கோவில் 932 - தஞ்சாவூர் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-932 [திருப்புகழ் தலம்]
2023 அரூத்ரா தரிசன நன்னாளில் தம்பதியரை காக்கும் தஞ்சாவூர் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
27.12.2023 புதன்
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் [TM015361]
திருப்புகழ் தலம்
பெரும்புலியூர்-613203
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: தஞ்சாவூர் 16 கிமீ, திருவையாறு 4 கிமீ, தில்லைஸ்தானம் 2 கிமீ
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், புலியூர்நாதர்
அம்மன்: சவுந்திரநாயகி, அழகம்மை
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: காவிரி, காவிரி, கோவில் தீர்த்தம்
புராண பெயர்கள்: திருப்பெரும்புலியூர்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரிலிருந்து 16 கிமீ தொலைவில் பெரும்புலியூர் திருத்தலத்தில் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர், சிவகாமி அம்பாளை தரிசனம் செய்வதற்கு சமம் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில், கல்லால் வடிக்கப்பட்ட நடராஜர் அருள்கின்றார்.
திருவையாறுக்கு வடமேற்கே 4 கிமீ தொலைவிலும், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருத்தலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில்அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53-வது தலமாகும். புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் வியாக்ரபுரீஸ்வரருக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபட்டால் எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
ஈசனின் திருநடனத்தை தில்லையில் (பெரும்பாற்றப்புலியூர், சிதம்பரம்) வழிபட்ட வியாக்ரபாதர், அப்படியே மற்ற எட்டுப் புலியூர்களிலும் நடராஜரின் வெவ்வேறு தாண்டவங்களை தரிசித்தார். அவை திருப்பாதிரிப்புலியூர், எருக்காத்தம்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர், சிறுபுலியூர், அத்திப்புலியூர், தப்பாளம்புலியூர் மற்றும் பெரும்புலியூர் ஆகும். இப்படிப்பட்ட சிறப்பான பெரும்புலியூரில் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் ஈசனின் தாண்டவத்தை தரிசித்த தலமானதால் இறைவனுக்கு வியாக்ரபுரீஸ்வரர் என்று திருப்பெயர் வந்தது. சில பக்தர்கள் ஐந்து புலியூர் தலங்கள் என்றும் சொல்வதுண்டு. இரண்டிலும் பெரும்புலியூர் உண்டு.
இத்தல முருகப்பெருமானை போற்றி அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். வியாக்ரபாதர் நடராஜர் பக்தராததால் “சதங்கை மணி” என்று தொடங்கும் இத்தல திருப்புகழில் அருணகிரிநாதர் முருகப்பெருமானை ‘சிதமபர குமார’ என்று போற்றுகின்றார். மேலும் பாடலை “பெரும்புலியூர் வாழ்பொற் பெருமாளே” என்று முடிக்கின்றார்.
தல வரலாறு:
சிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர் புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார். இவர் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானின் ஆனந்த தாண்டவ தரிசனத்தை பதஞ்சலி முனிவருடன் கண்டு வழிபட்டு, பெரும்புலியூர் உட்பட பிற புலியூர் தலங்களிலும் ஈசனின் வெவ்வேறு தாண்டவங்களை பார்த்து வழிபட்டதாக வரலாறு.
தல அமைப்பு:
மிகவும் பழமையான கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முகப்பில், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. பலிபீடம் தாண்டியதும் அலங்கார மண்டபமும், அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன. அடுத்து அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் தாமரைப் பீடத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் அருள்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் இறைவி சவுந்திரநாயகியின் சதுர பீடத்தில் நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். சவுந்திரநாயகி நான்கு திருக்கரங்களில், மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ஜெபமாலையும் ஏந்தியும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடனும், மற்றொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சியருள்கின்றார். துர்க்கையாகவும் அருள்கின்றார். தனியாக துர்க்கை ஆலயத்தில் இல்லை. மேலும் விநாயகர், நடராஜர், உமா மூர்த்தி, சோமாஸ்கந்தர், நால்வர், சூரியன், சந்திரன், வராஹி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் [எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி) உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்கின்றனர்.
திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் ஒரு முகம், நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
தம்பதியரை காக்க, வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, வேண்டியவை கிடைக்க, குடும்பம் சிறக்க
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 5-8
வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அருளும் தஞ்சாவூர் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர், முருகப்பெருமானை மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 932 அரூத்ரா தரிசன நன்னாளில் தம்பதியரை காக்கும் தஞ்சாவூர் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
படம் 2 - 932 வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அருளும் தஞ்சாவூர் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர், சவுந்திரநாயகி
Comments
Post a Comment