கோவில் 660 - ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-660
இகபர சௌபாக்கியம் அருளும் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகன் கோவில்
30.3.2023 வியாழன்
அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில்
கீழ் வீராணம்-632505
சோளிங்கர் வட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
இருப்பிடம்: காவேரிபாக்கம் 11 கிமீ, சோளிங்கர் 19 கிமீ, ராணிப்பேட்டை 22 கிமீ
செல்: 94869 38786
மூலவர்: சக்திவேல் முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய் நெடுஞ்சாலையில் உள்ள காவரிபாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில் 11-வதி கிமீ-ல் உள்ள கீழ் வீராணத்தில் ஆற்றல் மிகுந்த சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சோளிங்கரிலிருந்து 19 கிமீ, மாவட்ட தலைநகர் ராணிப்பேட்டையிலிருந்து 22 கிமீ பிரயாணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். இத்திருத்தலத்தில் சக்திவேல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார்.
1984-ம் ஆண்டு, மகா பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திரர் சுவாமிகள், பால பெரியவர் ஆகியோர் தங்கள் சீடர்களுடன் கோவிலுக்கு வருகை தந்து மூன்று நாட்கள் முகாமிட்டு, அனைத்து வகையான பூஜைகள் மற்றும் அபிஷேகங்களையும் நடத்தியது சிறப்பு செய்தி.
இக்கோவிலில் அனைத்து மாதங்களிலும் முக்கியமான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம் பெருவிழா பால்குடம், பாலாபிஷேகம், பிற அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள், சுவாமி உலா என வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வாரி வழங்கும் வள்ளலிடமிருந்து நற்பலன்கள் பெற்று செல்கின்றனர்.
தல வரலாறு:
கீழ் வீராணத்தை சேர்ந்த சென்னை தொழிலதிபரும், கொடை வள்ளலுமான ஆகச் சிறந்த முருக பக்தர் குருபாத முதலியார் அவர்களின் சீரிய முயற்சியால் 1974-ல் மிகவும் பழமையான சக்திவேல் முருகன் கோவிலை புனரமைத்து முதலாவது கும்பாபிஷேகம் 23.1.1976-ல் வெகு சிறப்பாக நடைபெற்றது. 2-வது மற்றும் 3-வது கும்பாபிஷேகங்களும் இவரின் தலைமையில் விமரிசையாக நடைபெற்றன. தற்போது இவரது மைந்தர் பைரவ பாபாஜி தனது தந்தையின் நினைவாக சக்திவேல் பீடம் அறக்கட்டளையை ஆரம்பித்து கோவிலை மேலும் மேம்படுத்திக் கொண்டுள்ளார்கள். 4-வது கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருவது சிறப்பம்சம்.
தல அமைப்பு:
அழகிய கட்டமைப்புடன் கூடிய திருக்கோவிலின் கருவறையில் மூலவராக சக்திவேல் முருகன் எழிலான தோற்றத்தில் வேல், சேவற்கொடி ஏந்தி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி அளித்து பக்தர்களுக்கு அள்ளி வழங்கும் பக்தராக அருள்பாலிக்கின்றார். உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான், சிவபெருமான், சக்தி, பெருமாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய அனைத்து தெய்வங்களும் அருளுகின்றனர்.
.
திருவிழா:
தமிழ் வருட பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி பூஜை, அரூத்ரா தரிசனம், தைப்பூசம், பங்குனி உத்திரம், ராம நவமி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம்
பிரார்த்தனை:
இகபர சௌபாக்கியம் வேண்டி, கேட்டதை வழங்க, திருமணப்பேறு, குழந்தை பாக்கியம் வேண்டி, நேர்மறை ஆற்றல் வேண்டி
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், சங்காபிஷேகம், திருக்கல்யாணம், அன்னதானம்
கேட்டதை அள்ளி வழங்கும் வள்ளல் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகனை முப்பொழுதும் வேண்டி பயன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 660 இகபர சௌபாக்கியம் அருளும் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகன்
படம் 2 - 660 கேட்டதை அள்ளி வழங்கும் வள்ளல் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகன்
Comments
Post a Comment