கோவில் 659 - தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-659
அற்புதங்கள் நிறைந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
29.3.2023 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
நெட்டூர்-627854
ஆலங்குளம் வட்டம்
தென்காசி மாவட்டம்
இருப்பிடம்: ஆலங்குளம் 5 கிமீ, தென்காசி 33 கிமீ, திருநெல்வேலி 45 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
சித்தர்: அப்பரானந்த சுவாமிகள்
பழமை: 17-ம் நூற்றாண்டு
தலமகிமை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலங்குளத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அற்புதங்கள் நிறைந்த ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்வதற்கு கருவறையின் முன் அமைந்திருக்கும் அப்பரானந்த சுவாமிகள் ஜீவசமாதியே முக்கிய காரணம் என்பது பக்தர்கள் நம்பிக்கை
அழகிய சூழலில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியிடம் விண்ணப்ப பத்திரம் வைத்து வழிபடுவோருக்கு, முருகப்பெருமான் கேட்ட வரங்களை அள்ளித் தருகின்றார். பரிகாரங்கள் பல செய்தும் திருமணம் நடைபெறாதவர்களுக்கும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும். குழந்தை வரம் கிட்டும். தொழிலில் நஷ்டம் அடைந்தோர் மீண்டு வருவர். நன்கு படித்தும் நீண்ட நாட்கள் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வீடு, நிலம் கிட்டும். தீராத நோய்கள் தீரும். குடும்ப பிரச்னைகள் அகலும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். மறுமணம் நடைபெறும். தோஷங்கள் நீங்கும், மன நிம்மதி உண்டாகும். தங்கள் பிரச்னைகளை எழுதி விண்ணப்பம் வைப்போருக்கு, முருகப்பெருமானின் திருபாதங்களில் பக்தர்களின் விண்ணப்பங்களை வைத்து 48 நாட்கள் பூஜை செய்வர். வேண்டியவை அனைத்தும் உடனே நிறைவேறுகிறன.
கோவில் குருக்கள் தினசரி ஊரில் உள்ள பக்தர்கள் வீட்டில் பால் தானம் பெற்று, அந்தப் பாலையே சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வது இக்கோவிலில் விசேஷம். தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பிரதோஷம், ஆனிப் பூச குரு பூஜை என திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
இக்கோவில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. அப்பரானந்த சுவாமிகள் எனும் மகா சித்தர் தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் பிறந்தார். சிறிய வயதிலேயே விநாயகர், முருகப்பெருமான், ஆரியபெருமாள் சாஸ்தா ஆகியோர் மீது மிகுந்த பக்தி உடையவராக திகழ்ந்தார். திருச்செந்தூர் முருகன் இவருக்கு திருக்காட்சி அருளியதாகவும் கூறுகின்றனர். பின்னர் நெட்டூரில் இறைப்பணி ஆற்றி வந்தார். அவருக்கு இருளகற்றி என்ற பெண்னை மணம் முடித்தனர். சில காலம் கழித்து இருவரும் துறவறம் பூண்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சேவை செய்து வந்தனர். இருவரின் ஜீவசாமதிகளும் இக்கோவிலிலே அமைந்தது சிறப்பம்சம். அப்பரானந்த சுவாமிகள் அதிஷடானம் சுப்பிரமணிய சுவாமி கருவறை வாயிலில் இருப்பது சிறப்பு. காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் இவரது ஜீவசமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அனைத்து கால பூஜைகளும் நடந்து வருகின்றன. இந்த மகானே பக்தர்களுக்கும் முருகப்பெருமானுக்கும் பாலமாக இருந்து அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்ற உதவுகின்றார் என்பது நம்பிக்கை. மனைவி இருளகற்றி அம்மனாக இக்கோவிலில் அருள்புரிந்து வருகிறார்.
தல அமைப்பு:
அழகிய அமைப்புக் கொண்ட இக்கோவிலில் பிரமாண்டாமான கொடிமரம் உள்ளது, கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அழகே உருவாக அருட்கோலம் கொண்டு பக்தர்களின் விண்ணப்பங்களை ஏற்று அருள்பாலிக்கின்றார். கருவறை நுழைவு வாயில் இடப்பக்கம் அப்பரானந்த சுவாமிகள் ஜீவசமாதி சிவலிங்க வடிவிலும், வலப்பக்கம் அழகிய தோற்றத்துடன் உற்சவரும் அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், சிவபெருமான், அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, நாகக்குடையுடன் சித்தர், நாகராஜர், ஆர்யபெருமாள் சாஸ்தா, அய்யனார், தேரடி மாடசுவாமி, இருளகற்றி அம்மன், நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பிரதோஷம், ஆனிப் பூச குரு பூஜை
பிரார்த்தனை:
திருமணம் நடைபெற, குழந்தை வரம் கிட்ட, தொழில் நஷ்டத்தில் இருந்து மீள, வேலை கிடைக்க, வீடு, நிலம் கிட்ட, தீராத நோய்கள் தீர, குடும்ப பிரச்னைகள் அகல, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, மறுமணம் நடைபெற, தோஷங்கள் நீங்க, மன நிம்மதி உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
தொழில் நஷ்டத்தில் இருந்து மீள உதவும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 659 அற்புதங்கள் நிறைந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 659 தொழில் நஷ்டத்தில் இருந்து மீள உதவும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment