கோவில் 661 - சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-661

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் வள்ளல் சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.3.2023 வெள்ளி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

ஓட்டேரி

சென்னை-600012

இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 5 கிமீ, கோயம்பேடு 11கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான்

தல விருட்சம்: அரசமரம்


தலமகிமை:

சென்னை மாநகரின் மையப்பகுதியில் சென்னை சென்ட்ரலிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஓட்டேரியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் வள்ளல் என்று போற்றப்படுகிறார்.


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கனவில் இத்தல முருகப்பெருமான் திருக்காட்சி அளித்ததை அடுத்து மறுநாளே இக்கோவிலுக்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து மகிழ்ந்தாக இப்பகுதி பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோவில் மிகப் பெரிய வாரியார் சுவாமிகள் படம் இருப்பது சிறப்பம்சம். கோவில் முழுவதும் முருகப்பெருமானின் திருக்கல்யாணக் காட்சிகள், லீலைகள், தந்தை சிவபெருமானின் திரு லீலை சிற்பங்கள் இருப்பது கண்ணுக்கு அழகு. பதினாறு கால் மண்டபத்தில் அறுபடை வீடு முருகப்பெருமானின் சிற்பங்கள் அழகிய வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள், சுவாமி உலா, 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.


தல வரலாறு:

இப்பகுதி பக்தர்கள், புரவலர்கள் சேர்ந்து இக்கோவிலை கட்டியதாக சொல்கின்றனர்.


தல அமைப்பு:

அழகிய சிறிய கோவில் கருவறையில் மூலவராக எழ் சுப்பிரமணிய சுவாமி எழிலான தோற்றத்தில் வள்ளை, தெய்வானை சமேதராக திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை அருள்கின்றனர். கருவறை முன்னே மயில் மற்றும் பலி பீடம் உள்ளன. அருகில் விநாயகரும், வள்ளி, தெய்வானை சமேத ஆதி சுப்பிரமணியரும் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்கின்றனர். இக்கோவிலின் தல விருட்சம் அரசமரம் ஆகும். மரத்தடியில் அம்மன், நாகர் குடிகொண்டுள்ளனர். இவரை வேண்டிக்கொண்டால் நாக தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் விலகும்.


சிவபெருமான் வைத்தீஸ்வரராக ஒரே சந்நிதியில் தையல்நாயகி அம்மனுடன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அனைத்து வகை நோய்களை குணமாக்கும் சிறப்பு தெய்வமாக திகழ்கின்றார். அருகில் வேம்பு, அரசு மரங்கள் ஒன்றுடன் ஒன்று பிணந்து உள்ளதி சிறப்பு. மேற்கு நோக்கி ஐயப்பனும், கிழக்கு நோக்கி ஆஞ்சநேயரும் அருள்கின்றனர். ஆஞ்சநேயர் கோபுர விமானத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் காட்சி அருள்வது சிறப்பம்சம். ஈசான்ய மூலையில் நவக்கிரகங்கள் அருள்கின்றனர்.

திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், நவராத்திரி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம்


பிரார்த்தனை:

வேண்டும் வரம் நிறைவேற, சந்தான பாக்கியம் உண்டாக, நோய்கள் குணமாக, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கு நேரம்:

காலை 6-11 மாலை 5.30-8.30


சந்தான பாக்கியம் அருளும் சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 661 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் வள்ளல் சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 661 சந்தான பாக்கியம் அருளும் சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமி








Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்