கோவில் 689 - சேலம் கிச்சிபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-689

தொழில் பிரச்னைகளை தீர்க்கும் சேலம் கிச்சிபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

28.4.2023 வெள்ளி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கிச்சிபாளையம்

சேலம்-636015

இருப்பிடம்: சேலம் நகர பேருந்து நிலையம் 750 மீ

செல்: மோகன்ராஜ் குருக்கள் 97888 82330


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சேலம் மாநகரில் சேலம் நகர பேருந்து நிலையம் மிக அருகாமையில் (750 மீ தூரம்) கிச்சிபாளையம் பகுதியில் சகல துயரங்களையும் தீர்த்து அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மூலவராக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடனிருக்க அருள்பாலிக்கின்றார். கோவில் வளாகத்துக்கு அருகில் சின்ன மாரியம்மன் கோவில் குகை மாரி அம்மன் கோவில், ராஜகணபதி கோவில், பெருமாள் கோவில், சிவபெருமான் கோவில் இருப்பது சிறப்பம்சம்.


கிச்சிபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடபடுகின்றது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதமிருந்து தினசரி நடக்கும் ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகளில் கலந்து கொள்கின்றனர். 6-ம் நாள் சூரசம்ஹார நிகழ்வு விமரிசையாக நடக்கிறது. 7-ம் நாள் வெகு சிறப்பாக நடைபெறும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நிகழ்வில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமான் திருவருள் பெற்று செல்கின்றனர். திருமணம் பாக்கியம் வேண்டுவோருக்கு உடனடியாக திருமணமும், குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கின்றன. இக்கோவில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் திருத்தலமாகவும் திகழ்கின்றது.


பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலின் சிறப்பம்சமாக பிரதி செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் ஓரையில் மாலை 7 மணியளவில் சத்ரு திரிசதி சம்ஹார பூஜை மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை அகலும். தொழில் கஷ்டங்கள் தீரும். தோஷங்கள் நிவர்த்தியடையும். உடல் நலன் உண்டாகும். வேண்டியவை நிறைவேறும்.


கோவிலில் வீற்றிருக்கும் வேதபுரீஸ்வரருக்கு பிரதோஷ பூஜைகள், ஐப்பசி அன்னாபிஷேகம், மற்றைய திருவிழாக்கள் சிறப்பாக நடக்கின்றன. ஐயப்பனுக்கு கார்த்திகை, மார்கழியில் விசேஷ பூஜைகள், மண்டல பூஜை, மகர பூஜை விமரிசையாக நடைபெறும். அம்மனுக்கு ஆடிப்பூரம், நவராத்திரி, விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, ராகு கால பூஜை, நவக்கிரக பூஜைகள், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி என அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடக்கின்றன.



தல வரலாறு:

மிகவும் பழமையான கோவில் மிக சிறிய அளவில் இருந்து, பக்தர்கள் வழிபட்டு வந்தனர், 1980-களில் சேலம் பகுதி செல்வந்தர்கள், புரவலர்கள், முருக பக்தர்கள், பல் வேறு சமூகத்தினர் இணைந்து இக்கோவிலை பெரிய அளவில் புனரமைத்து 21.08.1985-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. 15 ஆண்டுகள் கழித்து கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு 17.2.2000-ல் மீண்டும் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.


தல அமைப்பு:

வடக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம் வழியாக நுழைந்தவுடன், உள் பிரகாரம் நுழையும் முன்னர் மேற்கு நோக்கி அதிகார மயில், பலிபீடம், வேல் ஆகியவை உள்ளன. எதிரில் உள்ள கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அழகுற காட்சி தந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரேயும் முருகப்பெருமானுக்கு பிடித்தமான வேல், மயில், பலிபீடம் உள்ளன. முருகப்பெருமான் கருவறைக்கு வெளியே இடப்பக்கம் வேதபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார், எதிரே நந்தியம் பெருமான் உள்ளார். அருகில் அம்பாள் திரிபுர சுந்தரி தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். கருவறையின் வலப்புறம் ஐயப்பன் பொலிவுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, புவனேஸ்வரி அம்மன், துர்க்கை வீற்றிருந்து அருள்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், பைரவர் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாசிமகம், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, மார்கழி ஐயப்பன் பூஜைகள், ஆடிப்பூரம், தேய்பிறை அஷ்டமி


பிரார்த்தனை:

தொழில் பிரச்னைகள் தீர, எதிரி தொல்லைகள் அகல, திருமண வரம் வேண்டி, குழந்தை பாக்கியம் பெற, சகல நோய்களும் குணமாக, தோஷங்கள் நீங்க, நினைத்தது நடைபெற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், திருக்கல்யாணம், பொருள் காணிக்கை, சத்ரு திரிசதி சம்ஹார பூஜை


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 5.30-8


திருமண வரமளிக்கும் சேலம் கிச்சிபாளையம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வழிபடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 689 தொழில் பிரச்னைகளை தீர்க்கும் சேலம் கிச்சிபாளையம் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 689 திருமண வரமளிக்கும் சேலம் கிச்சிபாளையம் சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்