கோவில் 902 - கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-902 [திருப்புகழ் தலம்]
நண்பர்கள் ஒற்றுமை ஓங்க அருளும் கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி
27.11.2023 திங்கள்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருவெஞ்சமாங்கூடலூர்-639109
கரூர் மாவட்டம்
இருப்பிடம்: கரூர் 19 கிமீ
மூலவர்: கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்
அம்மன்: பண்ணோர் மொழியம்மை, மதுரபாஷினி, விகிர்தநாயகி
உற்சவர்: சோமாஸ்கந்தர்
திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: வில்வம், குடகனாறு
பாடியவர்கள்: சுந்தரர், அருணகிரிநாதர் (1)
தலமகிமை:
கரூர் மாவட்டம் கரூர் மாநகரிலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ள திருவெஞ்சமாங்கூடலூர் திருத்தலம் குடகனாற்றின் கீழ் கரையில் நண்பர்கள் ஒற்றுமை ஓங்க அருளும் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தன் நண்பரும், அடியவருமான சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்த கல்யாண விகிர்தீஸ்வரர் தன் குமாரர்கள் விநாயகர், முருகப்பெருமான் இருவரையும் அடகு வைத்து விகிர்த வடிவில் (எதிர்மறை பொருள்களாக) சுந்தரருக்கு அருளினார் என்கிறது வரலாறு. இந்திரன் அகலிகை சாப நிவர்த்திக்காக பூஜித்த தலமிது.
கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். கொங்கு சிவஸ்தலங்களில் இது 5-வது தலமாகும். மாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானை அருணகிரிநாதர் அழகான திருப்புகழில் பரவியுள்ளார். அவர் “வண்டுபோற் சாரத் தேடி ……….. வெஞ்சமாக் கூடற் பெருமாளே என்று பாடியுள்ளார். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தல வரலாறு:
சுந்தரருக்குச் சிவபெருமான் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலும் ஒன்று. சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை (விநாயகர், முருகப்பெருமான்) ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவி) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.
குடகனாறு மற்றும் சிற்றாறு (தற்போது இது குழகனாறு என்றழைக்கப்பட்டாலும் சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்றுதான் குறிப்பிடுகிறார்) இரண்டும் கூடும் இடத்தில் இருப்பதாலும், வெஞ்சன் என்ற வேடுவ அரசன் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும், இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. சிற்றாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
தல அமைப்பு:
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், சுமார் 17 படிகள் கீழிறங்கி பிரகாரத்தை அடைய வேண்டும். படிக்கட்டுகள் இறங்கியதும் நேர் முன்னால் உள்ள நீண்ட முகப்பு மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளன. உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் நால்வர், அறுபத்துமூவர் அருள்கின்றனர். தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், பஞ்ச லிங்கங்கள் அருள்கின்றனர். கருவறையில் 5 அடி உயர மூலவர் கல்யாண விகிர்தீஸ்வரர் நாகாபாரணத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூலவர் சந்நிதி வாயிற் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அம்பாள் பண்ணோர் மொழியம்மை (மதுரபாஷினி) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அருள்கின்றனர். நடராஜர் தனி சந்நிதியில் அருள்கின்றார்.
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் திருப்புகழ் நாயகன் சுப்பிரமணிய சுவாமி ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவர் முருகப்பெருமான் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் இரு தேவியருடன் கல்யாண கோலத்தில் அருள்பாலிக்கின்றார். கார்த்திகை, கந்த சஷ்டி சிறப்பு திருநாட்களாகும்.
திருவிழா:
மாசி பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகா சிவாராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை
பிரார்த்தனை:
நண்பர்கள் ஒற்றுமை ஓங்க, திருமண தோஷம் நீங்க, புத்திர தோஷம் அகல, பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் பாவங்கள் போக்க, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, துன்பங்கள் தீர, வாழ்வில் ஏற்றமடைய
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணம், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை
திறக்கும் நேரம்
காலை 6-12 மாலை 4-8
வாழ்வில் ஏற்றமடைய அருளும் கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியை தொழுது மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 902 நண்பர்கள் ஒற்றுமை ஓங்க அருளும் கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 902 வாழ்வில் ஏற்றமடைய அருளும் கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர், பண்ணோர் மொழியம்மை
Comments
Post a Comment