கோவில் 903 - கரூர் நெரூர் அக்னீஸ்வரர் கோவில் ஆறுமுகநாதர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-903 [திருப்புகழ் தலம்]

கடன் பிரச்சனைகளை தீர்க்க அருளும் கரூர் நெரூர் அக்னீஸ்வரர் கோவில் ஆறுமுகநாதர்

28.11.2023 செவ்வாய்


அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

திருப்புகழ் தலம்

நெரூர்-639004

கரூர் மாவட்டம்

இருப்பிடம்: கரூர் 11 கிமீ


மூலவர்: அக்னீஸ்வரர்

அம்மன்: சௌந்தரநாயகி

திருப்புகழ் நாயகர்: ஆறுமுகநாதர்

புராணப்பெயர்: நெருவூர், நெருவை

பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1)


தலமகிமை:

கரூர் மாவட்டம் கரூர் மாநகரிலிருந்து வடகிழக்கே 11 கிமீ தொலைவில் உள்ள நெரூர் காவிரி ஆற்றங்கரையில் அரசியலில் வளர்ச்சி அடையவும், அரசியல்வாதிகளின் பிரச்சனைகளை தீர்த்தருளும் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் அக்னீஸ்வரர் வலது பக்கமும், அம்பாள் சௌந்தரநாயகி இடது பக்கமும், முருகபெருமான் இருவருக்கும் நடுவில் சோமாஸ்கந்த வடிவில் இருந்து அருள்வது சிறப்பம்சமாகும். இத்தலத்துக்கருகில் “மானச சஞ்சறரரே” என்ற சிறப்பு மிக்க பாடலை பாடிய சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் அமைந்துள்ளது.


இந்த கோவிலில் சிவனை மனமுருகி வேண்டினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிட்டும், கடன் தொல்லை அகன்று வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்பது ஐதீகம். வாழ்வில் கடன் பிரச்சனைகள் தீர விரும்பும் பக்தர்கள் அக்னீஸ்வரரை வணங்கி பலன்கள் பெற்று திரும்புகின்றனர். அரசியல்வாதிகளின் அத்தனை பிரச்னைகளையும் தீர்த்து, ‘அரசியல் எதிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடச் செய்து, அரசியலில் வளர்ச்சியை மட்டுமே கை நிறைய அள்ளித் தருகிறார் சிவபெருமான்’ என்று சொல்லப்படுகிறது.


இக்கோவிலில் வீற்றிருக்கும் திருப்புகழ் நாயகர் ஆறுமுகநாதரை போற்றி அருணகிரிநாதப் பெருமான் ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “குருவும் அடியவர்” என்று பாடலை தொடங்கி “நெருவை நகருறை திருவுரு அழகிய பெருமாளே” என்று போற்றி மகிழ்கின்றார். அருணகிரிநாதர் திருச்செங்கோட்டுவேலனைப் பாடிப் பரவும் போது “ஆலகலாபடப்பை” என்ற திருப்புகழில் “நெருவை பதிவித்தக….” என்று போற்றுவதும் குறிப்பிடத்தக்கது,


இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மேள வாத்தியம் முழங்க நாதஉற்சவம் நிகழ்த்தப்படுகிறது. அப்போது அக்னீஸ்வரர் இசை கேட்டு ஆனந்த தாண்டவம் ஆடுவதாக கூறப்படுகிறது.


தல வரலாறு:

முன்னொரு காலத்தில் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பின்னர் நாரதரின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காவிரி பாயும் இடமான நெரூரில் முருகன் யாகம் வளர்த்தார். அப்போது அக்னியிலிருந்து தோன்றி சிவபெருமான் ஆசி வழங்கி அந்த தோஷத்தை நீக்கி முருகப்பெருமானை அழைத்து சென்றதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.


சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் சிதிலமடைந்திருப்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் இக்கோவில் திருப்பணி வேலைகள் பெரும் பொருட்செலவில் நடந்து கொண்டிருக்கின்றன. மிகச் சிறந்த சிற்ப வேலைப்படுகளை பாதுகாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


தல அமைப்பு:

அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் அக்னி வடிவமாக, சுயம்பு லிங்கமாக திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இடபுறம் அம்பாள் சௌந்தரநாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். நடுவில் முருகப்பெருமான் தனி சந்நிதியில் அருள்கின்றார். அனைத்து தெய்வங்களும் புதுப்பிக்கப்படுகின்றன,


இக்கோவிலில் அருணகிரிநாதர் போற்றி பாடிய ஆறுமுகநாதர் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் ஆறு முகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் தனி சந்நிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வள்ளி, தெய்வானை இல்லாமல், தனியே அமர்ந்து அருள்கின்றார்.


திருவிழா:

மகா சிவாராத்திரி, ஆடி கடைசி ஞாயிறு, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை


பிரார்த்தனை:

கடன் பிரச்சனைகளை தீர, அரசியலில் வளர்ச்சியடைய, கடன் தொல்லை அகல, வாழ்வில் ஏற்றமடைய, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 4-8


அரசியலில் வளர்ச்சியடைய அருளும் கரூர் நெரூர் அக்னீஸ்வரர் மற்றும் ஆறுமுகப்பெருமானை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 903 கடன் பிரச்சனைகளை தீர்க்க அருளும் கரூர் நெரூர் அக்னீஸ்வரர் கோவில் திருப்புகழ் தலம்


படம் 2 - 903 அரசியலில் வளர்ச்சியடைய அருளும் கரூர் நெரூர் அக்னீஸ்வரர்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்