கோவில் 906 - ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்திதினேஸ்வரர் கோவில் முருகன்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-906 [திருப்புகழ் தலம்]
தீவினைகள் போக்கும் ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்திதினேஸ்வரர் கோவில் முருகன்
1.12.2023 வெள்ளி
அருள்மிகு ஆதிரத்திதினேஸ்வரர் திருக்கோவில் [TM035936]
திருப்புகழ் தலம்
திருவாடானை-623407
ராமநாதபுரம் மாவட்டம்
இருப்பிடம்: தேவக்கோட்டை 25 கிமீ, மதுரை 97 கிமீ
மூலவர்: ஆதிரத்திதினேஸ்வரர், திருஆடானை நாதர், அஜகஜேஸ்வரர்
அம்மன்: சிநேகவல்லி, அம்பாயிரவல்லி, அன்பாயி அம்மை
திருப்புகழ் நாயகர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, க்ஷிரகுண்டம்
புராணப்பெயர்: ஆடானை, திரு ஆடானை, அஜகபுரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1)
தலமகிமை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை திருத்தலத்தில் தீவினைகள் போக்கும் ஆதிரத்திதினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவன் ஆதிரத்திதினேஸ்வரராகவும், இறைவி சிநேகவல்லியாகவும் அருள்புரியும் இக்கோவில் தேவக்கோட்டையிலிருந்து 25 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 97 தொலைவிலும் உள்ளது. பாண்டிய நாட்டுத் தேவார தலங்கள் பதினான்கில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இத்தலப் பெருமானை பாடி பரவியுள்ளார். பிருகு முனிவர், அகத்தியர், மார்க்கண்டேயர், காமதேனு வழிபட்ட தலம் இது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலில் “ஊன், ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்” எனத் தொடங்கி “ஆடானை நித்தம் உறை ...... பெருமாளே” என்று சிறப்பித்துள்ளார். அருணகிரிநாதப் பெருமான் இத்தலத்தில் தனி திருப்புகழ் பாடியதோடு, தனது ஷேத்திரக்கோவில் திருப்புகழிலும் போற்றி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்ற பின் அதை எப்படி உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க,” நீ திருவாடனைக்கு வா. சொல்லித் தருகிறேன் என்றார். அர்ஜுனன் இத்தலத்து இறைவனை வழிபட்டு தெரிந்துக் கொண்டார். அதற்கு நன்றியாக சோம்மஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தார்.
ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசம் மிக்கவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவன் சூரியனின் ஒளியை நந்தி மூலம் இழக்கச் செய்தார். அத்ற்கு பரிகாரமாக, சூரியன் சிவபெருமானை நீலமணி ரத்தினங்களால் ஆன மேடையில் வைத்து வழிபட்டதாக நம்பப்படுகிறது, எனவே இறைவனுக்கு ஆதி ரத்தினேஸ்வரர் என்று பெயர் வந்தது. சூரிய பகவானுக்கு பூஜை செய்யும் சிவாலயங்களில் இதுவும் ஒன்று.
ஆதிரத்திதினேஸ்வரரை வழிபட்டால் முன் செய்த தீவினைகள் நீங்கும். சிநேகவல்லி அம்மனுக்கு சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது. இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத் தலமாகும். வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை கோவிலில் நாடி ஜோதிடம் செய்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.
தல வரலாறு:
ஒரு சமயம், வருணனின் மகன் வாருணி, துர்வாச முனிவர் சாபத்தால் ஆட்டுத் தலையும், ஆனையின் (யானை) உடலும் இணைந்த உருவம் பெற்றான். தனது சாபம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் நீல ரத்தினத்தால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, தன் ஆடு-ஆனை இணந்த வடிவம் நீங்கப் பெற்றான். எனவே இத்தலத்திற்கு அஜகபுரம் என்ற பெயரும் உண்டு.
தல அமைப்பு:
ஒன்பது நிலைகள், 130 அடி உயர ராஜகோபுரம் இருப்பது சிறப்பு. கருவறையில் மூலவர் ஆதிரத்திதினேஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் சிநேகவல்லியும் கிழக்கு நோக்கி அருள்கின்றார். உச்சி காலத்தில் ஆதிரத்தினேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்தால், இறைவன் நீல நிறத்தில் காட்சி அளிப்பார். மேலும் விநாயகர், சூரியன், 63 நாயன்மார், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஸ்வநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், சந்திரன் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.
இக்கோவிலில் மூலவர் ஆதிரத்திதினேஸ்வரர் சந்நிதிக்குப் பின்னால், 5 அடி உயர கம்பீரமான முருகன் தனி சந்நிதியில் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன், மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் 4 கால வழிபாடு நடக்கின்றது. மாதக் கார்த்திகையில் சிறப்பு வழிபாடும், கந்த சஷ்டி பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கோபுர வாயிலில் தண்டபாணி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மாதக் கார்த்திகை தோறும் தண்டபாணி தெய்வத்திற்கு பழனிப் பாதயாத்திரைக் குழுவினர் சிறப்பு அபிஷேகம் நடத்துகின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம் வசந்த விழா (10 நாள்), ஆடிப்பூரம் (15 நாள்), நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம் பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
தீவினைகள் போக்க, புத்திர பாக்கியம், சுக்கிர திசை, புத்தி பரிகாரம் செய்ய, நாடி ஜாதகம் பரிகாரம் செய்ய, கடன் தீர
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4.30-8.30
சுக்கிர திசை, புத்தி பரிகாரம் தரும் ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்திதினேஸ்வரர், சிநேகவல்லி, முருகனை போற்றி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment