கோவில் 839 - ஈரோடு பவானி பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-839
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ஈரோடு பவானி பழனியாண்டவர் கோவில்
25.9.2023 திங்கள்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM010225]
பவானி-638301
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: பவானி பழைய பேருந்து நிலையம் 200 மீ
மூலவர்: பழனியாண்டவர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஈரோடு மாவட்டம் பவானி நகரம் மையப்பகுதியில் பவானி அஞ்சல் நிலையம் அருகில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகிலும், பவானி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 200 மீ தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான் பழனியாண்டவராக, தண்டாயுதபாணியாக அருள்புரிகின்றார்.
இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் வாஸ்து பூஜையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் பழனியாண்டவருக்கு நடைபெறும். தைப்பூச திருவிழாவையொட்டி இக்கோவிலில் இருந்து பவானியில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூசத்தன்று வள்ளி, தெய்வானை உடனமர் பழனியாண்டவருக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் பவானி நகரில் முக்கிய வீதி வழியாக திரு உலா வருகிறது. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தல வரலாறு:
இந்து அறநிலைய கட்டுபாட்டிம் கீழ் வரும் இக்கோவில் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.
தல அமைப்பு:
நுழைவாயில் வலப்புறம் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்கின்றார். இடப்புறம் ஐயப்பன் வீற்றிருந்து அருள்கின்றார். அடுத்து அழகிய கொடிமரம் உள்ளது. கருவறையில் மூலவர் பழனியாண்டவர் கிழக்கு நோக்கி கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பழனி தண்டாயுதபாணி போல ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரம் வலப்புறம் பொன்னம்பலவாணரும் இடப்புறம் சிவகாமி அம்பாளும் திருக்காட்சி அருள்கின்றனர். மேலும் வீரமுத்துக்குமாரசாமி, பிரம்மா, இடும்பன், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர் உள்ளிட்ட தெய்வங்களும் தனித் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை
பிரார்த்தனை:
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் வேண்டி, செல்வம் பெருக, ஞானம் மேம்பட, பிணிகள் தீர, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
செல்வம் பெருக அருளும் ஈரோடு பவானி பழனியாண்டவரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 839 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ஈரோடு பவானி பழனியாண்டவர் கோவில் உற்சவர்
Comments
Post a Comment