கோவில் 747 - இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தி கோவில்

🙏🏻🙏🏻                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-747

மன நிம்மதி தந்தருளும் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தி கோவில்

25.6.2023 ஞாயிறு


அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவில்

சுதுமலை (Suthumalai)

யாழ்ப்பாணம் மாவட்டம் (Jafina)

இலங்கை (Sri Lanka)

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 6 கிமீ


மூலவர்: முருகமூர்த்தி

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 6 கிமீ தூரத்தில் மன நிம்மதி தந்தருளும் சுதுமலை முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை சாலையில் சென்று தாவடி-மானிப்பாய் வீதி திரும்பி 1 கீமீ தூரம் போய் இக்கோவிலை அடையலாம். கோவிலில் மூலவராக முருகமூர்த்தி அருள்பாலிக்கின்றார். ஆலயத்தின் வடக்குப் பகுதியில் சிறப்பு பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயமும், புவனேஸ்வரி அம்பாள் கோவிலும், கண்ணகை அம்மன் களைதீர்த்த இடமென கருதப்படும் தங்குசங்களையம், கிழக்குப் பக்கத்தில் புட்டி வைரவர் (பைரவர்) ஆலயமும் அமைந்துள்ளன.


முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 6-ம் நாள் மாலை மாம்பழத் திருவிழாவும் 9-ம் நாள் காலை தேரோட்டமும், 10-நாள் காலை தீர்த்தவாரி உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாட்டுப்பொங்கல் தினத்தன்றும் கோ பூஜை மிக சிறப்பாக நடைபெறுகின்றது. கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

1800-ம் ஆண்டில் சிறியதாக கட்டப்பட்ட இக்கோவில் மீண்டும் கட்டி 1883-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அச்சமயத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவத்தின் போது முருகமூர்த்தி சுவாமியும் திரு உலா வந்ததாக அறிய முடிகிறது. மீண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு 6.6.1985-ல் மக கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 1987ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இக்கோவில் பலத்த சேதத்திற்குள்ளானது. மீண்டும் 1988-ம் ஆண்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது. 1999-ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதிதாக வசந்தமண்டபம், வாகனசாலை, உள்வீதி கொட்டகை என்பன அமைக்கப்பெற்றன.


தல அமைப்பு:

கோவிலுக்கு செல்ல தென்மேற்கு பக்கத்தில் வாகனசாலை அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலில் ஸ்தம்பமண்டபம், நயனமண்டபம், மகாமண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளன. ஸ்தம்பமண்டபத்தில் மயில், பலிபீடம் ஸ்தம்பம் (கொடிமரம்), ஸ்தம்ப விநாயகர் ஆகியவை அமைந்துள்ளன. கருவறையில் மூலவர் முருகமூர்த்தி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வடக்கே வசந்த மண்டபமும், அதன் கிழக்கே யாகசாலையும் பைரவர் சந்நிதியும், மணிக்கூட்டுகோபுரமும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தில் நித்தியபூசையாக காலை மாலை என இருவேளை நடைபெறுகின்றது. மாசிமாத புரணையன்று (பௌர்ணமி) தீர்த்ததிருவிழா நடைபெறும். திருவிழா 10 நாட்கள் கொண்ட மகோற்சவ திருவிழா நடைபெறுகின்றது.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கிருத்திகை, மாசி பௌர்ணமி 10 நாள் மகோற்சவம், பொங்கல், மாட்டுப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடிப்பூரம், ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, நவராத்திரி, தீபாவளி


பிரார்த்தனை:

மன நிம்மதி பெற, எண்ணியது ஈடேற, தீவினைகள் நீங்க, ஒற்றுமை ஓங்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


எண்ணியது ஈடேற அருளும் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தியை மனக்கண்ணால் தரிசித்து பயன் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 747 மன நிம்மதி தந்தருளும் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தி


படம் 2 - 747 எண்ணியது ஈடேற அருளும் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தி
 

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்