கோவில் 900 - தஞ்சாவூர் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-900 [திருப்புகழ் தலம்]
பெண்களுக்கான தோஷம் நீக்கும் தஞ்சாவூர் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
25.11.2023 சனி
அருள்மிகு அருணஜடேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருப்பனந்தாள்-612504
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: கும்பகோணம் 20 கிமீ, மயிலாடுதுறை 30 கிமீ
மூலவர்: அருணஜடேஸ்வரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்
அம்மன்: பிரஹன்நாயகி (பெரியநாயகி)
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: பனைமரம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்
புராணப்பெயர்: தாடகையீச்சரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1)
முருகா சரணம்! குருவருளும் திருவருளும் எப்போதும் முன் நிற்கும். (1 முதல் இன்று வரை) முருகன் கோவில்கள் Dr K. Muthukumaran Blogger https://muthukumaranbami.blogspot.com/ அனைவரும் படித்து அருள் பெற்றிடுவோம்.
தலமகிமை:
கும்பகோணத்திலிருந்து 20 கிமீ அல்லது மயிலாடுதுறையிலிருந்து 30 கிமீ பிரயாணம் செய்தால் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் திருத்தலத்தில் குறிப்பாக பெண்களுக்கு தோஷ நிவாரணம் அருளும் அருணஜடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் பெற்ற 39-வது சிவஸ்தலம் என்பது சிறப்பம்சம். குமரகுருபர சுவாமிகள் நிறுவிய காசி மடம் இங்குதான் உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம். தருமபுரம் ஆதின திருக்கோவில்களில் இதுவும் ஒன்று.
தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி மாலை சாத்தும்போது ஆடை நெகிழ இறைவன் தனது திருமுடியை சாய்த்து மாலையை ஏற்றருளினார் என்பதுவும் பின்னர் குங்கிலியக்கலய நாயனார் அந்நிலையை மாற்றினார் என்கிறது புராணம். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கின்றார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிகள் விழுகின்றன.
அருணகிரிநாதர் இங்கு வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானை தனது திருப்புகழில் “கொந்தார் மைக்குழலி ……… கந்தா மிக்க பனந்தாள் உற்றருள் பெருமாளே” என்று போற்றி பாடியுள்ளார்.
திருமால், பிரம்மன், இந்திரன், ஐராவதம், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், நாகக்கன்னிகை, அகத்தியர், குங்குலியக்கலிய நாயனார் ஆகியோர் வழிபட்ட தலம் இதுவாகும். இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால், திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். இவ்வாலயம் திருமணத்தடை குழந்தை இன்மைக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
தல வரலாறு:
தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள்தோறும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது, இறைவனே குணிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் பெருமான் தலை சாய்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போதைய மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனாரி இவ்வாலயம் வந்தபோது, ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி, ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறு முனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும். இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. தடாகைக்காக தலை சாய்ந்ததும், குங்கிலியக்கலய நாயனாருக்காக தலை நிமிர்ந்ததும் இவ்வாலயத்தில் சிற்ப வடிவில் உள்ளது.
தல அமைப்பு:
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மூன்று பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகள் கொண்டுள்ளது. திருக்கோவில் மூலவர் அருணஜடேஸ்வரர் (செஞ்சடையப்பர்), அம்பாள் (பெரியநாயகி) திருமணக் கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்கள். விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருப்பெயருடன் அருள்கின்றார். மேலும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஊர்த்தாண்டவர், நாகக்கன்னிகை நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்கின்றனர்.
இத்தலத்தில் திருப்புகழ் நாயகன் அழகிய முருகப்பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் அருகில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் ஒரு முருகப்பெருமான், முத்துக்குமார சுவாமி என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானையுடன் மயில் அருகில் இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
சித்திரை பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி,
பிரார்த்தனை:
சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், குறிப்பாக பெண்களுக்கான தோஷம் நிவர்த்தியடைய, திருமணத்தடை அகல, குழந்தையின்மை பிரச்சினை தீர
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை
திறக்கும் நேரம்
காலை 6-12 மாலை 5.30-9.30
திருமணத்தடை அகல அருளும் தஞ்சாவூர் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment