கோவில் 662 - புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-662
வல்வினை போக்கும் புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில்
1.4.2023 சனி
அருள்மிகு கதிர்வேல் சுவாமி திருக்கோவில்
சுப்பிரமணியம் கோவில் சாலை
கதிர்காமம்
புதுச்சேரி-605009
இருப்பிடம்: புதுச்சேரி பேருந்து நிலையம் 5 கிமீ,
மூலவர்: கதிர்வேல் சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன்
தலமகிமை:
புதுச்சேரி மாநகர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் வல்வினைகள் போக்கும் கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கதிர்வேல் சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். அகத்தியப் பெருமான் தவம் செய்த தலம் இது.
வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் தனது ஆன்மீக பயணத்தில் இறைவன் ஆணைப்படி விழுப்புரம் மாவட்டம் திருஆமாத்தூர் திருத்தலத்தில் கௌமார மடலாயம் அமைத்து இறைப்பணி செய்து வந்த போது, புதுச்சேரி காதிர்காமம் கதிர்வேல் சுவாமி பக்தர்கள் தங்கள் கோவில் வந்து முருகப்பெருமான் மீது பதிகம் பாட விரும்பி கேட்டனர். சுவாமிகள் மறுத்து விட்டார். கதிர்வேல் சுவாமியே ஒரு நாள் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் கனவில் காட்சியருளி தன் கோவிலுக்கு வந்து பாட சொன்னதாக வரலாறு. அதனை மகிழ்வுடன் ஏற்று வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் பதிகம் பாடி அரங்கேற்றிய திருத்தலமிது.
அனைத்து நாட்களுமே கதிர்வேல் சுவாமிக்கு விசேஷ நாட்களாகும். கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காமாட்சி அம்மனிடமிருந்து வேல் வாங்கும் உற்சவம், சூரசம்ஹார நிகழ்வு, வேலவனின் திருக்கல்யாணம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தம். ஏராளமான முருகன் அடியவர்கள் சஷ்டி விரதமிருந்து கலந்து கொள்வர். தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஈசனுக்கு பிரதோஷம் மற்றும் அனைத்து திருவிழாக்கள், விநாயகப்பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, அம்பாளுக்கு வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி என அனைத்து பண்டிகைகளும் வெகு விமரிசையாக நடைபெறும்
கதிர்வேலனை மனமுருகி வழிபட்டால் வல்வினைகள், துன்பங்கள் அகலும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலை, பதவி உயர்வு கிட்டும். திருமணத்தடை அகலும். குழந்தைப்பேறு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் கதிர்காமம் வில்வ வனமாக இருந்தது. அச்சமயத்தில் வில்வலன், வாதாபி எனும் அரக்கர்கள் மனிதர்கள் போல் உருமாறி வனம் வழியாக செல்லும் முனிவர்கள், மனிதர்களை நல்லவர்கள் போல உணவருந்த அழைப்பர். அதனை ஏற்று வருவோருக்கு வில்வலன் வாதாபியை உணவாக மாற்றி விருந்து வைப்பான். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில வில்வலன் வாதாபி என்றழைப்பான். உடனே வாதாபி அவர்கள் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளி வருவான். பின் இருவரும் அவர்கள் உடல்களை உண்பர். அச்சமயம் அகத்திய மாமுனிவர் வில்வ வனம் வந்து சிவனை நோக்கி தவம் இருந்து முருகப்பெருமானையும் வழிபட்டார். அரக்கர்கள் இருவரும் அகத்தியரிடம் தங்கள் லீலைகளை செய்த போது, அகத்தியர் இறைவனை வணங்கி இருவரையும் அழித்ததாக வரலாறு. அவ்விடமே கதிர்காமம் என்றழைக்கப்பட்டு கதிர்வேல் சுவாமி கோவில் எழுப்பப்பட்டதாக செவி வழி செய்தி.
தல அமைப்பு:
அழகிய தோரண வாயில் வழியே நுழைந்தவுடன் கோவில் கோபுரம் முன் கடம்பன் தனி சந்நிதி கொண்டு அருள்கின்றார். கோவில் கோபுரத்தில் ஓம் என்ற மந்திரத்துடன் முருகப்பெருமானின் வேல் இருக்கும் தோற்றம் வரும் பக்தர்களின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது. உள்ளே நுழைந்தவுடன் பலி பீடம், கொடிமரம், மயில் உள்ளன. கோவில் தூண்கள், சுவர் முழுவதும் கந்தக்கடவுளின் பல்வேறு தோற்றங்கள் கோவிலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. முருகப்பெருமானின் கருவறை வாயிலில் அகத்தியர், அருணகிரிநாதர் வீற்றிருந்து அருள்கின்றனர்.
கருவறையில் மூலவராக கதிர்வேல் சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அழகிய தோற்றத்தில் திருக்காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிரதான சுற்றி முருகப்பெருமானின் விஸ்வரூப சிற்பம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. முருகன் பூமி உருண்டையில் நின்ற நிலையில் அவரை சுற்றி 14 கோள்கள் உள்ளன. இக்காட்சி ஈரேழு உலகங்களை நம் முருகப்பெருமான் காக்கும் கடவுளாக தோன்றுகிறார். மேலும் வரசித்தி விநாயகர், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள், நால்வர், வலம்புரி விநாயகர், ஆனந்தநாயகி சமேத சந்திரசேகர் அருள்பாலிக்கின்றனர். கைலாசநாதர் தனி சந்நிதியில் வாசலில் பாலகணபதி, பாலமுருகன் வீற்றிருக்க அருள்பாலிக்கின்றார். மேலும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, காமாட்சி அம்மன், கஜலட்சுமி, சண்முகர், பழனியாண்டவர், சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, வெள்ளி
பிரார்த்தனை:
வல்வினைகள், துன்பங்கள் அகல, வியாபாரம், தொழில் சிறக்க, வேலை, பதவி உயர்வு கிட்ட, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு கிடைக்க, நினைத்தது நிறைவேற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வியாபாரம், தொழில் முன்னேற்றமடைய அருளும் புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தாள் பணிந்து வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 662 வல்வினை போக்கும் புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி
படம் 2 - 662 வியாபாரம், தொழில் முன்னேற்றமடைய அருளும் புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி
Comments
Post a Comment