கோவில் 901 - திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில் ஆறுமுகப்பெருமான்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-901 [திருப்புகழ் தலம்]

எம பயம் போக்கும், முக்தி தரும் திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில் ஆறுமுகப்பெருமான்

26.11.2023 ஞாயிறு


அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்

திருப்புகழ் தலம்

திருவாஞ்சியம்-610110

திருவாரூர் மாவட்டம்

இருப்பிடம்: திருவாரூர் 17 கிமீ, கும்பகோணம் 24 கிமீ


மூலவர்: வாஞ்சிநாத சுவாமி, வாஞ்சிநாதர், வாஞ்சிநாதேஸ்வரர், கந்தாரண்யேஸ்வரர்

அம்மன்: மங்களநாயகி, வாழவந்தநாயகி, மருவார்குழலி

திருப்புகழ் நாயகர்: ஆறுமுகப்பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: சந்தன மரம்

தீர்த்தம்: குப்த கங்கை, எம தீர்த்தம்

பாடியவர்கள்: அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் (1)


தலமகிமை:

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருவாஞ்சியம் எனும் திருத்தலத்தில் முக்தி தந்தருளும் வாஞ்சிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. எமன் வழிபட்ட தலம்; இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் நம்பிக்கைகளாகும். இறைவனுக்கு எமன் வாகனமாக விளங்குகின்றார். எனவே இத்தலத்தில் வழிபடுவோருக்கு எம பயம் இல்லை. எமனும் பைரவரும் இங்கே தவம் இயற்றுகின்றனர். திருமால், திருமகள், பிரமன், பராசரர், சூரியன், அக்னி, அத்திரி பூஜித்த தலமிது.


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரது தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 133-வது தேவாரத் திருத்தலமாகும் (காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70-வது தலம்).


இங்கே வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகவேளை பற்றி அருணகிரிநாதர் தனது ஒரே ஒரு திருப்புகழ் பாடலில் “இபமாந்தர் சக்ர பதிசெறி ………. திருவாஞ்சியத்தில் அமரர்கள் ……. பெருமாளே” என்று போற்றி பாடியுள்ளார்.


காசிக்குச் சமமான ஆறு முக்தித் தலங்களில் திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். மற்ற 5 திருத்தலங்கள் திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவையாறு, திருவாஞ்சியம், திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை ஆகும். எனவே முக்தி தரும் சிறப்புத் தலமாக இக்கோவில் விளங்குகிறது.


இக்கோவிலில் குப்த கங்கை, எம தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. எல்லாத் திருத்தலங்களிலும் திருவிழாவின் முடிவில் தீர்த்தவாரி பெருவிழா நடைபெறும். ஆனால் இத்தலத்தில் மாசிமகம் பிரமோற்சவத்தின் போது 2-ம் நாளன்று தீர்த்தவாரி நடைபெறுவது இத்தல சிறப்பம்சம். கார்த்திகை ஞாயிறன்றும் (இன்று ஞாயிறு) தீர்த்தவாரி நடைபெறுகின்றது.


மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள், பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் வேண்டுபவர்கள், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் (இன்று திருக்கார்த்திகை மற்றும் ஞாயிறு) குப்த கங்கையில் நீராடி, வாஞ்சிநாதரை வணங்கி குறை நீங்கப்பெறலாம்.


கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோவில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் திருவாஞ்சியம் திருக்கோவிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து வாஞ்சிநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடத்தப்படுகின்றது. புரட்டாசி 6-9, பங்குனி 6-9 தேதிகளில் மூலவர் வாஞ்சிநாத சுவாமி மீது சூரிய ஒளி விழுவது சிறப்பு. இந்நிகழ்வு சூரிய பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.


தல வரலாறு:

எமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மன அமைதி இழந்து தவிப்பதை திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி எமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக எமனை நியமித்தார். மேலும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக் கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். இத்தலத்தில் எமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை தரிசனம் செய்தல் மரபு.


தல அமைப்பு:

ராஜகோபுரத்தை அடுத்து கோவிலுக்குள் செல்லும்போது வலது புறத்தில் எமதர்மராஜா சந்நிதி உள்ளது. சந்நிதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் அபயங்கர விநாயகரும், இடது புறம் பாலமுருகனும் உள்ளனர். இடது புறத்தில் அம்மன் மங்களநாயகி (வாழவந்தநாயகி, மருவார்குழலி) வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கொடி பலி பீடம், நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சந்நிதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவரின் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் வாஞ்சிநாத சுவாமி (வாஞ்சிநாதர், வாஞ்சிநாதேஸ்வரர், கந்தாரண்யேஸ்வரர்) சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இடது புறம் நடராஜர் சந்நிதி உள்ளது. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமௌலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்டநாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, கிழக்கு நோக்கிய அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர். அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியோர் அருள்கின்றனர். தெற்கில் எமதர்மன் தனி சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம், ஏந்தி இடக்காலை மடித்து வலக்காலை தொங்க விட்டு பாதக்குறடுடன் காட்சி அருள்கின்றார். சனீஸ்வரர் அருள்கின்றார். நவக்கிரகங்கள் இக்கோவிலில் கிடையாது.


இக்கோவிலில் திருப்புகழ் நாயகன் ஆறுமுகப்பெருமான் (சுப்பிரமணிய சுவாமி) ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மயிலின் முகம் பெருமானின் இடப்புறம் உள்ளதால், இம்மயிலை அசுர மயில் என்பர். உற்சவர் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களுடன் இரு தேவியர் சமேதராக அருள்பாலிக்கின்றார். ஓவ்வொரு கார்த்திகையன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. வருட பிறப்பன்று பக்தர்கள் காவடி எடுத்து வருவர். கந்த சஷ்டி, திருக்கார்த்திகை (இன்று) திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.


திருவிழா:

மாசிமகம் பிரம்மோற்சவம், கார்த்திகை ஞாயிறு, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

எம பயம் நீங்க, முக்தி பெற, பாவங்கள் போக்க, மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி, லக்னம் கொண்டவர்கள், பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் வேண்டுபவர்கள், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை


திறக்கும் நேரம்

காலை 6-12 மாலை 3-8


பாவங்கள் போக்கும் திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் மற்றும் ஆறுமுகப்பெருமானை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 901 பாவங்கள் போக்கும் திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில். திருப்புகழ் ஆறுமுகப்பெருமான் அருளும் தலம்


படம் 2 - 901 எம பயம் போக்கும், முக்தி தரும் திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி, மங்களநாயகி



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்