கோவில் 933 - தஞ்சாவூர் திருவையாறு ஐயாறப்பர் கோவில் சுப்பிரமணியர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-933 [திருப்புகழ் தலம்]
கைலாயம் சென்ற பலன் கிடைக்க அருளும் தஞ்சாவூர் திருவையாறு ஐயாறப்பர் கோவில் சுப்பிரமணியர்
28.12.2023 வியாழன்
அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருவையாறு-613204
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: தஞ்சாவூர் 11 கிமீ
மூலவர்: ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர்
அம்மன்: அறம் வளர்த்த நாயகி, தருமசம்வர்த்தினி
திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணியர் (வில்லேந்திய வேலர்)
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: காவிரி, காவிரி, சூரிய புஷ்கரணி தீர்த்தம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் (5), திருநாவுக்கரசர் (12), சுந்தரர் (1), அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரிலிருந்து 11 கிமீ தொலைவில் திருவையாறு திருத்தலத்தில் கைலாயம் சென்ற பலன் கிடைக்க அருளும் ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் மூன்றாம் பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோவிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. தெற்கு வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றுவது சிறப்பம்சம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 51-வது தலமாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்மசக்தி பீடம் ஆகும். காவிரிக்கரையின் அருகே மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா சிறப்பம்சம்.
திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி அளித்த தலம். சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கும், சேரமான் பெருமாள் நாயனாருக்கும் காவிரியில் வழி விட்டு, ஐயாரப்பர் திருக்காட்சியளித்தத் தலம் இதுவாகும். காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஐந்து நதிகள் பாய்வதால் ஐயாறு, திருவையாறு [திரு+ஐ+ஆறு], பஞ்சநதி என்பது தலத்தின் பெயராக உள்ளது. அதனால் சுவாமி ஐயாறப்பர் என்று அழைக்கப்படுகிறார்.
சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. மீதி ஆறு தலங்கள் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகும். சிவபெருமான் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமழபாடியில் நந்திதேவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இதையொட்டியே சப்தஸ்தானத் திருவிழா நடைபெறுகிறது. ஐயாரப்பர் அறம் வளர்த்த நாயகியுடனும், நந்திகேஸ்வரர் அவரது துணைவியாருடனும் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்று வருவர்.
இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் வழிபட்டு ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “சொரியுமாமுகிலோ” என்று தொடங்கும் பாடலில் இங்குள்ள வில்லேந்திய வேலனை பார்க்கும் போது ராமர் ஞாபகம் வருவதால், ராமனின் வில் வீரத்தைப் பாடி அவனது மருகனே என்று போற்றுகிறார்.
தல வரலாறு:
சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் செப்பேசன் என்ற குழந்தை கிடைத்தது. செப்பேசன் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தார். ஐயாறப்பரின் பெருங்கருணையால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரை நீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிஷேகம் செய்யப் பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும், நந்தீசர் (நந்தித் தேவர்) எனும் தீட்சா நாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் தகுதியும் அருளினார். ஐயாறப்பர் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகள் சுய சாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தில் திருமணம் செய்து வைத்தார். அதன் தொடர்பான விழா சப்தஸ்தான விழாவாக இன்றும் நடைபெறுகிறது.
தல அமைப்பு:
சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு. ஐந்து திருச்சுற்றுகள் கொண்ட இக்கோவிலில் சுவாமி சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. கருவறையில் மூலவர் ஐயாறப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிருத்வி (மண்) லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சந்நிதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உமாமகேஸ்வரர், சங்கர நாராயணர், பரிவார மூர்த்தங்கள், பிரம்ம தேவர், திரிபுரசுந்தரி எழுந்தருளியுள்ளனர். சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தட்சிணாமூர்த்தி' என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் அருள்கின்றார், அருகில் ஜப்பேசுர மண்டபம் உள்ளது. அதில் பஞ்சபூத லிங்கங்கள், சப்த மாதாக்கள், ஆதிவிநாயகர், நவக்கிரகங்கள் எழுந்தருளியுள்ளனர். கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. பூலோக கைலாயமாகிய இங்கு தெற்கு கோபுரவாயில் வழியாக இறைவன் திருவிழாவின் போது வீதி உலா வருவார்.
நான்காம் திருச்சுற்றில் சூரிய புஷ்கரணி குளம், அப்பர் கயிலையைக் கண்டு தரிசித்த தென்கயிலாயமும், வடகயிலாயம் என்னும் ஓலோக மாதேவிச்சுரமும் உள்ளன. தெற்கு கோபுர வாயிலில் ஆட்கொண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் திருக்கோலத்தில் உள்ளார். இங்கு குங்கிலியமிட்டு வழிபாடு செய்கின்றனர். குங்கிலியப் புகை பரவும் எல்லை வரை விஷம், எமபயம் ஏதுமில்லை என்பது நம்பிக்கை. ஆட்கொண்டேசரே மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். நவக்கிரகங்களில் இது சூரிய தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். சூரியன் இந்த கோவிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.
இறைவி அறம் வளர்த்த நாயகி நின்ற திருக்கோலத்தில் மேல்கரங்களில் சங்கு சக்கரத்துடன், இடக்கரத்தை இடுப்பில் ஊன்றி விஷ்ணு ரூபமாகக் காட்சி தந்து அருள்கிறார். காஞ்சி காமாட்சி போன்று இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, 32 அறங்களை செய்தமையால் அறம்வளர்த்த நாயகி என்றும் தர்மசம்வர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறார், இவ்வாலயத்தில் பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை, இங்குள்ள தியான முக்தி மண்டபத்தில் நந்தி தேவர், விஷ்ணு, அகத்திய முனிவர் உபதேசம் பெற்றனர். சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்தால் அது லட்சம் மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை. இங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது.
இத்தலத்தில் திருப்புகழ் நாயகன் சுப்பிரமணியர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு, கையில் வில்லேந்தி மயில் பின் நிற்க வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். வில்லேந்தி காட்சி அருள்வதால் வில்லேந்திய வேலர் என்றும் அழைக்கப்படுகிறார். வேலனின் அழகு திருக்காட்சி ராம பிரானை நினைவுபடுத்தும். உற்சவரும் மூலவரை போன்றே காட்சி அருள்கின்றார். அம்பாள் சந்நிதி செல்லும் வழியில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தண்டபாணி தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் காவடி எடுப்பர்.
திருவிழா:
மகா சிவராத்திரி, ஆடிப்பூரம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
கல்வியில் சிறந்து விளங்க, கைலாயம் சென்ற பலன் கிடைக்க, எம பயம் போக, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, தர்மம் தழைக்க, வீடு, பேறு பெற
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 4-8.30
வீடு, பேறு அருளும் தஞ்சாவூர் திருவையாறு ஐயாறப்பர் மற்றும் சுப்பிரமணியரை வேண்டி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 933 கைலாயம் சென்ற பலன் கிடைக்க அருளும் தஞ்சாவூர் திருவையாறு ஐயாறப்பர் கோவில் சுப்பிரமணியர்
படம் 2 - 933 வீடு, பேறு அருளும் தஞ்சாவூர் திருவையாறு ஐயாறப்பர்
Comments
Post a Comment