கோவில் 784 - ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-784

சந்தான பாக்கியமளிக்கும் ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன் கோவில்

1.8.2023 செவ்வாய்


அருள்மிகு நாகமலை முருகன் திருக்கோவில்

நம்பியூர் சாலை

எலத்தூர்-638454

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: ஈரோடு 58 கிமீ, நம்பியூர் 7 கிமீ


மூலவர்: நாகமலை முருகன்

பழமை: 400 வருடங்கள்


தலமகிமை:

ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து 58 கிமீ தொலைவில் நம்பியூர் சாலையில் அமைந்துள்ள எலத்தூர் கிராமத்தில் உள்ள குன்று ஒன்றில் மிகவும் சக்தி வாய்ந்த நாகமலை முருகன் கோவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடுவோருக்கு எல்லா நலன்களும் கிடைக்கின்றன என்பது நம்பிக்கை. கோவிலுக்கு மலையறும் வழியில் வற்றாத சுனை இருப்பது சிறப்பம்சமாகும். நீரின் நடுவில் வேல் ஒன்று நடப்பட்டுள்ளது. இந்த சுனை நீர் முருகப்பெருமான் அபிஷேகத்திற்கும், கோவிலின் பிற பயன்பாட்டிற்கும் பயன்படுகின்றது.


இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறும் இந்த திருநாளில் சுமார் இருபதாயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கந்த சஷ்டியின் போது பக்தர்கள் விரதம் இருந்து பலன் பெறுகின்றனர். வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி திருநாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். திருமணம் ஆகாதவர்கள் 6 வளர்பிறை சஷ்டி விரதமிருந்து நாகமலை முருகபெருமானை வழிபட்டால் திருமணத்தடை அகன்று, உடனே திருமணம் நடப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம். குழந்தைப்பேறு இல்லாதவர்களும் விரதமிருந்து கந்தனை வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும்.


தல வரலாறு:

இக்கோவில் 400 வருடங்கள் பழமையான என்பது செவி வழி செய்தி. முன்னொரு சமயம், முருகனை வழிபடும் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் வருடங்கள் கிட்டவில்லை. ஒரு நாள் அவர்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி “உங்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும். எனவே இவ்விடத்தில் எனக்கு கோவில் எழுப்பு” என்று சொல்லி மறைந்து விட்டார். இறைவன் வரமளித்தப் படியே அத்தம்பதிக்கு சந்தான பாக்கியம் கிட்டியது. இவ்விடல் நாகமலை முருகன் கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

குன்றின் மீது ஏறுவதற்கு முன் முதலில் கீழே இருக்கும் மயில் மற்றும் விநாயகரை வழிபடுகின்றனர். அருகில் இரண்டு நாகர்கள் உள்ளன. அடுத்து கருப்பராய சுவாமி தனி சந்நிதியில் அருள்கின்றார். பின்னர் 400 அடி உயர குன்றில் சுமார் 770 படிக்கட்டுகள் ஏற வேண்டும். வழியில் சிறிய முருகன் சிலை, மற்றும் மயில் உள்ளனர். அடுத்து உச்சி மகா கணபதி தனி சந்நிதியில் அருள்கின்றார். கோவிலில் நுழைந்தவுடன் சிவபெருமான் நந்தி முன்னிற்க அருள்வது சிறப்பம்சம். அடுத்து வேல், மயில், பலிப்பீடம் உள்ளன. திருக்கோவில் கருவறை வாசலில் இருபக்கமும் விநாயகர், ஆறுமுகன் வீற்றிருந்து அருள்கின்றனர். கருவறையில் மூலவராக நாகமலை முருகன் நின்ற நிலையில் சிறிய கீர்த்தியுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பின் பக்கம் விநாயகர், 2 நாகர் குடிஉஅமர்ந்து அருள்கின்றனர். சுற்றி ஆறுபடை வீட்டு முருகப்பெருமான் சிற்பங்கள் உள்ளன. பழைய படிக்கட்டுகள் அருகில் பாறையைக் குடைந்து ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பமாக கோவில் கொண்டு அருள்கின்றார்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி


பிரார்த்தனை:

திருமணத்தடை அகல, சந்தான பாக்கியம் வேண்டி, எல்லா நலமும் பெற, வாழ்வு சிறக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திருமணத்தடை அகற்றும் ஈரோடு எலத்தூர் நாகமலை முருகனை தொழுது எல்லா நலமும் பெற்றிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 784 சந்தான பாக்கியமளிக்கும் ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன்


படம் 2 - 784 திருமணத்தடை அகற்றும் ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்