கோவில் 904 - திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-904 [திருப்புகழ் தலம்]

மாமறை முழங்கும் திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

29.11.2023 புதன்


அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோவில் [TM044264]

திருப்புகழ் தலம்

நாங்குநேரி-627108

திருநெல்வேலி மாவட்டம்

இருப்பிடம்: திருநெல்வேலி 32 கிமீ, வள்ளியூர் 16 கிமீ


மூலவர்: திருநாகேஸ்வரர்

அம்மன்: சிவகாமி அம்பாள்

திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்

தேவியர்: வேழமங்கை, வேடமங்கை

புராணப்பெயர்: ஸ்ரீபுருஷமங்கை, ஸ்ரீபுருடமங்கை, வானமாமலை, தோத்தாத்திரி

பாடியவர்கள்: அருணகிரிநாதர் (3)

பழமை: 1500 ஆண்டுகள்


தலமகிமை:

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரிலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள நாங்குநேரியில் (ஆதி பெயர்: ஸ்ரீபுருஷமங்கை/ஸ்ரீபுருடமங்கை) மாமறை முழங்கும் திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் சிவத்தலமான திருநாகேஸ்வரர் திருக்கோவிலில் ஆன்மீகம் மற்றும் கலைகளின் கருவூலமாக ஆடல்வல்லான் எம்பெருமான் ஈசன் திருநாகேஸ்வரராகவும், பக்தர்களின் பக்திக்கு இறங்கும் பார்வதி தேவி சிவகாமி அம்பாளாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு உள்ள சிற்பங்கள் கண்களை கவரும் வகையில் மிகுந்த கலை நுட்பங்களுடன் ஜொலிக்கின்றன. இந்த சிவாலயம் வானமாமலை பெருமாள் கோவிலின் உப கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளம் வற்றாது என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். இத்தலம் ராகு தலம் என்றழைக்கப்படுகிறது.


வானமாமலை, தோத்தாத்திரி என்றும் அழைக்கப்படும் இவ்வூரில் 108 திவ்ய தேசங்களில் 79-வதாகத் திகழும் வானமாமலை பெருமாள் கோவில் திருநாகேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் வானமாமலை பெருமாள் மருகன் முருகவேளைப் போன்று அழகொழுகத் திகழ்கின்றார். இது நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாகும். எட்டு சுயம்பு ஷேத்திரத்தில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் பெருமாளுக்கு நடக்கும் தைல அபிஷேகம் மிகவும் விசேஷம். வழிபடும் பக்தர்களுக்கு தரப்படும் இந்த தைலம், சர்வ ரோக நிவாரணியாகும்.


இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை நோக்கி அருணகிரிநாதர் 3 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இத்தலத்தை அருணகிரியார் தனது “வேனின் மதனைந்து” பாடலில் ஸ்ரீபுருடமங்கை என்றே குறிப்பிடுகின்றார். மேலும் அருணகிரிபெருமான் “ஆடல்மத”, “கார்குழல்” என்று மேலும் 2 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.


ஆருத்ரா தரிசன விழா, சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, திருவாசகம் முற்றோறுதல் விழா, பிரதோஷம் இங்கு விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்ட திருவிழா 10 நாட்கள் கோலாகலத்துடன் நடைபெறுகிறது.


தல வரலாறு:

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக இக்கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இப்பகுதியை ஆட்சி செய்து வந்த நாகர் மன்னரே, இக்கோவிலை காண்போர் வியக்கும் வண்ணம் வடிவமைத்தார்.


தல அமைப்பு:

கோவிலின் தெற்கு வாசல் பிரதான வாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாசல் வழியாகவே பக்தர்கள் சென்று சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டு வருகின்றனர். கோவிலுக்குள் நுழைந்ததும் பழமையை பறைசாற்றும் வகையில் மகா மண்டபமும், வசந்த மண்டபமும் காணப்படுகின்றது. கிழக்கு வாசல் வழியாக வந்தால் கொடிமர மண்டபத்தை காணலாம். கொடிமரத்தின் வடக்கு பக்கம் நவக்கிரகங்களின் சந்நிதி தனியாக அமையப் பெற்றுள்ளது.


கருவறையில் மூலவர் திருநாகேஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அன்னை சிவகாமி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கோவிலில் உட்பிரகாரத்தில் முழுமுதற் கடவுளான விநாயகர் காட்சியருள்கின்றார். ஜுரதேவரும், சண்டிகேஸ்வரரும் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். திருநாகேஸ்வரரை நோக்கியவாறு நந்தியம் பெருமான் எழுந்தருளியுள்ளார். சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, பைரவர், சிவ கணங்கள், துவாரக பாலகர்கள், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.


மற்றொரு கருவறையில் திருப்புகழ் நாயகர் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களுடன், மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் வேழமங்கை, வேடமங்கையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவர் முருகனும் மூலவரைப் போலவே அழகுடன் காட்சியருள்கின்றார். இவரை வழிபடுவதால் கஷ்டங்கள் அகலும். சர்ப்ப தோஷம் நீங்கும். மாத விசாகம், கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

திருவிழா:

ஆனி தேரோட்டம் (10 நாள்), மகா சிவாராத்திரி, திருக்கார்த்திகை, நவராத்திரி, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, விசாகம்.


பிரார்த்தனை:

கஷ்டங்கள் அகல, ராகு, சர்ப்ப தோஷம் நீங்க, பிற தோஷங்கள் நிவாரணம் பெற, திருமணத்தடை அகல


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை


கஷ்டங்கள் அகல அருளும் திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் முருகப்பெருமான் சிரம் தாழ்த்தி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 904 கஷ்டங்கள் அகல அருளும் திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் திருப்புகழ் முருகப்பெருமான்


படம் 2 - 904 மாமறை முழங்கும் திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் மூலவர்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்