கோவில் 718 - தூத்துக்குடி மாவட்டம் குருமலை அழகு வடிவேல் முருகன் கோவில்

🙏🏻🙏🏻                                                                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-718

வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் தூத்துக்குடி மாவட்டம் குருமலை அழகு வடிவேல் முருகன் கோவில்

27.5.2023 சனி


அருள்மிகு குருமலை அழகு வடிவேல் முருகன் திருக்கோவில்

முடுக்கலான்குளம் ரோடு

ஊத்துப்பட்டி-628720

கோவில்பட்டி வட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

இருப்பிடம்: கோவில்பட்டி 12 கிமீ

செல்: 9600779642

Google Map: https://goo.gl/maps/RrKbofHpK2ptPXL28


மூலவர்: அழகு வடிவேல் முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை

தீர்த்தம்: சரவணப்பொய்கை

பழமை: 60 ஆண்டுகள்


தலமகிமை:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கோவில்பட்டி நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள முடுக்கலான்குளம் அருகில் உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள குருமலையில் வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் அழகு வடிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அழகு வடிவேல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். கோவில் உள்ள குருமலையில் மயில், பாம்பு மான், காட்டுப் பன்றி என பல்வகையான மிருகங்கள் உள்ளன. கோவிலை சுற்றி மயில்கள் நடனமாடுவது சிறப்பு. பாம்புகள் அதிகமிருந்து அவை யாரையும் கடிப்பதில்லை என்பது அதிசய செய்தியாகும்.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்துக்கு உட்பட்டது குருமலை பஞ்சாயத்து. இந்த அழகான கிராமத்தை ஒட்டி வட திசையில் நீண்டு காணப்படுவதுதான் குருமலை. ஊத்துப்பட்டி என்கிற ஊரில் ஆரம்பிக்கும் இந்தக் குருமலை, கொப்பம் பட்டி என்கிற ஊரில் முடிகிறது. காப்பு காடு (Reserve Forest). இந்த மலையின் நீளம் சுமார் 12 கிமீ ஆகும். கோவில்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார மக்களைப் பொறுத்தவரை குருமலை என்பது ஓர் ஆன்மிக மலை. இந்த மலையை இறை அம்சம் கொண்டதாகவே பாவிக்கிறார்கள். குருமலையின் உயர்வைச் சொல்ல, 'குருமலைக்கு மறு மலை இல்லை' என்று உள்ளூர்க்காரர்கள் பழமொழி சொல் கிறார்கள். ஊத்துப்பட்டி குருமலை ஏறும் வழியில் சிறப்பு மிக்க குருமலை பொய்யா மொழி அய்யனார் கோவில் உள்ளது. குருமலை உச்சியில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது சிறப்பாகும். மேலும் தம்பிரான் சித்தர் எனும் மகான் கோவிலும் உள்ளடு.

கோவிலுக்கருகில் என்றும் சரவணப்பொய்கை தீர்த்தம் இருப்பது சிறப்பம்சமாகும். மூலிகைகள் நிறைந்த இந்த தீர்த்தம்தான் கோவில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இத்தீர்த்தம் என்றுமே வற்றாமல் வருடம் முழுவதும் இருப்பது சிறப்பம்சம்.


இக்கோவிலில் தைப்பூசம் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனாக செலுத்திகின்றனர். செவ்வாய், வெள்ளி திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. முருகப்பெருமானை நன்கு வேண்டிக்கொண்டு 7 வாரம் தொடர்ந்து இறைவனை வழிபாட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சுமார் 60 வருடங்களுக்கு முன் மலையாண்டி சாமி என்ற ஆகச் சிறந்த பக்தர் கனவில் முருகப்பெருமான் தோன்றி மலையில் தனக்கு ஒரு கோவிலை அமைக்குமாறு கூறினார். தகப்பன்சாமியின் அருளாசியுடன் அவரும் அவர் மகன் உத்தண்ட சுவாமியும் சரவணப்பொய்கை தீர்த்தம் அருகில் ஓலைகளிலான சிறிய முருகன் கோவிலை கட்டினர். தற்போது பக்தர்களின் காணிக்கையுடன் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.


தல அமைப்பு:

கோவில் கோபுரம் வழியே நுழைந்தவுடன் மயில், விளக்குத் தூண், பலிபீடம் உள்ளன. கருவறையில் புற்றின் கீழ் மூலவராக அழகு வடிவேல் முருகன் முருகன் நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்பாலிக்கின்றார். கருவறை வாயிலில் விநாயகர், முருகன் அருளுகின்றனர். மேலும் விநாயகர், சிவன், பார்வதி, கருப்பசாமி, புற்று நாகராஜன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

வேண்டிய வரங்களை அளிக்க, குழந்தை பாக்கியம் வேண்டி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நோய்கள் தீர


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அலகு குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 8 முதல் இரவு 9 வரை


குழந்தை பாக்கியம் அருளும் வழங்கும் தூத்துக்குடி மாவட்டம் குருமலை அழகு வடிவேல் முருகனை முப்பொழுதும் வணங்கி மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 718 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் தூத்துக்குடி மாவட்டம் குருமலை அழகு வடிவேல் முருகன் தேவியருடன்


படம் 2 - 718 குழந்தை பாக்கியம் அருளும் வழங்கும் தூத்துக்குடி மாவட்டம் குருமலை அழகு வடிவேல் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்