கோவில் 937 - தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் ஆறுமுகம்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-937 [திருப்புகழ் தலம்]
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் ஆறுமுகம்
1.1.2024 திங்கள்
அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில் [TM018015]
திருப்புகழ் தலம்
திருவிடைமருதூர்-612104
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: கும்பகோணம் 9 கிமீ
மூலவர்: மகாலிங்க சுவாமி, மகாலிங்கேஸ்வரர்
அம்மன்: பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை
திருப்புகழ் நாயகர்: ஆறுமுகம்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மருதமரம்
தீர்த்தம்: காருண்யாமிர்த தீர்த்தம், காவிரி
புராணப்பெயர்: மத்தியார்ஜுனம், திருஇடைமருதூர்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் (5), திருநாவுக்கரசர் (5), சம்பந்தர் (1), அருணகிரிநாதர் (4), கருவூர் தேவர் (திருவிசைப்பா), பட்டினத்தார்
தல மகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூரில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சம்பந்தர் மூவராலும் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 30-வது தலமாகும். சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 93-வது தேவாரத்தலமாகும்.
இந்தியாவில் மருதமரத்தைத் தல விருட்சமாகக் கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோவில்கள் மூன்று உள்ளன. முதலாவது கோவில் ஆந்திரப்பிரதேசம் கர்நூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம். இரண்டாவது மத்தியார்ஜுனம் என்ற கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் கோவில். மூன்றாவது கோவில் புடார்சுனம் எனப்படுகின்ற திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம] அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன. இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும், இத்தலத்தில் உள்ள அசுவ மேதத் திருச்சுற்றை (முதல் சுற்று) வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம். கொடுமுடித் திருச்சுற்றை (2-ம் சுற்று) வலம் வருவோர் கைலாய மலையை வலம் செய்த பலனை பெறுவர். மூன்றாவது பிரகாரம் வல, வருவோருக்கு மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் "பிரம்மஹத்தி" தோஷ நிவாரண தலம் ஆகும். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால், இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கு அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர் ஆகும். பட்டினத்தார் மற்றும் அவர் சீடர் பத்திரகிரியார் ஆகியோருக்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சந்நிதிகள் உள்ளன.
அருணகிரிநாதர் “அறுகுநுனி”, “இலகுகுழை”, “படியைஅள”, “புழுகொடுபனி” என்று நான்கு திருப்புகழ் பாடல்களால் திருவிடைமருதூர் முருகப்பெருமானை போற்றிப் பாடியுள்ளார். மகாலிங்க சுவாமி பெருமைக்கேற்பப் பெரிய திருப்புகழ் ஒன்றை “அறுகுநுனி” என்று தொடங்கி 50 சீர் கொண்டதாகப் பாடுகிறார். இதில் வாழ்க்கை துன்பங்களை விளக்கி, இத்தகைய புல்லிய வாழ்வை உனது அடியார்கள் பெற்றால், உலகம் உன்னை ஏசிடாதோ, பாசநாசர் என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கிறார்.
தல வரலாறு:
வரகுண பாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறார். அவ்வாறு செல்லும் போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர, குதிரையின் வேகத்தை அடங்குவதற்குள் குதிரையின் காலில் விழுந்து விதிப் பயனால் அந்தணர் உயிர் விடுகிறார். வரகுண பாண்டியனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். கிழக்கு வாசல் வழியே உள்ளே நுழைந்து மகாலிங்க சுவாமியை வழிபட்ட உடன் தோஷம் நீங்குகிறது. மீண்டும் தோஷம் பீடிக்காத வகையில் மேற்கே (பின்வாசல்) அம்மன் சந்நிதி கோபுரம் வழியே சென்றார் என்கின்றன புராணங்கள். இன்றும் பக்தர்கள் அவ்வாறே தங்கள் பிணி, தோஷம் நீங்க பின்வாசல் வழியே வெளியே செல்கின்றனர்.
தல அமைப்பு:
இத்தலத்தில் நந்தி மிகப் பெரியது. கருவறையில் மூலவர் மகாலிங்க சுவாமி சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இங்கு இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு, பூஜா விதிகளை அகத்தியர், சப்தரிஷிகள் மற்றும் உள்ள முனிவர்களுக்கு போதித்து அருளினார். அம்பாள் பெருமுலையாள் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருப்பெயரில் அருள்கின்றார். தட்சிணாமூர்த்தி துணைவியுடன் வீற்றிருந்து அருள்வது விசேஷம். நவக்கிரகங்கள் ‘ப’ வடிவில் வீற்றிருந்து அருள்கின்றனர். சிவப்பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் இக்கோவிலின் அருகே அமையப் பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவை: விநாயகர்-திருவலஞ்சுழி, முருகர்-சுவாமிமலை, நடராஜர்-சிதம்பரம், தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி, சண்டிகேஸ்வரர்-திருசேய்ஞலூர், பைரவர்-சீர்காழி, நவக்கிரகம்-சூரியனார் கோவில் ஆகும்.
இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் மகாலிங்க சுவாமி சந்நிதியின் மேற்கே திருப்புகழ் தெய்வம் ஆறுமுகம் ஆறு முகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீதம்ர்ந்து வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சுவாமி தமது இடது திருப்பாதத்தை மடித்து மயில் மீதமர்ந்து, வலது திருப்பாதத்தை தொங்க விட்டப்படி மயிலின் தோகை மீது வைத்து அருள்கின்றார். மயிலின் முகம் ஈசான திசையில் தலை சாய்ந்து விளங்குவது சிறப்பு. மேலும் அம்பாள் சந்நிதில் நுழைவாயிலில் ஆறுமுகப்பெருமான் 6 முகங்கள், 12 கரங்கள் கொண்டு, மயில் மீதமர்ந்து தேவியருடன் அருள்பாலிக்கின்றார். இரண்டு உற்சவர்கள் இருப்பது சிறப்பு. ஒரு உற்சவர் மேற்கூறிய அழகிய கோலத்திலும், மற்றொரு உற்சவர் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டு இரு தேவியருடன் அருள்கின்றார். மேற்கு கோபுரத்தை அடுத்து முருகன் தனிக் கோவிலில் அருள்பாலிக்கின்றார். பிரணவ பிரகாரத்தில் வடமேற்கில் முருகன் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம் (10 நாள்), வைகாசி வசந்த உற்சவம் (10 நாள்), திருவாதிரை, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிப்பூரம், கந்த சஷ்டி, பிரதோஷம், தீபாவளி, பொங்கல், ஆங்கில, தமிழ் புத்தாணடு தினம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சித்த சுவாதீனமின்மை, மன நோய்கள் குணமாக, திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டி, சுகப்பிரசவம் ஆக, மனத்துயரம் போக்க, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு பெற, வேண்டுதல்கள் நிறைவேற
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
சித்த சுவாதீனமின்மை, மன நோய்கள் குணமாக அருளும் தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி, ஆறுமுகம் திருவடிகள் வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 937 பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
படம் 2 - 937 சித்த சுவாதீனமின்மை, மன நோய்கள் குணமாக அருளும் தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி
Comments
Post a Comment