட்சாடனர், கோமேதக லிங்கம், அஷ்ட திக்பாலகர்கள், அதிபத்த நாயனார், சனீஸ்வரர், சிவபெருமானை பார்க்கும் படி நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் ஆறுமுகப்பெருமான் ஆறு முகங்கள், பன்னிரு திருக்கரங்கள் ஆயுதங்கள் கொண்டு மயில் மீதமர்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மேலும் தனி சந்நிதியில் மேலக்குமரன் ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். உற்சவர் மயிலுடன் நின்ற கோலத்தில் அருள்கின்றார். அருகிலேயே குமரன் கோவில் என்னும் மெய்கண்ட மூர்த்தி கோவிலில் மெய்கண்ட மூர்த்தி ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்டு வள்ளி, தெய்வானை சகிதம் பின்புறம் தோகை மயிலுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

வைகாசி பிரம்மோற்சவம் & திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷகம், திருக்கார்த்திகை, மாசி மகம், ஆடிப்பூரம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

சர்வ தோஷங்கள் நிவர்த்தி பெற, செய்த பாவத்திற்கு மன்னிப்பு, முக்தி கிடைக்க, வேண்டியது நிறைவேற


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், திருப்பணி பொருளுதவி


திறக்கும் நேரம்:

காலை 6-12.30 மாலை 5-9.30


செய்த பாவத்திற்கு மன்னிப்பு தந்தருளும் நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர், ஆறுமுகப்பெருமானை ஒரு சேர தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 963 சர்வ தோஷங்கள் நிவர்த்தியடைய அருளும் நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர் கோவில் திருப்புகழ் தெய்வம் ஆறுமுகப்பெருமான்


படம் 2 - 963 செய்த பாவத்திற்கு மன்னிப்பு தந்தருளும் நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்