905 - திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் கோவில் முருகன்

🙏🏻🙏🏻                                                                                                                      

தினம் ஒரு முருகன் ஆலயம்-905 [திருப்புகழ் தலம்] 

பாவங்கள் போக்கும் திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் கோவில் முருகன்

30.11.2023 வியாழன்


அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோவில் [TM037902]

திருப்புகழ் தலம் 

பாபநாசம்-627425 

திருநெல்வேலி மாவட்டம் 

இருப்பிடம்: திருநெல்வேலி 50 கிமீ, அம்பாசமுத்திரம் 11 கிமீ 


மூலவர்: பாபநாசநாதர், பாபவிநாசர்

அம்மன்: உலகம்மை, விமலை, உலகநாயகி  

திருப்புகழ் நாயகர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்: களாமரம்

தீர்த்தம்: தாமிரபரணி, பாபநாச தீர்த்தம்

புராணப்பெயர்: பொதிகைமலை, பொதியமலை, இந்திர கீழ ஷேத்திரம்  

பாடியவர்கள்: அருணகிரிநாதர் (2) 


தலமகிமை:

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரிலிருந்து 50 கிமீ தொலைவில் பாபநாசம் திருத்தலத்தில் அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளிய, பாவங்கள் போக்கும் பாபநாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தாமிரபரணி நதிக்கரையின் கிழக்கு முகமாக அழகுற அமைந்துள்ளது. இத்தலம் தன்னை வந்தடைந்தவர்களின் பாவங்களை நாசம் செய்ய வல்லது. எனவே பாவநாசம்/ பாபநாசம் எனப்பெயர் பெற்றது. இவ்வூரின் ஆதிப்ப்பெயர் பொதிகைமலை ஆகும். தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலைச் சாரலின் கீழ் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான இத்திருத்தலம் அம்பாசமுத்திரத்திலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடமாகும். 


அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை அகற்ற வல்லவர் இத்தல மூலவர் பாபநாசநாதர் ஆவார். நவக்கைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியது. எனவே இத்தலம் சூரிய தலம் என்றழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூச நன்னாளில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.   


இக்கோவிலில் அருள்புரிந்து கொண்டிருக்கும் முருகனை போற்றி அருணகிரிநாதர் 2 திருப்புகழ் பாடல்கள் இயற்றியுள்ளார். இத்தலத்தை கல்லாடம் “செப்பு வெப்பு” என்று குறிப்பிடும் அருணகிரிநாதர் “செப்பு வெற்பு” என்றே பாடுகிறார். “மைக்கணிக்”. “வெடித்த வார்குழல்” என்று 2 திருப்புகழ் பாடல்கள் இத்தலத்திற்கு உள்ளன. இவை பொதிகைமலை திருப்புகழ் பாடல்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இக்கோவிலில் திருப்புகழ் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.


குழந்தைகளுக்கு கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ தோஷம் இருந்தால், இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த தலமிது. உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை.   


தல வரலாறு:

பா்வதராஜன் பெற்றெடுத்த புதல்வியாகிய பாா்வதி தேவியைச் சிவபிரான் திருமணஞ் செய்து கொள்ளுங்காலத்து தேவா்களும், முனிவா்களும் மற்றவர்களும் இம்மலையின் அருகே ஒன்று கூடியமையால் பூமியின் வடபுறம் தாழ்ந்து, தென்புறம் உயா்ந்துவிட்டது. அது கண்ட சிவபெருமான், அங்கிருந்த அகத்திய முனிவரை நோக்கி, நீா் தென்பால் உள்ள பொதிகை மலைக்குச் சென்று தங்கினால் பூமி சமமாகி விடும். ஆதலின் தென்திசை நோக்க செல்லுக என்ற கட்டளை இட்டாா். உடனே அகத்தியா், பெருமானே யான் தேவசீரது திருமணக்காட்சியை எவ்வாறு காண்பேன் என்று கேட்க, சிவபிரான் பொதிகை மலைச்சாரலில் உள்ள பாவநாச தலத்தில் சித்திரை மாதப் பிறப்பன்று எமது திருமணக்கோலக் காட்சி கொடுத்தருள்வோம் என்று கூறினாா். அவ்வாறே மகத்துவம் மிகுந்த அகத்தியா் தனது மனைவி உலோபமுத்தரையுடன் பொதிகைமலைக்கு வந்து தங்கியதும், பூமி சமமாயிற்று. இறைவன் திருமணக்கோலக் காட்சியை பாவநாச தலத்திலேயே கண்டு மகிழ்ந்தனா். அன்று தொட்டு சித்திரை மாதப்பிறப்பில் அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளும் வைபவம் நடைபெற்று வருகிறது. அதுவே சித்திரை விசுவாக கொண்டாடப்படுகிறது.


வசந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒற்றை மீன், இரட்டை மீன் வடிவங்கள் காணப்படுவதால், இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இக்கோவில் விக்கிரமசிங்க பாண்டியன் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆன்றோா்கள் கூறுகின்றனா். சுவாமி சந்நிதிக்கு மட்டுமே சண்டிகேஸ்வரா் இருப்பதாலும், சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் கட்டிட அமைப்பில் மாறுபாடுகள் காணப்படுவதாலும், அம்மன் சந்நிதி பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.


தல அமைப்பு:

ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தை அடுத்து நடராஜர் தனி சந்நிதியில் ஆனந்தத் தாண்டவ கோலத்தில் அருள்கின்றார். இவரை புனுகு சபாபதி என்று போற்றுகின்றனர். கருவறையில் மூலவராக பாபநாச சுவாமி சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் உலகம்மை தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். தல விருட்சம் களாமரம் இறைவன் சந்நிதிக்கு பின்னால் உள்ளது. மேலும் விநாயகர், 63 நாயன்மார், முக்களா லிங்கம், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சண்டிகேஸ்வரர், கல்யாண சுந்தரர், சூரியன், ஜுரத்தேவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், அகத்தியர் முதலிய தெய்வங்களும் அருளுகின்றனர். அழகிய சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  


அருணகிரி பெருமான் போற்றி புகழ்ந்த திருப்புகழ் நாயகன் இத்தலத்தில் முருகன் என்ற திருப்பெய்ருடன் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற நிலையில் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.  


திருவிழா:

சித்திரை பிரம்மோற்சவம் (10 நாள்), சித்திரை பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக் காட்சி விழா, தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி 


பிரார்த்தனை:

பாவங்கள் போக்க, குழந்தை தோஷம் நீங்க, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டி, தீர்க்க சுமங்கலி வரம் வேண்டி,


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 5.30-1 மாலை 5.30-8.30 


தீர்க்க சுமங்கலி வரம் தந்தருளும் திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர், உலகநாயகி மற்றும் முருகன் திருவடிப் பற்றை வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 905 பாவங்கள் போக்கும் திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் கோவில் திருப்புகழ் முருகன்


படம் 2 - 905 அல்லல்கள் அகற்றும் திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் கோவில் புனுகு சபாபதி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்