கோவில் 935 - இகபர சௌபாக்கியம் அருளும் தஞ்சாவூர் திருவையாறு சப்தஸ்தான கோவில்கள் (ஏழு திருப்பதி) முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-935 [திருப்புகழ் தலம்]
இகபர சௌபாக்கியம் அருளும் தஞ்சாவூர் திருவையாறு சப்தஸ்தான கோவில்கள் (ஏழு திருப்பதி) முருகப்பெருமான்
30.12.2023 சனி
அருள்மிகு திருவையாறு சப்தஸ்தான திருக்கோவில்கள்
திருப்புகழ் தலம் [விவரங்கள் கீழே]
தஞ்சாவூர் மாவட்டம்
மூலவர்: [விவரங்கள் கீழே]
அம்மன்: [விவரங்கள் கீழே]
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் [[விவரங்கள் கீழே]
தேவியர்: வள்ளி, தெய்வானை
பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1) மற்றும் விவரங்கள் கீழே
தல மகிமை:
சப்த+ஸ்தானம் என்றால் ஏழு புனித இடங்கள் எனப்படுகிறது. இவை சப்தஸ்தானத் தலங்கள், சப்தஸ்தானக் கோவில்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார, திருப்புகழ் பாடல் பெற்ற முக்கியமான சப்தஸ்தானத் தலங்கள் திருவையாறு சப்தஸ்தானத் தலங்கள் ஆகும். அவை திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகும். இவை ஏழு திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். முதலில் திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தினியும் உலாக் கிளம்பி, தொடர்புடைய ஆறு தலங்களுக்கும் செல்வர். அவ்வாறு பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோவிலைச் சேர்ந்த இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் இப்பல்லக்குடன் இணைந்துகொள்ளும். தில்லைஸ்தானம் கோவிலின் அருகில் காவிரியாற்றில் வாணவேடிக்கை நடைபெறும். ஏழு பல்லக்குகளும் அந்தந்த இறைவன், இறைவியருடன் வருவதை பக்தர்கள் கண்டு களிப்பர். பின்னர் பூச்சொரிதல் நிகழ்வு நடக்கும். அப்போது ஒரு பொம்மை அந்தந்த பல்லக்குகளில் உள்ள இறைவன், இறைவியருக்கு பூப்போடும். இந்நிகழ்விற்குப் பின் அனைத்துப் பல்லக்குகளும் தத்தம் கோவிலுக்குத் திரும்பும்.
திருவையாறு சப்தஸ்தான விழாவை கண்டு களித்த அருணகிரிநாதப்பெருமான் இந்த ஏழு ஊர்களையும் சேர்த்து “மருவிலாவிடு” என்றுத் தொடங்கும் திருப்புகழ் பாடலில் சுட்டிக் காட்டப்படும் திருத்தலங்கள் வருமாறு
1. திருவின் மாமரமார் பழனப்பதி – திருப்பழனம்
2. அயிலுசோறவையாளு துறைப்பதி – திருச்சோற்றுத்துறை
3. திசையின் நான்மறை தேடிய முற்குடி – திருவேதிக்குடி
4. விதியாதிச் சிரமும் மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி – திருக்கண்டியூர்
5. பதுமநாயகன் வாழ்பதி – திருப்பூந்துருத்தி
6. நெய்ப்பதி – திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
7. திருவையாற்ய்டன் ஏழு திருப்பதி பெருமானே – திருவையாறு
இவற்றுள் தில்லைஸ்தானம் (ஆலயம் எண் 926), திருவையாறு (ஆலயம் எண் 933), திருப்பூந்துருத்தி (ஆலயம் எண் 934) இம்மூன்று தலங்களுக்கும் தனித்தனி திருப்புகழ் பாடல்கள் உள்ளன. அத்தலங்கள் விவரங்கள் மேலே காட்டிய எண்களில் உள்ளன, எஞ்சிய நான்கு தலங்களின் அமைப்புகள், சிறப்புகள் மற்றும் முருகப்பெருமான் திருக்கோலங்களை மட்டும் இங்கே காண்போம்.
தல வரலாறு:
திருவையாற்றைத் தலைமைக் கோவிலிடமாகக் கொண்டு உள்ள இக்கோவில்கள் ஏழூர்க் கோவில்கள் என்றும், சப்தரிஷிகள் ஆசிரமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சப்தரிஷிகளான காசியபர் (திருக்கண்டியூர்), கௌதமர் (திருப்பூந்துருத்தி), ஆங்கிரசர் (திருச்சோற்றுத்துறை), குத்ஸர் (திருப்பழனம்) அத்திரி (திருவேதிகுடி), பிருகு (திருநெய்த்தானம்), வசிட்டர் (திருவையாறு) ஆகியோர் இங்கு ஆசிரமங்கள் அமைத்து ஈசனை வழிபட்டதாகக் கூறுவர். திருவையாறு ஐயாறப்பர், நந்திதேவர்-சுயசாம்பிகை தம்பதியை அழைத்துக் கொண்டு, அனைத்து முனிவர்களின் ஆசியைப் பெற வேண்டி இவ்வேழு ஆசிரமங்களுக்கும் சென்றதாகக் கூறுவர். சப்தஸ்தான விழா இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக நடைபெறும் பெறு விழா
சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக நடைபெறுவது நந்திதேவர் விழா ஆகும். இது முக்கியத்துவம் வாய்ந்தது. சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். அவருக்கு திருமழபாடியில் தோன்றிய சுயசாம்பிகையை திருமணம் செய்து வைக்க திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தினியும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்கு பல்லக்கில் செல்வர். அன்று இரவே புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து திருவையாற்றை அடைவர்.
தல அமைப்பு:
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்-613204- மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி, திருப்புகழ் நாயகன்: சுப்பிரமணியர், தேவியர்: வள்ளி, தெய்வானை, தல விருட்சம்: கதலி, வில்வம், தீர்த்தம்: காவிரி. பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர். திருவையாற்றுக்கு கிழக்கில் 3 கிமீ தொலைவில் உள்ளது. சப்தஸ்தான தலங்களில் இது இரண்டாவது தலமாகும். திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் மூலவருக்கு பின்னால் தனி சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார்.
திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்-613202- மூலவர்: ஓதவனேஸ்வரர் (சோற்றுத்துறைநாதர்), அம்பாள்: அன்னபூரணி, திருப்புகழ் நாயகன்: ஆறுமுகம், தல விருட்சம்: வில்வம், தீர்த்தம்: காவிரி. குடமுருட்டி, சூரிய தீர்த்தம், பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர். திருக்கண்டியூருக்கு கிழக்கில் 2 கிமீ தொலைவில் உள்ளது. சப்தஸ்தான தலங்களில் இது மூன்றாவது தலமாகும். அருளாளன் என்ற அந்தணருக்கு எடுக்க எடுக்க குறையாத சோறு அளித்த தலம். எனவே இறைவனுக்கு பெயர் சோற்றுத்துறைநாதர். அம்பாள் அன்னபூரணி. திருப்புகழ் நாயகன்: ஆறுமுகப்பெருமான் ஆறு முகங்கள், பன்னிரு திருக்கரங்கள் கொண்டு தனி சந்நிதியில் மயில் மீது கம்பீரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இவரது உற்சவ மூர்த்தி திருக்கண்டியூரில் உள்ளது.
திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவில்-613202- மூலவர்: வேதபுரீஸ்வரர் (வாழைமடுநாதர்), அம்பாள்: மங்கையர்க்கரசி, திருப்புகழ் நாயகன்: முருகன், தேவியர்: வள்ளி, தெய்வானை, தல விருட்சம்: வில்வம், தீர்த்தம்: வேத தீர்த்தம், வைத தீர்த்தம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர். திருக்கண்டியூருக்கு தென்கிழக்கில் 4 கிமீ தொலைவில் உள்ளது. சப்தஸ்தான தலங்களில் இது நான்காவது தலமாகும். இத்தலத்தில் திருப்புகழ் தெய்வம் முருகன் ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்டு திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.
திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீஸ்வரர் கோவில்--613202- மூலவர்: பிரமசிரக்கண்டீஸ்வரர் (வீர்ட்டேஸ்வரர்), அம்பாள்: மங்களாம்பிகை, திருப்புகழ் நாயகன்: சுப்பிரமணியர், தேவியர்: வள்ளி, தெய்வானை, தல விருட்சம்: வில்வம், தீர்த்தம்: நந்தி தீர்த்தம், குடமுருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர். திருவையாறிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. சப்தஸ்தான தலங்களில் இது ஐந்தாவது தலமாகும். பிரம்மாவின் சிரங்கொய்த தலம் இது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. பிரமசிரக்கண்டீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்கின்றார். திருப்புகழ் நாயகன் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
சப்த ஸ்தான பெருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
இகபர சௌபாக்கியம் வேண்டி, நினைத்தது நிறைவேற, திருமணம் வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, பிணிகள் அகல, நோய்கள் குணமாக, செல்வம் சேர, தோஷங்கள் நீங்க, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 5-8 (பொதுவாக 4 கோவில்கள்)
தோஷங்கள் நீங்க அருளும் தஞ்சாவூர் திருவையாறு சப்தஸ்தான கோவில்கள் (ஏழு திருப்பதி) சிவபெருமான், முருகப்பெருமானை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 935 இகபர சௌபாக்கியம் அருளும் தஞ்சாவூர் திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில் (சப்தஸ்தான கோவில்கள்) ஆறுமுகப்பெருமான்
படம் 2 - 935 தோஷங்கள் நீங்க அருளும் தஞ்சாவூர் திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீஸ்வரர் (சப்தஸ்தான கோவில்)
Comments
Post a Comment