கோவில் 658 - திருவண்ணாமலை மாவட்டம் குண்ணகம்பூண்டி சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-658
கோரிக்கைகளை நிறைவேற்றும் திருவண்ணாமலை மாவட்டம் குண்ணகம்பூண்டி சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) கோவில்
28.3.2023 செவ்வாய்
அருள்மிகு சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) திருக்கோவில்
குண்ணகம்பூண்டி-614501
வந்தவாசி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்: வந்தவாசி 26 கிமீ
Ref: தினமலர் 01.11.2013
மூலவர்: சிவசுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
ஆதி பெயர்: சித்தருகாவூர் மதுராபுதூர் (சி.எம்.புதூர்)
தலமகிமை:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து வெடால் செல்லும் வழியில் 26-வது கிமீ-ல் உள்ள குண்ணகம்பூண்டியில் கல் முருகன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் ஆட்சி செய்யும் சிவசுப்பிரமணியர் வழிபடும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுகின்றார்.
பாறை மீது அமைந்த கோவிலுக்கு படி ஏறித்தான் செல்ல வேண்டும். பெருமானை ஏறி செல்லும் படிகளிலும் ஒரு கணக்கு உள்ளது. 4 வேதங்களும், 18 புராணங்களும், பன்னிரு திருமுறைகளும் போற்றும் முருகனை வழிபட்டால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிட்டும். தடைகள், தீவினைகள் அகலும். நவவீரர்கள் துணை இருப்பர் என்று சொல்லும் விதமாக 4, 18, 12, 8, 9 என படிகளுக்கு இடையேவெளிகள் இட்டு அமைத்துள்ளனர். ஒட்டு மொத்தமாக வரும் ஐம்பத்து ஒன்று, 51 சக்தி பீடங்களை குறிக்கின்றது. 5+1=6. 6 முருகப்பெருமானின் சடாக்ஷர மந்திரமான ‘சரவணபவ’ என்பதை உணர்த்துகின்றது.
இங்கு விசேஷமாக ஆடி மாதம் விசாக நட்சத்திரமன்று ஏராளமான பக்தர்கள் வித விதமான காவடிகளுடன் வந்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
தல வரலாறு:
சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் ஒரு சிறந்த முருக பக்தரின் கனவில் மனம், மெய் முழுவதும் முருகப்பெருமானை தொழுத படி நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஒரு கல் இடித்தது. ‘ஆ’ என்று கத்துவதற்கு பதிலாக ‘ஆறுமுகா’ என்று சொன்னார். அடுத்த நொடி கல் இருந்த இடத்தில் கந்தன் திருமுகம் தெரிந்தது. மறு நாள் கனவில் கண்ட கல்லைத் தேடி காடு, மேடு என்று அலைந்தார். வெகு நாட்கள் கழித்து ஒரு நாள் நிஜத்தில் அவரது காலில் ஒரு கல் இடித்தது. கீழே குனிந்து பார்த்தார். அது கல் இல்லை. கல் வடிவில் உறைந்திருக்கும் கந்தன் என்று அறிந்தார். அளவில்லா மகிழ்ச்சி அடைந்து கல் முருகனை வணங்கினார். அந்த இடம்தான் குண்ணகம்பூண்டி.
அதே இடத்தில் கொட்டகை அமைத்து வேலவனை வழிபட்டார். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க கொட்டகை, சிறு கோவிலானது. பின்னர் கல்லாக இருந்த முருகனுக்கு கற்சிலை அமைத்தனர். ஒரு காலத்தில் சித்தர்கள் நிறைந்த ஊர் ஆனதால், அந்த ஊருக்கு சித்தருகாவூர் மதுராபுதூர் (சி.எம்.புதூர்) என்ற பெயரும் உண்டு.
தல அமைப்பு:
படியேறி சென்றவுடன் நேரெதிரே அமைந்துள்ள கருவறையில் வள்ளி, தெய்வான சமேத சிவசுப்பிரமணியர் மணக்கோலத்தில் பொலிவுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் முன் சரவணபவ சக்கரம் உள்ளது. அச்சக்கரத்திற்கு முன்பாக ஆவுடை இல்லா சிவலிங்கம் போல் சிறிய கல் ஒன்று உள்ளது. அதுவே ஆதியில் ஆறுமுகனின் அம்சமாக வழிபடபட்டதாம். முன் மண்டபத்தின் இடப்புறம் விநாயகப்பெருமான் அருளுகின்ரார். வலப்புறம் சிவலிங்கமும், பலாதண்டாயுத பாணியும் அருள்பாலிக்கின்றார். இடும்பன் தனி சந்நிதியில் காவடி சுமந்தபடி காட்சியருள்கிறார்.
திருவிழா:
ஆடி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
கோரிக்கைகள் நிறைவேற, தடைகள், தீவினைகள் அகல, கல்வி, ஞானம் பெருக, செல்வம் சேர
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 8-9 மாலை 5-7 [அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது]
தடைகளை அகற்றி அருளும் திருவண்ணாமலை மாவட்டம் குண்ணகம்பூண்டி சிவசுப்பிரமணியரை (கல் முருகன்) மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 658 கோரிக்கைகளை நிறைவேற்றும் திருவண்ணாமலை மாவட்டம் குண்ணகம்பூண்டி சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) கோவில்
Comments
Post a Comment