கோவில் 715 - புதுச்சேரி வில்லியனூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-715
புத்துணர்ச்சி உண்டாக்கும் புதுச்சேரி வில்லியனூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
24.5.2023 புதன்
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
வில்லியனூர்-605110
புதுச்சேரி மாநிலம்
இருப்பிடம்: புதுச்சேரி 9 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: ஆறுமுக சுவாமி வள்ளி, தெய்வானை
தலமகிமை:
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மாநகரிலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள வில்லியனூரில் புத்துணர்ச்சி உண்டாக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஊரின் நடுவில் நடுநாயகமாக உள்ள இக்கோவிலில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் இருந்து 1 கிமீ தொலைவில் புகழ் பெற்ற திருக்காமேஸ்வரர் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
கோவிலின் ஆரம்பத்தில் சக்தி மிக்க வேல்தான் முதலில் இருந்து வந்தது. இக்கோவிலில் வேல் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவசுப்பிரமணிய சுவாமியின் அருளும், சக்தி மிகுந்த வேலின் மகிமையும் பக்தர்களின் குறைகளை போக்கி, அவர்களுக்கு நல்வாழ்வும் சுபநிகழ்வுகளும் கிடைக்கின்றன. தினமும் அன்னதானம் நடப்பது இக்கோவிலின் சிறப்பு. பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. முருகப்பெருமானின் மற்ற விசேஷங்களும் சிறப்பாக நடக்கின்றன.
தல வரலாறு:
இக்கோவிலில் முதலில் வேல் வழிபாடுதான் நடந்து வந்தது. பின்னர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலை வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றழைக்கப்படுகின்றது.
தல அமைப்பு:
கோவிலின் இரண்டு பக்கமும் தோரண நுழைவு வாயில்கள் உள்ளன. கோவில் சுவர் மேல் அழகிய தெய்வ சிற்பங்கள் உள்ளன. சிவபெருமான் மடியில் பாலமுருகன் சிற்பமும், மலேசிய முருகனை போல் அழகிய முருகன் சிற்பமும் அருள்பாலிப்பது சிறப்பு. ஆலயத்தின் நுழைவு வாயிலில் பெரிய வேல் ஒன்று உள்ளது. பலிபீடமும், மயிலும் அருகில் உள்ளன. உயர்ந்த கருவறை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு பின்புறமும் வேல் ஒன்று அமையப் பெற்றுள்ளது.
பிரகார சுற்று மண்டபத்தின் சுவர்களில் முருகப்பெருமானின் திருக்கோலங்கள் சிலா ரூபத்தில் அமையப் பெற்றுள்ளன. மேலும் விநாயகப்பெருமான், பாலமுருகன், ஐயப்பன், சப்த கன்னியர், மகாலட்சுமி, சோமாஸ்கந்தர், பிரதோஷ விநாயகர் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி உற்சவராக அருள்புரிகிறார்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம். சதுர்த்தி
பிரார்த்தனை:
புத்துணர்ச்சி கிடைக்க, நல்வாழ்வு பெற, சுப நிகழ்வு நடைபெற, திருமணத்தடை அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
சுப நிகழ்வுகள் நடைபெற அருளும் புதுச்சேரி வில்லியனூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்கள் பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 715 புத்துணர்ச்சி உண்டாக்கும் புதுச்சேரி வில்லியனூர் சிவசுப்ரமணிய சுவாமி
படம் 2 - 715 சுப நிகழ்வுகள் நடைபெற அருளும் புதுச்சேரி வில்லியனூர் சிவசுப்ரமணிய சுவாமி
Comments
Post a Comment