கோவில் 936 - தஞ்சாவூர் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் முருகன்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-936 [திருப்புகழ் தலம்]
நரம்புப் பிரச்னைகளை தீர்த்து அருளும் தஞ்சாவூர் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் முருகன்
31.12.2023 ஞாயிறு
அருள்மிகு கம்பகரேஸ்வரர் திருக்கோவில் [TM018037]
திருப்புகழ் தலம்
திருபுவனம்-612103
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: கும்பகோணம் 6 கிமீ
மூலவர்: கம்பகரேஸ்வரர், சரபேஸ்வரர், நடுக்கம் தீர்த்த பெருமான்
அம்மன்: அறம் வளர்த்த நாயகி, தர்மசம்பர்த்தினி
திருப்புகழ் நாயகர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சரப தீர்த்தம்
புராணப்பெயர்: திருப்புவனேஸ்வரம்
பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 6 கிமீ தொலைவில் இருக்கும் திருபுவனம் திருத்தலத்தில் நடுக்கங்கள் தீர்க்கும், நரம்புப் பிரச்னைகளை குணமாக்கும் கம்பகரேஸ்வரர் (நடுக்கம் தீர்த்த பெருமான்) கோவில் அமைந்துள்ளது. நரசிம்மர், பிரகலாதன், திருமால், இந்திரன் போன்றோர்களின் நடுக்கத்தை நீக்கிய பெருமான் இவர். இவருக்குத் திரிபுவனமுடையார், திரிலோக நாதர், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற திருநாமங்களும் உண்டு. இக்கோவிலில் 7 அடி உயர சரபேஸ்வரர் தனி சந்நிதியில் அருளுகின்றார். இங்குள்ள அம்பிகை தர்மசம்பர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி. இவள் 32 வித அறங்களைச் செய்தவள் என்பதால் சகலவிதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவள் என்று போற்றப்படுகிறாள்.
இத்தலத்தில் அருணகிரிநாதர் “தனுநுதல்” என்ற திருப்புகழ் பாடலால் திருபுவனம் முருகனைப் பரவிப் போற்றியுள்ளார். கம்பகரேசுவரர் திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டியது என்கிறது 1178-ம் ஆண்டுக் கல்வெட்டு. இது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், தாராசுரம் கோவில் ஆகிய கோவில்களின் அமைப்பை அப்படியே கொண்டுள்ளது. இது ஒரு தேவார வைப்புத் தலமாகும்.
பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம் நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். மேலும் ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு வந்து ஈசனையும், சரபேஸ்வரரையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஞாயிறு ராகு காலத்தில் 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து சரபேஸ்வரரை வணங்கினால் எல்லாவித அச்சங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகளின் பிரச்னைகள், சத்ரு பயம், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் என்ற மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளை திரிபுராந்தகராக ஈசன் அழித்ததால் பெரு நெருப்பு உண்டானது. இதனால் சகல ஜீவராசிகளும் நடுங்கி அச்சம் கொண்டன. அவற்றின் நடுக்கம் தீர்த்த ஈசனே கம்பகரேஸ்வரர் என்றானார் என்கிறது புராணம்.
வரகுண பாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறார். அவ்வாறு செல்லும் போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர, குதிரையின் வேகத்தை அடங்குவதற்குள் குதிரையின் காலில் விழுந்து விதிப் பயனால் அந்தணர் உயிர் விடுகிறார். வரகுண பாண்டியனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். தன் தோஷம் நீங்கியவுடன் மன்னன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேஸ்வரர் போக்குகிறார். மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை போக்கியதால் நடுக்கம் தீர்த்த நாயகர் என பெயர் இறைவனுக்கு ஏற்படுகிறது. முன் வாசல் வழியே நுழைந்து ஈசனை வணங்கி, நடுக்கம் தீர்ந்த மன்னன், மீண்டும் தோஷமும், நடுக்கமும் பீடிக்காத வகையில் பின்வாசல் வழியே சென்றான் என்கின்றன புராணங்கள். இன்றும் அவ்வாறே நோயுற்றவர்கள் பின்வாசல் வழியே வெளியே செல்கின்றனர்.
அசுரனின் குருதியைக் குடித்ததால், அடக்க முடியாத சினத்தோடு நரசிம்மர் சகலரையும் அச்சுறுத்த, தேவர்கள் வேண்டுதலுக்கேற்ப ஈசன் வீரபத்திரரை அனுப்பினார். அவரும் சரப பட்சி வடிவில் ஸ்ரீசரபேஸ்வரராக வந்து நரசிம்மரை இங்கே அடக்கினார் என்கிறது தலவரலாறு. அப்போது அச்சம் கொண்ட பிரகலாதனின் அச்சத்தையும் ஈசன் நீக்கினார் என்கிறது புராணம்.
தல அமைப்பு:
ஏழு நிலைகள் கொண்ட பிரமாண்ட கோபுரம், சச்சிதானந்த விமானம் கொண்ட கருவறை, மண்டபங்கள், எண்ணற்ற சந்நிதிகள் என ஆலயம் பரந்து விரிந்துள்ளது. ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் கொண்டுள்ளது. கருவறை சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது. கருவறையில் மூலவர் கம்பகரேஸ்வரர் வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். இடப்புறம் அம்பாள் அறம் வளர்த்த நாயகி (தர்மசம்பர்த்தினி) பொலிவுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சந்திரன் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்கின்றனர்.
இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி வேறெங்கும் காண முடியாத பிரமாண்டமும் அழகும் கொண்டது. ஏழு அடி உயரம் கொண்டு சரபேஸ்வரர் தெற்கு நோக்கி காட்சியருள்கின்றார். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹா சக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர். இன்று திருபுவனம் என்றாலே சரபேஸ்வரர் கோயில் என்று கூறுமளவுக்குப் பிரசித்தி பெற்ற கோவில்.
இத்தலத்தில் திருப்புகழ் தெய்வம் முருகன் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவர் மிக அழகு. தைக்கிருத்திகையில் 108 காவடிகள் எடுத்தல் சிறப்பு.
திருவிழா:
பங்குனி உத்திரம் (15 நாள்), சரப உற்சவம், திருவாதிரை, மகா சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைக்கிருத்திகை தைப்பூசம், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி, பொங்கல், ஆங்கில, தமிழ் புத்தாணடு தினம், கிருத்திகை, சஷ்டி, ஞாயிறு
பிரார்த்தனை:
நரம்புப் பிரச்னைகள் குணமாக, நடுக்கங்கள் நீங்க, பயம், எதிரிகள் தொல்லை ஒழிய, கடன் தீர, அறம் வளர, வழக்கில் வெற்றி கிட்ட, நல்லன அருள, மனக்கஷ்டங்கள், தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
எதிரிகளின் தொல்லையை ஒழிக்கும் தஞ்சாவூர் திருபுவனம் கம்பகரேஸ்வரர் மற்றும் முருகனை பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 936 நரம்புப் பிரச்னைகளை தீர்த்து அருளும் தஞ்சாவூர் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் முருகன்
Comments
Post a Comment