கோவில் 296 - கோயம்புத்தூர் மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-296

ஞானத்தை அள்ளி அருளும் ஞானபண்டிதனாக காட்சியளிக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்                                                                                                                                                

31.3.2022 வியாழன்

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்

சொர்ணமலை 

காளாம்பாளையம் 

கோயம்புத்தூர் மாவட்டம் 

இருப்பிடம்: காரமடை-வெள்ளியங்காடு சாலையில் தாயனூர் 12 கிமீ, அங்கிருந்து கோவில் 1.5 கிமீ 


மூலவர்: குழந்தை வேலாயுத சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

பழமை: 1400 ஆண்டுகளுக்கு முன்னர்


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையிலிருந்து 13.5 கிமீ தொலைவில் உள்ள காளாம்பாளையம் சொர்ணமலையில் குடி கொண்டிருக்கும் குழந்தை வேலாயுத சுவாமி, பழனி முருகனைப் போலவே மேற்கு நோக்கி ஞான வடிவமாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


இம்மலையைச் சுற்றியுள்ள வயல்வெளிகள் பசுமையாகவும் செழிப்புடனும் விளங்குகின்றன. தூய காற்றும் அமைதியும் நிலவும் இம்மலையில் ஏராளமான சித்தர்கள் தங்கி தவம் செய்ததாகவும் இன்றளவும் அவர்களுடைய நடமாட்டம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த  தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும், நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. இம்மலையை சுற்றியுள்ள இடங்களிலும் மயில்கள் தோகை விரித்து ஆடுவது கண் கொள்ளாக் காட்சி, ராஜ நாகம் ஒன்று இன்றும் இத்தலத்தை வலம் வருவதாகவும், அதைக் கண்டு தொழுதவர் வாழ்வில் சகல சௌபாக்கியங்கள் பெறுவதாகவும் சொல்கிறார்கள்.


ஞான பண்டிதனாக அருளாட்சி புரியும் முருகனை வணங்கி நின்ற மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம் முதலான முருகப்பெருமானின் திருவிழாக்களில் சிறப்பு பூஜைகள், பஜனை, பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவில் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் கோவை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் போன்ற நகர்ப் பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்..


தல வரலாறு:

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் குருந்தமலை. துய்யமலை. பாசிமலை, தண்டிமலை ஆகிய மலைகளுக்கு நடுவே மணிமுத்தா நதியின் தென்புறம் காளம்பாளையம் என்னும் அழகிய கிராமத்தில் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்  அமைந்துள்ளது. இத்திருத்தலம் சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதற்கு சாட்சி, சிதிலமடையாத பழைய கருவறையாகும். மற்ற பகுதிகள் சீரமைக்கப் பட்டுள்ளது.  


இம்மலை மீது அமைந்துள்ள குழந்தை வேலாயுதசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை நினைவூட்டுகின்றன. அரசு வருவாய்துறை ஆவணங்களில், மலையைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு எல்லைகளாக நான்கு திசைகளிலும் தேர்வீதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பாண்டவர் காலத்து வீடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மலையைச் சுற்றிலும் கிராமங்கள் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.


தல அமைப்பு:

மலைமீது வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் 393 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன. கோவில் கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழனி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழனி முருகன் கோவிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் முதலான தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர். 

  

திருவிழா: 

சித்திரை 1 (தமிழ் புத்தாண்டு), வைகாசி விசாகம்,  கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை, பவுர்ணமி கிரிவலம்  


பிரார்த்தனை:

கல்வி சிறக்க, ஞானம் பெருக, செல்வம் பெருக, புத்திர பாக்கியம் வேண்டி


நேர்த்திக்கடன்:

பால் குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், கிரிவலம் அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 9.30 முதல் மாலை 5.30 வரை


செல்வங்கள் பெருகிட அருளும் குருவுக்கு குருவான  கோயம்புத்தூர் மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமியை வேண்டிப் பணிந்திடுவோம்!                                      

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - ஞானத்தை அள்ளி அருளும் ஞானபண்டிதனாக காட்சியளிக்கும் கோவை மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி



படம் 2 - வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அருளும் தேவியர் சமேத சுப்பிரமணியர் குடியிருக்கும் தலம்   கோவை மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்