கோவில் 934 - தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவில் முருகன்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-934 [திருப்புகழ் தலம்]
பித்ருக்கள் ஆசிகள் வழங்கும் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவில் முருகன்
29.12.2023 வெள்ளி
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் [TM014156]
திருப்புகழ் தலம்
திருப்பூந்துருத்தி-613103
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: தஞ்சாவூர் 13 கிமீ, திருக்கண்டியூர் 3 கிமீ
மூலவர்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர், பூந்துருத்தி உடையாா், பூந்துருத்தி நாயனாா், புஷ்பவன ஈஸ்வரா்
அம்மன்: சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி
திருப்புகழ் நாயகர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காசிப தீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்
புராணப்பெயர்கள்: திருப்பந்துருத்தி, பூந்துருத்தி, மேலைத்திருப்பூந்துருத்தி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் (1), ராமலிங்க அடிகளார்
தல மகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 13 கிமீ தொலைவில் இருக்கும் சிறந்த சிவாலயமான திருப்பூந்துருத்தியில் பித்ருக்கள் ஆசிகள் வழங்கும் புஷ்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 11-வது சிவஸ்தலமாக அமைந்துள்ளது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் இது 74-வது தேவாரத்தலமாகும். காவிரி நதிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இந்த தலம் துருத்தி எனப்பட்டது. இது பித்ருசாப நிவர்த்தி தலம். பித்ரு சாபம் நீங்க அமாவாசையன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டால் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருநாவுக்கரசருக்கு இறைவன் திருக்காட்சி அருளிய தலம் இது. அப்பர் இங்கு திருமடம் அமைத்து உழவாரத் தொண்டு செய்தார். திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம் இது. திருஞானசம்பந்தர் வந்த பல்லக்கை அவர் அறியா வண்ணம், திருநாவுக்கரசர் தாங்கிய தலம் என பல சிறப்புகளை உடையது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை பூந்துருத்தி உடையாா், பூந்துருத்தி நாயனாா், புஷ்பவன ஈஸ்வரா் என்று பல பெயா்களைக் கொண்டு அழைத்து மகிழ்கின்றனா். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், இந்திரன், திருமால், லட்சுமி, சூரியன், காசிபர், கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர், தேவர்கள், அகத்தியர் ஆகியோர் வழிபட்டனர்.
சப்தஸ்தானத் தலங்களுள் இது 6-வது தலமாகும். மீதி ஆறு தலங்கள் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருநெய்த்தானம் ஆகும். சித்திரை மாதத்தில் திருவையாறு சப்த ஸ்தான பல்லக்கு இத்தலம் வரும்.
இத்திருத்தலத்து முருகனைப் போற்றி அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “வீண்கு பச்சிள” என்று தொடங்கும் பாடலில் தீய பழக்கங்களை போக்கி, மெய்ஞானம் தந்தருளுமாறு பூந்திருத்தி முருகனை வேண்டுகிறார்.
தல வரலாறு:
கௌதம முனிவரின் சாபத்தால் இந்திரன் உடம்பெல்லாம் கண்ணாக தோன்றிய நோய் குணமாக பல தலங்களுக்கும் சென்று, இறுதியில் இத்தலத்து பூவின் நாயகனாய் விளங்கிய சிவபெருமானை வணங்கி தூய நல்லுடல் பெற்றான் என்பதால் இத்தலத்திற்கு பூந்துருத்தி என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. இதனை ‘வானேருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை’ என்ற திருநாவுக்கரசர் பாடல் மூலம் அறியலாம். இத்தலத்து இறைவனை திருமாலும் திருமகளும் வந்து வழிபட்டனர். பூமகள் வழிபட்டதால் பூந்துருத்தி என பெயர் பெற்றது என்பர்.
திருஞானசம்பந்தா் இத்தலத்திற்கு வந்த போது, திருநாவுக்கரசர் (அப்பா் சுவாமிகள்) உழவாரப் பணி செய்த இடக்தில் தனது கால் பதிய மனமில்லை எனக் கூறி திருக்கோவிலின் உள்ளே நுழையாமல் கோவிலுக்கு வெளியே இருந்து இறைவனை தாிசித்தாா். திருஞானசம்பந்தா் வழிபடும் போது வழிப்பாட்டிற்கு நந்தி இடையூறாக இருக்கும் எனக் கருதி புஷ்பவனேஸ்வரர் நந்தியை சற்று வலப்புறமாக விலகி இருக்குமாறு ஆணையிடுகின்றாா். நந்தியும் சற்று விலகி அமா்ந்து திருஞானசம்பந்தாின் வழிப்பாட்டிற்கு வழிவிட்டமா்ந்தது. இவ்வாறு நந்தியெம்பெருமான் சற்று விலகி அமா்ந்த திருத்தலமாகும் இது. இக்கோவிலில் எழுந்தருளியுளள நந்தியெம்பெருமான் அனைத்து இடங்களிலும் சற்று விலகியே இருப்பதைக் காணலாம். திருஞானசம்பந்தர் வந்த பல்லக்கை, அவர் அறியாத வண்ணம், திருநாவுக்கரசர் தாங்கிய தலமும் இது என்பது வரலாறு. அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம்.
தல அமைப்பு:
இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. கோவிலுக்கு வெளியே சிறப்பு வாய்ந்த அப்பர் மடம் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம். நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் வீணா தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிச்சாடனார், ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராஜ சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், அருகில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியுருடன் சுந்தரர் அருள்கின்றனர். மேலும் ஆதி விநாயகர், தென் கைலாயப்பெருமான், மகாலட்சுமி, நடராஜர், சோமாஸ்கந்தர் காசி விஸ்வநாதர், உள்ளிட்ட தெய்வங்கள் அருள்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியில் சௌந்தரநாயகி (அழகாலமர்ந்த நாயகி) அருள்பாலிக்கின்றார். இங்கு வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது.
திருப்புகழ் தெய்வம் முருகன் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மயில் பின்புறம் உள்ளது. உற்சவரும் மூலவர் போன்று அழகு திருமேனியுடன் அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
சப்த ஸ்தான பெருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி, பாரி வேட்டை, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
பித்ருக்கள் ஆசிகள் பெற, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க, சாபம் நீங்க, திருமணம் நடைபெற, குழந்தை வேண்டி
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6.30-11.30 மாலை 4.30-8.30
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க அருளும் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர், முருகன் திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 934 பித்ருக்கள் ஆசிகள் வழங்கும் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவில் முருகன்
படம் 2 - 934 கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க அருளும் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர்
Comments
Post a Comment