கோவில் 962 - மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் கோவில் முருகப்பெருமான்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-962 [திருப்புகழ் தலம்]

ஞானத்தை அள்ளி வழங்கும் மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் கோவில் முருகப்பெருமான்

26.1.2024 வெள்ளி


அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்

திருப்புகழ் தலம்

சீர்காழி-609110

மயிலாடுதுறை மாவட்டம்

இருப்பிடம்: மயிலாடுதுறை 20 கிமீ, சிதம்பரம் 19 கிமீ


மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்

அம்மன்: பெரியநாயகி, திருநிலைநாயகி

உற்சவர்: சோமாஸ்கந்தர்

திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்

புராணப்பெயர்கள்: பிரம்மபுரம் தோணிபுரம், வேணுபுரம், பிரம்மபுரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர் (67), திருநாவுக்கரசர் (3), சுந்தரர் (1), மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் (14), கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்


தல மகிமை:

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரிலிருந்து வடக்கே 20 கிமீ தொலைவில் இருக்கும் சீர்காழி திருத்தலத்தில் ஞானங்களை அள்ளி வழங்கும் சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. சிதம்பரம் திருத்தலத்திலிருந்து தெற்கே 19 கிமீ பிரயாணம் செய்தாலும் சீர்காழி சட்டைநாதர் கோவிலை அடையலாம். சிறப்பு மிக்க சீர்காழி திருத்தலத்தில் மூலவர் சட்டைநாதர் அன்னை பெரியநாயகியுடன் அருளுகின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில், இது 14-வது தலமாகும். தேவார மூவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர், அருணகிரிநாதர்,கணநாதர், நம்பியாண்டார்நம்பிகள், பட்டினத்தார்,சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் என தலை சிறந்த மகான்கள் இத்தலத்து இறைவனை பாடல்கள் பாடியுள்ளனர். 64 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் அவதரித்த பெருமை மிக்க தலம் இது. சம்பந்தருக்கு 3 வயதில் உமை அன்னை ஞானப்பால் தந்து அருளிய தலம். பிரம்மன் வழிபட்ட தலம், புறா வடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறு பெற்ற தலம். இவ்வாறு பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது சிறப்பம்சம். திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன் விடையன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற சிறப்பு மிக்க தலமாகும்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை நோக்கி 14 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். அருணகிரிநாதர் முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்று கருதுகிறார். சம்பந்தரை தன் வழிபாட்டு கடவுளாகக் கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் அருளிய அற்புதங்களை குமரனின் அற்புதங்களாக திருப்புகழில் பல இடங்களில் போற்றி பாடுகின்றார். சீர்காழிக்குரிய 14 பாடல்களில் 7 பாடல்களில் திருஞானசம்பந்தரது பெருமை கூறப்பட்டுள்ளன. தனது திருப்புகழ் பாடலில் திருநீற்றின் சிறப்பை கூறுகின்றார்.

சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இவ்விழாவின் 2-ம் நாள் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் விமரிசையாக நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக்கோவிலில் அருள்பாலிக்கும் உமா மாகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பன்றும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி திருநாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோஹினி, ஐப்பசி சதயம் திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

ஊழிக்காலத்தில் பேரண்டத்தைச் சுற்றி கிடக்கும் பெருங்கடல் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமா மகேஸ்வரர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது நம்பிக்கை. இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்ற திருப்பெயர் பெற்ற தலம் என்பது தலவரலாறு.


தல அமைப்பு:

இந்தக் கோவில் ஒரு மாடக்கோவில் ஆகும். அகோவிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டிருக்கிறார். இரண்டு கோவில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்கு சோமாஸ்கந்தருக்கு தனிக் கோவில் உள்ளது.

கோவில் மூன்று தளங்களைக் கொண்டதாக இருக்கிறது. கோவிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததால் லிங்க உருவில் பிரம்மபுரிஸ்வரர் அருள்கின்றார். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். இந்த உற்சவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவில், பால்வடியும் முகத்தோடு இருப்பார். இவர் கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணத்தோடு இருப்பார். வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும் வகையில் இருக்கும்.

மாடக்கோவிலின் மேற் பிராகாரத்தில் விமானம் வடிவில் உள்ள கட்டு மலை மீது எளிதாக ஏறலாம். கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். வடபக்கத்தில் அம்பாள் திருநிலைநாயகி அருள்பாலிக்கின்றார். மலை மீது மூலவர் தோணியப்பர் பெரியநாயகி உடன் காட்சி அருள்கின்றார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராயச் சட்டைநாதர் அருள்பாலிக்கின்றார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்கள் ஆவர். சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் கோவிலின் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர்கள் உருவிலும் காட்சியருள்கிறார். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். மேலும் ரணம் தீர்த்த பிள்ளையார், விஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, அஷ்ட பைரவர்கள், நவக்கிரகங்கள், சட்டைமணி சித்தர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

இங்குள்ள திருஞானசம்பந்தரின் கோவிலில் செய்யப்படும் அர்ச்சனையானது முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லி செய்யப்படுகிறது. காரணம் முருகனது அவதார மூர்த்தமே ஞானசம்பந்தர் என்று கருத்து உள்ளதே காரணம். இத்தலத்தில் கருவறை வெளிப்பிரகாரத்தில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் மயில் பின் நிற்க நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் தெற்கு கோபுர வாயிலின் வெளிப்பிராகரத்தில் முருகபெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் மயில் பின் நிற்க நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். மேற்கு கோபுர வாயிலின் உட்பிராகரத்தில் சிங்காரவேலன் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு மயில் பின் நிற்க நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தேவியர் இல்லை. அம்மன் பிரகாரத்தில் உட்புறம் தனி சந்நிதியில் பாலசுப்பிரமணியன் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு மயில் பின் நிற்க நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தேவியர் இல்லை. வடக்கு கோபுரம் அம்பிகை கோவில் மண்டபத்தில் முருகபெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் மயில் பின் நிற்க நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

திருவிழா:

சித்திரை பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷகம், திருக்கார்த்திகை, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பு, நவராத்திரி, தை அமாவாசை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

ஞானம் பெற, வழக்குகளில் வெற்றி பெற, சட்ட சிக்கல்கள் தீர, தோஷங்கள் நீங்க, மறு பிறவி வேண்டாமை, குழந்தைப்பேறு கிட்ட


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், திருப்பணி பொருளுதவி


திறக்கும் நேரம்:

காலை 6-1 மாலை 4-9


வழக்குகளில் வெற்றி பெற அருளும் மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர், முருகப்பெருமான் இருவரையும் போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 962 ஞானத்தை அள்ளி வழங்கும் மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர்


படம் 2 - 962 வழக்குகளில் வெற்றி பெற அருளும் மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் கோவில் திருஞானசம்பந்தர் பால் உண்ணுதல்





Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்